
அப்பாவிற்கு எதுமே நினைவில் இல்லை.
‘கண்ணாடிய இங்க தான வச்சேன்…’ என பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார்.
சாப்பிட்டு முடித்த பின்னரும்,’நான் சாப்பிடவே இல்ல…’ என சத்தியம் செய்வார்.
அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை.
ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை!
‘அப்பா…நீ எங்க போய்யிட்ட?’
அப்பாவுக்கு ஏற்பட்ட நோயை நான் புரிந்து கொள்ளவில்லை.
சென்ற வாரம் கேஸ் சிலிண்டரை ஆன் செய்துவிட்டு அணைக்க மறந்து விட்டார்.
‘ஒழுங்கா இந்த ரூம் உள்ளேயே இரு. இல்லனா எங்கயாவது கொண்டு போய் ஆஸ்ரமத்துல சேத்துடுவேன்…’ என்று திட்டித் தீர்த்தேன்.
‘அப்பா…நான் திட்டினதால கோபப்பட்டு போயிட்டயா? அது மட்டும் உனக்கு ஞாபகம் இருக்கா?’
அப்பா காணாமல் போன மூன்றாவது நாள் அந்த அழைப்பு வந்தது.
‘சார், நீயூ டவுன் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து…’
‘அப்பா கிடைச்சுட்டாரா சார்…?’
‘கிடைச்சுட்டாரு…உடனே வாங்க…’
ஓடினேன்.
தலை தொங்கியபடி ஸ்டேஷனின் மூலையில் உள்ள நாற்காலியில், முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது.
அது அப்பா தான்…அப்பாவே தான்…
‘அப்ப்ப்பாபாபா…’ என்றேன்.
தலை நிமிர்ந்து என்னைப் பார்த்த அவர், குழந்தையைப் போல சிரித்தார்.
‘அப்பா…என்ன தனியா விட்டுட்டு எங்கே போய்யிட்ட? என் மேல கோபமாப்பா?’ என்றேன்.
‘யார் சார் நீங்க?’ என்றார்.
–

நெகிழ்ச்சி. அப்பா என்னும் குழந்தை.