சங்கரராம்/இன்ப உலகம்

பிறந்த நாள் கொண்டாட்டம்

ராமகிருஷ்ணன் பரபரப்புடன் உறையை உடைத்துக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார். பிறகு சேவகனை அனுப்பிவிட்டு, ‘நான் அவசரமாகத் துரை யைப் பார்க்கவேண்டி யிருக்கிறது. போய் வரட்டுமா?”
என்றார்.
“எந்தத் துரை? கெட்ட செய்தி ஒன்றும் இல்லையே?”
”சே, சே! அதெல்லாம் ஒன்றும் இல்லை. எங்கள் இலாகாவுக்கு முதல் அதிகாரி – இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்று சொல்லுவார்கள் – அவர் என்னைக் கண்டு பேச வேணுமாம். ஏதாவது அக்கப்போராக இருக்கும். சில அலுவல்களை
நானே கவனிக்க வேண்டுமென்று சொல்வார்; என்மேல் கொஞ்சம் நம்பிக்கை.”
“அது இல்லாவிட்டால் என்ன பிரயோசனம்? மரியாதைக்கு அதுவே காரணம் ‘ என்றார் கைலாசம்.
“இந்தப் பயல்கள் எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லையே!” என்று சொல்லிக்கொண்டே கிருஷ்ணன் எழுந்தார்.
‘‘ஏன், அவர்கள் இருக்கட்டும் இங்கே. நான் அப்புறம் எங்கள் காரிலே கொண்டுபோய் வீட்டிலே விட்டுவிடச் சொல்கிறேன். எப்பொழுதோ ஒருதடவை வருகிறார்கள்; கொஞ்சம் இருந்துதான் போகட்டுமே” என்றார் கைலாசம். அதன்மேல் ராமகிருஷ்ணன் தம் மனைவியினிடம் தகவல் கொடுத்துவிட்டு, விடை பெற்றுக்கொண்டு போனார்.
ஊரார் எப்படியோ சுந்தரிக்கும் பிரசாதுக்கும் முடிப்பை எதிர்பார்த்தவாறு பேசத் தொடங்கினார்கள். அண்டை வீடுகளிலிருந்து சிறுமிகள், கைலாசத்தின் வீட்டுக்கு அடிக்கடி வந்து,
உல்லாசமாகப் பேசிப் போவது வழக்கம். இப்பொழுது சுந்தரி வந்திருந்தது தெரியவே சிலர் பொழுது போக்க வந்தது போல , உ ள்ளே நுழைந்தனர்
சிவகாமியம்மாளுக்கு அவர்களின் மீது மிக்க பிரியம். அவர்கள் தமாஷாகத் தன்னைக் கேலி செய்து கூத்தடிப்பது அவளுக்குப் பரமானந்தத்தைக் கொடுக்கும். ஆகையினால், அவள் அவர்களை
அன்புடன் வரவேற்றாள்.
“எங்கே ரங்கநாயகியைக் காணோம்?” என்றாள் சிவகாமியம்மாள்.
“அவள் வந்தால்தான் மாமியோடு சரியாய் வாயாடுவாள்'” என்றாள் புஷ்பா என்பவள்.
“அம்மாடி, நீ வாயில்லாப் பூச்சி ஆச்சே! – இவள் பேச ஆரம்பித்தால், எல்லாரையும் ஆகாசத்திலே
பறக்க வைத்துவிடுவாள்” என்று பெருமையோடு கோமதியினிடம் சொன்னாள்.
“அடுத்த மாதம் கல்யாணம் நடக்கிறது. மாப்பிள்ளைப் பையன் கானடாவிலே படித்துக்கொண் டிருக்கிறான்.”
“அது ஒரு ராகம், மாமி” என்றாள் ஒருத்தி.
“ராகத்திலேயே படிக்கிறான், போயேன்.” எல்லோரும் சிரித்தார்கள்.
“எனக்குப் பெண் இல்லை. பெண் குழந்தையென்றால் எனக்கு மிகவும் ஆசை, அம்மா. இந்தப் போக்கிரிப் பெண்களெல்லாரும்
என் பெண்கள்தாம்” என்றாள் சிவகாமியம்மாள் கோமதியைப் பார்த்து.
