பஹல்காம் தாக்குதல் கடும் அதிர்ச்சியை தருகிறது. ஆயுதமில்லாத அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்வதென்பது எந்த ஒரு மனசாட்சி உள்ளவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுவும் மதத்தை அடிப்படையாக வைத்து, இந்த படுகொலைகள் நடந்துள்ளது என்கிற போது நம்முடைய கவலை அதிகரிக்கிறது. இதன் பின்விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் போது, வழக்கம் போல் ஒரு சாரார் மட்டும் இந்த தாக்குதலை வைத்து அரசியல் செய்வதில் மும்முரமாக இருக்கின்றனர். தமிழ் செய்தி சானல்பக்கங்களில் வரும் கமெண்ட்களை படியுங்கள். நாம் எவ்வளவு பிளவுபட்டிருக்கிறோம் என்பது புரியும்.
இந்த தாக்குதலுக்காக மத்திய அரசை விமர்சிப்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். உளவுத்துறையின் முழுமையான தோல்வி. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அரசை குறை சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள், இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்திருக்கக் கூட மாட்டார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
இந்த தாக்குதலுக்கு பாஜக தான் காரணம். இந்துக்கள் தான் காரணம். தேர்தலுக்காக நடத்தப்படுகிறது, என்று மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் அள்ளி வீசுகின்றனர். புல்வாமா, பாலக்கோட் தாக்குதலின் போதும் இதே பிரச்சாரம் தான் செய்யப்பட்டது. இது போன்ற பிரச்சாரங்கள் ஏன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்குள் நாம் மதம், சாதி, இனம், மொழி என பிரிந்து கிடந்தாலும், நமக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் இருந்தாலும், நம் நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது, மற்ற அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு, மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்வார்கள். இது நாட்டுக்கு மட்டுமல்ல, மாநிலம், கிராமம், நமது வீடு வரைக்கும் மனிதர்களின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும். என்னதான் வீட்டுக்குள் அடித்துக் கொண்டாலும், நம் வீட்டுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது, அனைத்தையும் மறந்து ஒற்றுமையுடன் பிரச்சினையை எதிர்கொள்வோம்.
அந்த ஒற்றுமை தான் இடதுசாரி, காங்கிரஸ், திமுக உள்ளிட்டவர்களின் பிரச்சினை. மொழியாலும், இனத்தாலும், சாதியாலும் மக்கள் எப்போதும் பிரிந்தே இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு கூட்டத்திற்கு, மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது அவர்களுடைய நோக்கத்திற்கு தடையாக இருக்கும்.
எனவே தான் இது போன்ற சமயங்களில் எதிர் பிரச்சாரங்களில் இறங்குகிறார்கள். மக்களிடையே சந்தேகத்தை விதைக்கிறார்கள்.
அதன் மூலமாக மக்களிடையே ஏற்படும் ஒற்றுமை உணர்வை சிதைக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல தீவிரவாத தாக்குதல் சமயங்களில் பொதுவாகவே மக்களிடையே தேசப்பற்று, தேசிய உணர்வு பெருகும். இது இயல்பாக நடக்கக்கூடிய விஷயம்.
மக்களிடையே தேசிய உணர்வும், தேசப்பற்றும் பெருவதும், இடதுசாரி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பிளவுவாத கும்பலுக்கு பொறுக்காது. ஏனென்றால் அவர்களுடைய பிரிவினைவாத அரசியலுக்கு தேசப்பற்றும், தேசிய உணர்வும் எதிரி. எனவே தங்களுடைய இடைவிடாத பிரச்சாரத்தின் மூலம், தொடர்ச்சியாக மக்கள் மனதில் சந்தேகங்களை விதைப்பதன் மூலம், ஒற்றுமை உணர்வும், தேசிய உணர்வும் வராமல் பார்த்துக் கொள்கின்றனர். புல்வாமா தாக்குதலில் நடந்ததும் இதுதான்.
இதுபோன்ற தாக்குதல்களை பாஜக தன்னுடைய அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. தேசிய உணர்வைத் தூண்டி, அதன் மூலம் மக்களை ஒருங்கிணைக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. தேசிய உணர்வும், தேசப்பற்றும் பாஜகவின் சொத்தா? அதே அரசியலை எதிர்கட்சிகளும் செய்யலாமே. அவர்கள் ஏன் செய்யமுடியவில்லை என்ற கேள்விக்கான பதிலில் தான் இன்றைக்கான அரசியல் இருக்கிறது.
அடுத்ததாக அப்பீஸ்மெண்ட் பாலிடிக்ஸ். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று உலகத்திற்கே தெரியும். அப்படிப்பட்ட சூழலில் எதற்காக இந்த விஷயத்தில் அப்பீஸ்மெண்ட் பாலிடிக்ஸை கையில் எடுக்க வேண்டும். உண்மையில் தங்களை வைத்து அரசியல் செய்யப்படுவதை இஸ்லாமியர்கள் தான் கண்டிக்க வேண்டும். ஆனால் மிகச்சில இஸ்லாமியர்களின் கமெண்ட்கள் மிகுந்த மனவருத்தத்தை தருகிறது. அதற்கு தூபம் போடுவது போல் இடதுசாரி, காங்கிரஸ், திமுக கும்பல் நடந்து கொள்கிறது.
இது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் மக்களின் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிளவுவாத, பிரிவினைவாத அரசியலை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

All reactions:

🥲🥲