அன்புச்செல்வி சுப்புராஜூ/எனது நான்

விருட்சம் நடத்திய 79 ஆவது கவியரங்கில் எனது முதல் கவிதை

அருகில் வந்து நெருக்குதலும்
தொலைவில் சென்று அலைக்கழிப்பதுமாய்
இருத்தலும், இல்லாததுமாய் இடம் பெயர்கிறது

சூழலின் இயல்புத்தன்மை மறந்து
கலைத்து, மீண்டும் அடுக்கி
தன்னை நிலைநிறுத்த எத்தனிக்கிறது

ஏதோ ஒன்றை அடைய
இலக்கென்ற வரையறையை வகுக்காது
பெரும் பரிணாமம் கொள்கிறது

அடுக்குகளில் மேலேறி உச்சமாகிறது
தடுக்குகளில் தடுமாறி எச்சமாகிறது
இடுக்குகளில் கசியும் ஈரமாகிறது
கொதிக்கும் நெருப்புக் கோளமாகிறது

அகண்டு விரிகிறது
சுருண்டு காணாமல் போகிறது
மருண்டு பின்னும் முயல்கிறது

எனக்குள் ஊடாடும் என்னை
நிலைநிறுத்தும் நங்கூரத்தைத்
தொடர்ந்து தேடும் முயற்சியில்
என்றாவது வெற்றி பெறட்டும்
எனது நான்….!!!

One Comment on “அன்புச்செல்வி சுப்புராஜூ/எனது நான்”

Comments are closed.