உடனே புஷ்பா, சிவகாமியம்மாளிடம் போய், காதோடு காதாக எதையோசொன்னாள்.
“என்ன மாமி?” என்று ஆத்திரத்தோடு ஒரு சிறுமி கேட்டபோது “மாமி, சொல்லக்கூடாது, ஆமாம்!” என்று புஷ்பா
ஆள்காட்டி விரலை ஆட்டி, மிரட்டுவதுபோல் சொன்னாள்.
“நான் மாட்டேன், அம்மா. புஷ்பா என் காதைப் பிய்த்துவிடுவாள். அவளைக் கண்டால் எனக்கு
எப்பொழுதும் பயந்தான்” என்றாள் சிவகாமியம்மாள்.
இப்பொழுது சுந்தரியும் வந்து கலந்துகொண்டாள். சிறுமிகள் ஆடைகளைப்பற்றியும்
அவரவர்கள் படித்த பள்ளிகளைப்பற்றியும் பேசிக்கொண்டார்கள்.
புஷ்பா மிகவும் புத்திகூர்மையுள்ளவள்; சுந்தரியோடு நெருங்கிப் பழகி, அவளை ஒவ்வொரு துறையிலும் எடை போட்டுக்கொண்டிருந்தாள். பத்தாவது பரீட்சையில் சுந்தரி தேர்ச்சி பெற்றிருந்ததோடு சரி;
பாடல் ஆடல் ஒன்றும் வராதென்று புஷ்பா தெரிந்துகொண்டாள்.
“நீங்கள் தையல் மிஷின் வைத்திருக்கிறீர்களா?” என்று புஷ்பா, சுந்தரியைக் கேட்டாள்.
”ஊம், அந்தத் தலைவலி எதற்கு? என் சிநேகிதி ஒருத்தி தெரியாமல் வாங்கிவிட்டு, அது வீட்டிலே தூங்குகிறது. இந்த மாதிரி பைத்தியக்கார வேலை எங்கள் வீட்டிலே வைத்துக்கொள்ள
மாட்டார்கள். எப்படிச் சொன்னாலும் தையற்காரன் தைத்துக் கொடுக்கிறான். அதை விட்டுவிட்டு, ஏன் கஷ்டப்பட வேண்டும்? ஆனால், ஒரு சினிமா, டிராமா நாங்கள் தவறமாட்டோம். எங்கள் அப்பா அஸிஸ்டெண்டு போலீஸ் கமிஷனர் அல்லவா? எதற்கும் ‘ரிஸர்வ்டு’ டிக்கெட்டுகள் வந்துவிடும்.”
“துட்டு இல்லாமல்தானே?” என்றாள்.
“மரியாதைக்குக் ] கொடுத்தால், துட்டுக் கேட்பார்களா?” என்றாள் சுந்தரி.
“பின்னே என்ன? தினங்கூடப் போகலாம்.”
“சில சமயங்களிலே ஒரு நாளிலே இரண்டு மூன்று இடங்களுக்கு வந்துவிடும். அப்போது வேண்டாததை யாருக்காவது கொடுத்துவிடுவோம்.
அப்பா வரவே மாட்டார். முதலாளியே வந்து கெஞ்சினால், போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டுப் போய்விடுவார்” என்றாள் சுந்தரி பெருமையுடன்.
அவளுடைய சிறப்பெல்லாம் தன் தகப்பனார் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி என்ற ஆதாரத்தின்மேல்
அமைந்தது. அவளுக்கென்று ஒன்றுமே இராதோ என்ற சந்தேகம் புஷ்பாவுக்குப் பிறந்தது.
இந்தத் தருணத்தில் ரங்கநாயகியும் உள்ளே நுழைந்தாள்.
“ஏண்டி கண்ணு, இவ்வளவு நேரம்?” என்றாள் சிவகாமியம்மாள் அன்போடு.
‘“நான் இன்றைக்கு வருகிறதாக எண்ணம் இல்லை, மாமி. வேலை வீட்டிலே நெறிகிறது. என் தங்கச்சி ஓடி வந்து யாரோ புது மனிதர்கள் வந்திருக் கிறார்கள் என்றாள்.
பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தால், உள்ளே நுழையும்போதே சுந்தரி குரல் கேட்டது.”
