அழகியசிங்கர்/ கோணல் கையெழுத்து

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – வெள்ளி அன்று
(19.09.2025) – 5th

                               


    விண்ணப்பத்தாள்
    கையில் பேனா
    பெயர் என்ற இடத்தில்
    பெயரை நிரப்ப
    முகவரி காட்டிய இடம்
    முகவரி தருவிக்க
    வயது குறிக்குமிடத்தில்
    வயது
    சிலகணம் தாமதம்
    வயது கூடிவிட்டதை
    எச்சரிக்கும் கட்டம்
    எதற்காக
    என்ற இடத்தில்
    அதற்காக 
    என்று நிரப்ப
    கையெழுத்து இட்டேன்

    வளைந்து செருக்காய்
    நிமிர்ந்து குறுகிய 
    கோணல் கையெழுத்து
    விசித்திரமாய்ச் சிரித்தது

    நிரப்பிய தாளை
    கையில் வைத்து
    நிரப்பியதைப் படித்தேன்
    திரும்பவும்
    படித்ததைப் படித்....தேன்
    கவர் எடுத்து
    விண்ணப்த் தாளைத் தள்ளி

    ஒரு நிமிடம்

    திரும்பவும் நிரப்பிய தாளை
    எடுத்து     
    நிரப்பியதைப் படித்தேன்....
    எல்லாவற்றையும்

    வெட்டிய பெருக்கல் குறியாய்
    முதலெழுத்துத் தொடர 
    கோணல் கையெழுத்துக்
    கெக்கலிட்டுச் சிரித்தது

    நிரப்பிய தாளை
    உள்ளே தள்ள
    கவரில் முகவரி எழுதி
    ஒட்டினேன்

    பார்க்காத இடத்தில் வைத்து
    வேறு கவனத்தில்

    சில கணங்கள்

    திரும்பவும் ஞாபகம் வர
    கவரை எடுக்க 
    சிரித்தது முகவரி

    சிறிது நேரம் யோசனை

    நிரப்பப்பட்ட தாளில்
    நழுவிய இடமொன்று உண்டென்று

    அவசரமாய்
    அவசரமாய்
    கவரை உடைத்து
    தாளைப் பார்த்தால்
    எல்லாம் சிரித்தன

    இடை குறுகிய வால்போல் நீண்ட
    கோணல் கையெழுத்தும்

அழகியசிங்கர்/அவர் – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/ கோணல் கையெழுத்து”

Comments are closed.