தங்கேஸ்/நிகரிலி

18 – 9. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 3

ஒரு மாசற்ற புன்னகைக்கு
நான்
உலகத்தையே தந்துவிடுவேன்
ஆனால் அது என்னுடையதில்லை

நீ என்னுடைய பிரத்யேகமான
உலகத்தைக் கேட்டாலும்
காட்டுவதற்கு ஒற்றுமில்லை
வாசலில் பூத்துக் கிடக்கும்
கொத்துமஞ்சள் அரலிப்பூக்களையும்
அதில் தேனெடுக்கும்
கருநீல தேன்சிட்டுகளையும் தவிர

நான்
நிலவைக் காட்டலாம்தான்
ஆனால் நினைக்கும்போதே
அது
மேகத்திற்குள் மறைந்துவிடும்

ஒரு கள்ளமற்ற புன்னகையை
காட்சிப் படுத்தலாமென்றால்
அது ஒளியாண்டுகளுக்கும் அப்பால்
புதையுண்டு கிடக்கிறது

வேண்டுமானால்
அதிகாலைப் பனித்துளியைப் போல
சற்றும் மாசடையாத
எனதிந்த நிகழ்காலத்தை
அப்படியே உன்னிடம் தந்துவிடலாம்

ஆனால் அதுவும்கூட
உன் நினைவால்
புனிதப்படுத்தப்பட்டதுதான்

தங்கேஸ்/சுந்தரர்கள் – விருட்சம் நாளிதழ்

One Comment on “தங்கேஸ்/நிகரிலி”

Comments are closed.