“சுந்தரியைத் தெரியுமா உனக்கு?” என்று சிவகாமியம்மாள் ஆவலோடு கேட்டாள்.
“நாங்கள் இரண்டு பேரும் ஒரே பள்ளியில் மூன்று வருஷம் படித்தவர்கள் ஆச்சே” என்று சுந்தரியோகுறுக்கிட்டுப் பதில் சொன்னாள்.
‘அப்படியா? நல்ல சிநேகிதியைத்தான் பிடித்தாய்.. தங்கமான பெண். அவர்கள் அம்மா கொஞ்சம் நோயாய்ப் படுத்திருக்கிறார்கள். அவளே எல்லாவற்றை யும் கவனித்துக்கொள்கிறாள்.
ஆனால், குறும்புத்தனமும் கூடவே பிறந்திருக்கிறது.”
” மாமி! மாமி! இது நியாயமா?” என்றாள் ரங்கநாயகி, கஷ்டத்தோடு சிரிப்பை அடக்கிக்கொண்டு..
“இவளுக்குத் துணை – இந்தப் பூனையும் இந்தப்பாலைக் குடிக்குமா என்று உட்கார்ந்திருக்கிறாளே புஷ்பா-”
“மாமி,நாங்கள் இரண்டு பேரும் உங்கள் மேலே டூ’ விடாமல் போனால், ஏனென்று கேளுங்கள்”
‘நான் விட்டால்தானே? என்றாள் புஷ்பா. – இதைக் கேளுங்கள்
கோமதியம்மா. ஒரு நாள் இந்த இருவரும் என்னை இப்படியே உட்கார்த்தி வைத்துவிட்டுத் தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்: ‘இந்தச் சிவப்பு மாமி எப்படிக் கறுப்பு மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டாள்?’
என்று ஒருத்தி சொன்னாள். எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்..
இன்னொருத்தி சொல்கிறாள்: ‘ஐயோ பாவம்! அது அந்தக் காலம். அதுவும் தவிர மாமிக்குப் பன்னிரண்டு வயசுதானே”
“எல்லாம் பொய், பொய்!” என்று புஷ்பா மறுத்தாள்.
“நானா பொய் சொல்கிறேன்? உன் கூட்டாளியைக் கேளேன்” என்று சிவகாமியம்மாள் ரங்கநாயகியைக் காட்டினாள். ஆனால் ஓயாமல் ரங்கநாயகி சிரித்தவாறே இருந்தாள்.
‘இதோ பாருங்கள், மாமி” என்று கோமதியைப் பார்த்துப் புஷ்பா சொன்னாள்; ‘நான் சொன்னது இவ்வளவுதான்: மாமா மேலே மாமிக்கு ரொம்ப ரொம்ப ஆசை. (மறுபடியும் சிரிப்பு ஆரம்பித்தது.) அதனாலேதான்
அவரைக் கல்யாணம் செய்துகொண்டார். இப்போது ராமர் கறுப்பு…”
“இல்லை, நீலமாக்கும்!” என்றாள் ஒருத்தி.
சும்மா இரடி. இரடி. நீலமும் கறுப்பும் ஒன்றுதான்.. சீதை சிவப்பு. ராமர் கறுப்பு. அவள் அவரை அன்போடு கட்டிக்கொள்ளவில்லையா? அப்படி மாமி சீதை, மாமா ராமர் என்று சொன்னால், அதற்குக் குற்றம் சொல்ல வருகிறதைப் பாரேன்” என்றாள் புஷ்பா.
“ஆமாம், ஆமாம். நீ சொல்கிறதிலே பிசகு. இருக்குமாடி, தங்கம்! – இவர்கள் இல்லாமல் போனால். எனக்கும் பொழுது போகாது, கோமதியம்மா” என்றாள் சிவகாமியம்மாள்.
இப்பொழுது, “இந்தப் பெண்கள் என்ன கொட்டம் அடிக்கிறார்கள்?” என்று கேட்டுக்கொண்டே ஹாலில் ஒரு கோடியில் உட்கார்ந்திருந்த கைலாசமும் எழுந்து வந்தார்.

(இன்னும் வரும்)

சங்கரராம்/இன்ப உலகம் – விருட்சம் நாளிதழ்