தினகரி சொக்கலிங்கம் பதிவு

”தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரான புதுமைப்பித்தன் மகள் என்பதில் பெருமைதான். அதே சமயம், அவருடைய அன்பு வார்த்தைகளை நான் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை.

அப்பா இறக்கும்போது எனக்கு இரண்டரை வயசு… இறப்பதற்கு முன்புகூட அப்பா, அம்மாவிடம் ‘கமலா, கவலைப்படாதே… தைரியத்தைக் கைவிடாதே… மனதைத் தளரவிடாதே… தினகரியை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள். உன் கவலைக்கு அவள்தான் மாற்று மருந்து…” என்று என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

சின்ன வயசில் எனக்கு யாருமே தோழிகள் கிடையாது. புத்தகங்கள்தான் எனக்கு நண்பர்கள். அந்த வயதில் எனக்கு அப்பாவின் கதைகள் புரியவில்லை. இப்போது புரிகின்றன.

ஒரு கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானம் கிடைத்தால், அதில் நாற்பது ரூபாய்க்கு அப்பா புத்தகம் வாங்கிவிடுவார். அப்பாவின் மறைவுக்குப் பிறகு, அவர் சேகரித்த புத்தகங்களை வைத்து எங்கள் வீட்டிலேயே ‘புதுமைப்பித்தன் நூல் நிலையம்’ என்று ஒரு நூலகத்தை அம்மா தொடங்கினார்.

அப்பா நள்ளிரவில்தான் கதைகள் எழுதுவார். பத்திரிகைக்கு அதைக் கொடுப்பதற்கு முன்னால், அம்மாவிடம் படித்துக் காட்டிவிட்டுத்தான் கொடுப்பது வழக்கமாம். அம்மா எந்த இடமாவது புரியவில்லை என்று சொன்னால், அப்பா விளக்கிச் சொல்வாராம்.

அம்மாவும் அப்பாவும் ரிக்ஷாவில் ஏறி ஹோட்டலுக்குப் போவார்களாம். சாப்பிட்ட பிறகு, தாங்கள் சாப்பிட்ட மாதிரி இன்னும் ஒரு பார்சல் அப்பா கட்டச் சொல்வாராம். தங்களை ஏற்றிக்கொண்டு வந்த ரிக்ஷாக்காரரிடம் அந்தப் பார்சலைக் கொடுத்து, ‘ராசா! முதல்ல நீ சாப்பிடு… அப்புறம் வண்டி எடு’ என்பாராம்.

மிச்சமாகும் நாலணா நாணயங்களைக் கூஜாவில் போட்டுச் சேர்த்துவைப்பாராம் அப்பா. அதேபோல, பழைய சட்டைகளைப் பாத்திரக்காரனுக்குப் போட விட மாட்டார். அம்மாவிடம் ‘உன் துணியை என்ன வேணும்னாலும் செய்துக்கோ… என் வஸ்திரத்தில் கை வைக்காதே…’ என்று தன் பழைய ஜிப்பா – வேட்டிகளை எல்லாம் டிரங்குப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைப்பார். தீபாவளி வந்தால், அந்தப் பேட்டையில் இருக்கும் ரிக்ஷாக்காரர்கள் எல்லாம் வீடு தேடி வந்துவிடுவார்கள். ஒவ்வொருவருக்கும் தலைக்கு நாலணாவும் ஒரு வேட்டியோ அல்லது ஜிப்பாவோ கொடுப்பார் அப்பா. அதனால் அப்பா ரோட்டில் நடந்துபோவதைக் கண்டால், உடனே அவரை ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டுத்தான் அடுத்த சவாரி தேடுவார்கள் ரிக்ஷாக்காரர்கள்.”

நன்றி: விகடன்