சண்டே ஸ்பெஷல் டாபிக்/ரங்கராஜன் இ.வி

#முதுமை

சென்ற பிப்ரவரி மாதம் எனக்கு 86 நிறைந்து 87 தொடங்கியது.

சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் இத்தனை ஆண்டு காலம் ஜிவித்திருப்பேன் என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பியே இருக்க மாட்டேன். 30 வயது முதல் 64 வயது வரை ஆஸ்த்மா நோயினால் மிகவும் அவதிப்பட்ட சமயங்களில் ‘போதுணாடா சாமி இந்த வாழ்க்கை’ என்று தோன்றும்.

64ம் வயதில் ஒரு கண்டம்.அதிலிருந்து தப்பியது மனைவியின் மாங்கல்ய பலம் மற்றும் அவள் செய்த பூஜாபலன்.இதைப் பற்றி ஏற்கனவே விவரமாக இந்த தளத்தில் எழுதியுள்ளேன்.

கண்டம் தப்பியது மட்டும் இல்லை. அதன் பிறகு ஆஸத்மா நோய் என்னை விட்டு ஓடிப் போய்விட்டது.

58 வயதில் மனைவிக்கு இருதய நோய் (ischemia)வந்தது. அதன் பிறகு அவள் ஆரோக்கியம் குறைந்தாலும் பூஜை புனஸ்காரங்களை விடவில்லை.

இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகி மகனும் அமெரிக்கா சென்ற பிறகு வீட்டில் நாங்கள் இருவர் மட்டும் தான். இரண்டு பெண்களும் அவ்வப்போது குழந்தைகளுடன் வந்து சில நாட்கள் தங்குவார்கள்.

2017ல் மனைவி மறைந்த பிறகு என் பெரிய பெண் தன் குடும்பத்துடன் மாடி அபார்ட்மெண்டில் இருந்தாள். என் தேவைகளை கவனித்துக் கொள்வாள். ஆற்காடு ரோட்டில் மெட்ரோ வேலை தொடங்கியதும் பேரனுக்கு ஆஃபீஸ் செல்வது கஷ்டமாக இருந்ததால் இரண்டு ஆண்டுகள் முன்பு மந்தவெளிக்கு குடும்பத்துடன் சென்று விட்டாள். பிறகு சிறிய பெண் குடும்பத்துடன் ஓராண்டு என்னுடன் வசித்தாள். இப்போது அவளும் சென்று விட்டாள்.

இரு பெண்களும் அவ்வப்போது வந்து செல்கிறார்கள். மகன் அமெரிக்காவிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது வருகிறான்.

பெரும்பாலும் தனிமை தான் வாழ்க்கை. ஐந்து ஆண்டுகள் முன்பு மத்யமரில் இணையும் வரை புத்தகங்கள் தான் என் பொழுதுபோக்கு. ஆன்மீகம், கணிதம், வானவியல் பற்றிய புத்தகங்கள் நிறைய படிப்பேன். மத்யமரில் இணைந்தது புது உற்சாகத்தை அளித்தது. என் பதிவுகள் நல்ல வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி அளித்தது. பதிவுகள் எழுதுவதில் இப்பொழுது சற்று ஆர்வம் குறைந்து இருக்கிறது. மீண்டும் புத்தகங்கள்.

இப்போதும் என் வேலைகளை நானே பார்த்துக்கொள்கிறேன். என் தேவைகள் மிகவும் குறைவு. காலையில் எழுந்ததும் ஃபில்டர் காஃபி பிறகு செய்தித்தாள் மற்றும் செல் போன். எட்டரை மணிக்கு சில உடல் பயிற்சிகள் பிறகு குளித்துவிட்டு பூஜை. சாதம் மட்டும் நான் சமைத்துக் கொள்கிறேன். மற்றவை கேட்டரர் கொண்டு தருகிறார்‌.

உணவு அருந்தியதும் மீண்டும் செல்ஃபோன். நெருங்கிய உறவுகள் மற்றும் நட்புகளுடன் உரையாடல். மதியம் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் ஒரு கப் காஃபி. மாலையில் அரை மணி நேரம் வீட்டுக்குள்ளேயே வாக்கிங்.

ஒரு கண்ணில் பார்வை குறைபாட்டால் (macular degeneration) நடக்கும்போது மேடு பள்ளங்கள் தெரியாது. அதனால் துணை இன்றி எங்கும் வெளியில் செல்வதில்லை.

கடந்த ஆறு மாதங்களில் சுமார் பத்து மத்யமர் நட்புகள் என் வீடு தேடி வந்து என்னுடன் உரையாடியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பிப்ரவரியில் நடந்த ஆனுவல் மீட்டில் பல நட்புகளை சந்தித்துப் பேசினேன்.

இரவில் சிறிதளவு ரசம் அல்லது மோர் சாதம் மட்டும் சாப்பிடுகிறேன். படுக்கும் போது ஒரு டம்ளர் பால்.

வயதானதால் சில உபத்திரவங்கள் இருந்தாலும் அதற்கு வேண்டிய மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறேன்.

அனைவரிடமும் அன்பு பாராட்டுகிறேன். விரோதி என்று யாரும் இல்லை.எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. யாரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதும் இல்லை. எங்கும் செல்ல வேண்டும் என்ற ஆசையும் இல்லை. முடிந்தவரை தான தர்மங்கள் செய்கிறேன் . இறைவனிடம் ஒரே வேண்டுகோள், கடைசி வரை நடமாடும் படி வைத்துவிடு என்று.

படித்ததற்கு நன்றி.