
18 – 7 – 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 10
துயரத்தின் பிரதிநிதியாய்
வந்து நிற்கும் நிலவை
எப்படி விளிப்பாய் சொல் ?
மானுட சமுத்திரத்தின்
அத்தனை கண்ணீரையும்
ஒரு குவளையில் நிரப்பி
பிறைசூடனின் ஆலவாய்க்கு
தந்துவிட்டால்
உயிர்களை வதைக்கும் இருளிலிருந்து
விடுதலை கிடைத்து விடுமா?
சொல்லப்போனால
கடவுளைப் போல தானே
இருக்கிறது நம் மனதும்
தேடும்போது
எட்டாத உயரத்தில்
தனித்து விடப்பட்ட
ஒற்றை இறகாகவும்
பாரம் தாங்காமல்
குடை சாயும் மாட்டு வண்டிபாகவும்
எத்தனை எத்தனை
வடிவங்கள் எடுக்கிறது
கண்காணாத ஒரு வஸ்து
சரி தான்
போக்கற்றவர்களுக்கு
பொழுதுகளே துயரமென்றால்
நாம் எல்லாமே
போக்கற்றவர்கள் தானே
இந்த உலகத்தில் .
