
புதன்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் அப்புறம் சுள்ளி போல உடைத்த நிமிடமும்
———-
அழகியசிங்கர் அனுப்பி வைத்த நவீன விருட்சம் 125 ஆவது இதழ் இன்று கிடைத்தது. அதில் கண்டராதித்யனின் கவிதை ‘மலைப்பிரதேச மத்தியானங்கள்’ கவிதையில் இறுதி வரிகளான
“மத்தியானம் புதன்கிழமையையும்
புதன்கிழமை மத்தியானத்தையும் விக்கித்துப் பார்ப்பதை மனிதர்களாகிய
நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்” ஐ வாசித்தபோது எனக்கு என்னுடைய ‘ஒரு படிமம் வெல்லும், ஒரு படிமம் கொல்லும்’ தொகுதியில் இருக்கும் இரண்டு கவிதைகள் ஞாபகத்துக்கு வந்தன.
ஒரு கவிதையில் என் புதன் கிழமை நெளிந்து வளைந்து இருக்கிறது:
“வளைந்து நெளிந்த
புதன்கிழமையொன்றில்
சந்தேகக்கேசில் பிடித்துச் செல்லப்படும்
பரட்டைத் தலை கந்தலாடை
மனிதனை
தன் தெருவோர தீர்க்கதரிசியெனக்
கண்டுகொண்டு
தன் கை
பால் சாக்லேட்டை நீட்டுகிறது
குழந்தை
விலங்கிட்டதால் திராட்சைக் கொத்தாய்
குவிந்த கரங்கள் கொண்டு
ஆசீர்வதித்து சிரிக்கிறான் அவன்
யாரைப் பார்த்து சொன்னதென்று
தெரியாமல்
நீ இருப்பதால் நான் இருக்கிறேன் என
யாரோ முனகுகையில்
ஒரு புதன் கிழமை
நிமிர்ந்து நேராகிறது”
இன்னொரு கவிதையில் என் ஞாயிற்றுக்கிழமை செல்லப்பிராணியாய் இருக்கிறது:
“உன் செல்லப்பிராணி
ஞாயிற்றுக்கிழமை
உன் விரல் கோர்த்த சங்கிலியால்
அழைத்து சென்ற
அதிகாலை முதல் அனுபவத்தை
எவை எவை செதுக்கினவென
கணக்கிடுகிறாய்
தொடரும் போர்ச்செய்திகள்
தொடரும் இரு தரப்பு பொய்ப்பிரச்சாரங்கள்
பட்டு பைக்கூட்டில் வைத்த நறுமணப்பொடிகள்
தன் சரங்களை மேலே இழுத்துக்கொண்டதா
மஞ்சள் சரக்கொன்றை
இல்லை இது காற்றின் கோடை காலத் தயக்கமா
இந்தக் காலை நடையில் பழுதுபட்ட
உன் ஆத்மா ஏன் ஒரு முறையேனும்
துயருற்றோரை நோக்கிய
தன்னிச்சையான கருணையின் சொற்களை
எச்சில் கூட்டி விழுங்குவதில்லை
கல் வாழைகள் மட்டுமே ஏன்
துயர் மேவிய நாட்களிலும் தங்கள்
இலைகளை அலங்காரமாய் விரிக்கின்றன
அகண்ட பெருவெளியின் சிறு கீறலும்
சிற்றெறும்பையும் தீண்ட வேண்டமா
எது உன் உள்ளங்கையை உனக்கு
மீட்டுத்தருமெனக் கூட்டிக் கழிக்கிறாய்
சாதனங்களற்ற வெறுங்கையுடன்
வெற்றுப்பார்வையுடன்”
இப்போது நான் கொஞ்சம் முன்னேறிவிட்டதாகத் தெரிகிறது. கிழமைகளிலிருந்து நிமிடத்திற்கு வந்துவிட்டேன். சமீபத்திய கவிதையில் ஒருவர் நிமிடத்தை சுள்ளி போல உடைக்கிறார்;
“ஒரு சுள்ளியை ஒடிப்பது போல
அவர் அந்த நிமிடத்தை உடைத்து
தன் கணுக்காலருகே
தீநாக்கு ஒன்றைக் காட்டுகிறார்
அங்கேயிருந்து என் பின்னாலே
வர ஆரம்பித்திருக்கிறது என
அவர் காட்டிய இடத்தில்
ஒரு பறவையின்
அலகு திறக்க
தொண்டைக்குழி உள் இறங்குகிறது
அங்கே ஆகாயம்
வெட்டுண்ட காயம் போல்
சிவந்திருக்கிறது
அது கர்ப்பபாத்திரமா
வெளிவாசலா என
திகைத்த கணத்தில்
இரண்டும்தான் என முணுமுணுக்க
எல்லாம் மறைந்து
ஆலிலை ஒன்று
கிளை பிரிந்து
மெதுவே விழுகிறது “
—-
