
விருட்சம் கவிதை வாசிக்கலாம் நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது இரண்டாவது கவிதை
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன்
மனத்து உன்னை
அப்படியே நினைக்கத்தான் முடிகிறதா உன்னை ?
என் பாட்டனின் கை சாந்து இல்லாமலே
யார் யாரோ என்னை அடிமையாக்கி கொள்கிறார்களே ?
ஒரு கோல்கேட் விளம்பரம்
ஒரு யூ ட்யூப் குறும்படம்
ஹார்பிக் விளம்பரம்
ஒரு முநூல் வாட்ஸ் அப்பில்
ஜூரமாய் பரவும் செய்தி
கடன் அட்டை வழங்கும்
கை பேசியின் அலறல்
சரி தான் தப்பித்தால்
எதிரில் வரும் ஒரு இரு சக்கரவாகனக்காரன்
ஒரு காரோட்டி உதிர்க்கும்
அச்சு அசலான கெட்ட வார்த்தைகள்
மட்ட மத்தியான வெய்யிலில்
ஒரு மலிவு விலை மது குடிகாரன் எடுக்கும் சுயரூபம்
பெரிய கோவிலுக்குப் போகும் வழியில்
தோலை உரித்து தொங்கவிடப்பட்டிருக்கும்
இரத்தம் கன்றிப்போன ஆட்டின் முழு உடம்புகள்
கடலை விழிதிறந்து வெறித்தபடி
கிடக்கும் மீன்கள்
இவற்றையும் தாண்டி உன்னை நினைத்தபடி
திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலகம் சென்று
மீண்டு வருவது என்ன சுலபமா?
கொதிக்கும் கொப்பரைக்குள்
உயிரோடு முக்கி எடுக்கப்படும்
பிராய்லர் கோழிகள் தானே
நாங்களெல்லாம் ?
இதயத்திற்கருகில் இருக்கும் சட்டைப்பையில்
துழாவிப்பார்த்த போது பணம் இல்லாதது
ஒரு நிமிடம் இதயமே இல்லாதது போல்
தோற்றம் தர
சகல துன்பங்களுக்கும் சாட்சியாய்
ஒரு பத்துக்கு பத்து அறை
அவ்வப்போது நமது இருப்பை குரைப்பில் உணர்த்தும்
மரியாதைக்குரிய தெருநாய்கள்
இப்பொழுதெல்லாம் சுந்தரர்களே
முதியவர்களாக யார் யாரோடோ வழக்காட
அன்று திருவெண்ணெய்நல்லூர் கோவிலுக்குள் சென்றவன் தான்
இன்னும் திரும்பவேயில்லை

One Comment on “தங்கேஸ்/சுந்தரர்கள்”
Comments are closed.