தங்கேஸ்/சுமைகள்

விருட்சம் நடத்திய கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் இன்று (18.07 . 2025 ) வாசித்த முதல் கவிதை . நன்றி திரு. அழகிய சிங்கர் சார் அவர்களுக்கு

யாரும் எங்கும்
தனியாக செல்வதில்லை
சில பேரை தோளில்
சுமந்து கொண்டு செல்கிறார்கள்
சில பேரை மனதில் சுமந்து கொண்டு

கொட்டும் மழையிலும்
கொளுத்தும் வெயிலிலும்
குடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு
செல்வது போல்
சில பேர் நினைவுகளை
தூக்கிப் பிடித்துக் கொண்டு
செல்கிறார்கள்

பூவை சுமந்து கொண்டிருக்கும்
கிளையைப் போல் இருந்த வாழ்க்கை
கல்லை சுமந்து கொண்டிருக்கும்
நதியைப் போல் மாறிவிட்டது
இப்போது
அவரவர்க்குரிய சுமையை
அவரவர் சுமக்கிறார்கள்
யார் தான் சிலுவை சுமக்காதவர்கள்
இந்தப் பூமியிலிருக்கிறார்கள் சொல் ?

கல்லை சுமக்க நேர்ந்தால்
நீ ஒரு தேரையாக மாறிவிடு
என்றார் ஞானி

கண்ட கண்ட பூதங்களை சுமப்பதற்கு
என்னை சுமக்க கூடாதா
என்றது குழந்தை

நீ எதையாவது தூக்கி சுமக்கவில்லையென்றால்
வாழ்க்கையே சுமையாக மாறிவிடும்
சாக்கிரதை என்றார்
கடவுள்

சுமைகள் சாக்கிரதை
என்றது காலம்

நாகேந்திர பாரதி/முடியாத வேண்டுதல் – விருட்சம் நாளிதழ்