
விருட்சம் நடத்திய கவியரங்கில் நான் வாசித்த மூன்றாம் கவிதை
உயிரியல் வனத்தில்
எதையெதையோ தேடிக் களைத்த
ஓய்வறியா மனிதக் கால்கள்
நீள்துன்பக் கடப்பிற்குப் பின்னும்
மிச்சமிருக்கும் பொழுதுகள் எச்சமாய்
துயர்கள் தின்று சலித்துத்
துப்பிய வாழ்வில்
பிய்த்தெறிந்த கனவுகளுடே
நகர்தலென்பதே பெருஞ்சுமையாய்…
எடுத்த எத்தனிப்புகள் அனைத்தும்
எக்களிக்கும் துரோகங்களின் நுழைவாயிலில்
தடுக்கி விழுந்திட
உறைந்த உணர்வுகளின் அழுத்தத்தில்
பாரமாகும் நெஞ்சாங்கூடு
தேற்றவியலாத துயரைத்
துச்சமாக எண்ணித் தூரத் தள்ளியே
அதன் போக்கில் வரைகிறது
காலத்தூரிகை
அநாதித் தனிமையில் கூவும்
ஒற்றைக் குயிலின் ஓசையில்
இழையோடும் சோகம்
எவருக்கும் புரிவதில்லை
அதனாலென்ன?
ஓய்ந்திடாது
புதிதாய் இசைக்கத் தொடங்குகிறது
அந்தப் புல்லாங்குழல்!
