
தவலை போட்ட குட்டி!
ஒரு சமயம் ஒரு பெரியவர் ஒரு கருமானிடமிருந்து ஒரு தவலையைக் கடனாக வாங்கினார். பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கும்போது ஒரு தட்டை அதோடு வைத்துக் கொடுத்தார்.
“தட்டு ஏது?” என்று கேட்டான் கருமான்.
“தவலை குட்டி போட்டது?”
கருமான் மிக்க மகிழ்ச்சியுடன் தவலையையும், தட்டையும் வாங்கிக் கொண்டு சென்றான்.
சில நாட்கள் சென்றதும் பெரியவர் மீண்டும் அந்த தவலையை இரவலாக வாங்கினார். ஆனால் பல நாட்களாகியும் அதை அவர் திருப்பிக் கொடுக்கவே
யில்லை.
ஒரு நாள் கருமான் அவரிடம் சென்று, “என்தவலை எங்கே?” என்று கேட்டான்.
”உன் தவலை இறந்துவிட்டது!” என்றார் பெரியவர்.
“எங்காவது தவலை இறக்குமா?” என்று கேட்டான் கருமான்.
“தவலை குட்டிப் போடும்போது அது இறக்காதா?” என்று கேட்டார்
பெரியவர்.
எந்தக் காரணத்தினால் நமக்கு லாபம் ஏற்படுகிறதோ, அதே காரணத்தினால் நமக்கு நஷ்டமும் ஏற்படக்கூடும் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். “தவலை எங்காவது குட்டி போடுமா? இந்தத் தட்டு எனக்கு வேண் டாம்” என்று கருமான் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாமல் அவன் அந்தத் தட்டை வாங்கிக் கொண்டதால், பின்னர் அந்தப் பெரியவர் “தவலை இறந்து விட்டது” என்று சொல்ல முடிந்தது.
நமக்கு யாராவது எதிர்பாராத லாபத்தை அவர்களே கொண்டு வந்து கொடுக் கும்போது, அதில் ஏதோ சூது இருக்கிறது என்று எண்ணி நாம் அவர்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்!
