மதுவந்தி/வழியனுப்புதல்

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில், 7 ஆவது கவிதை

முதன்முதலாய்
வீடு விடுத்து,
ஊர்விட்டு,
தோழமை உடனின்றிப் ,
பயணம்.

“பிள்ள வேல கிடச்சு
தலநகர் போறான்.
சந்தோஷமா போவட்டும்.
நீ வந்தா அழாம
இருக்க மாட்ட!!!.
வர வேணாம்.” என
அப்பா சொன்னதையும் மீறி
அம்மா வந்தாள்
ரயில் நிலையத்துக்கு.

அப்பா சொன்னது போலவே
அம்மா விழி ததும்பிய கண்ணீர்.
அப்பா பார்த்து திட்டுமுன்,
அம்மாவைக் கட்டியணைத்து
நடைமேடை ஓரம்
அழைத்துச் சென்றேன்.

துடைத்தபின்பும்
இருதுளி தண்டவாளத்தில்
விழுந்தன.

எல்லோரும் கையசைத்து
ரயில் கிளம்ப,
கண்ணீர்த் துளி சுமந்த
தண்டவாளம் கூடவே
வருவதாக,
அம்மாவின் நினைவோடு
பயணம் தொடங்கினேன்.

மதுவந்தி/சுதந்திரம் – விருட்சம் நாளிதழ்

2 Comments on “மதுவந்தி/வழியனுப்புதல்”

Comments are closed.