
காலை பரபரப்பாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா.அவள் கணவன் ராம் தூங்கிக் கொண்டிருந்தான் இவள் சமைத்து, இரண்டு குழந்தைகளைப் பள்ளிக்குக் காலை உணவு கொடுத்து, லஞ்ச் பாக்ஸுடன் கிளப்பி அனுப்பி விட்டு கணவனுக்கும் , தனக்கும் லஞ்ச் கட்டிக் தானும் ரெடியாகிப் போகவேண்டும். வேலை செய்யும் அம்மா வராததால் தானே பாத்திரமும் தேய்த்துச் சமைக்க வேண்டியிருந்தது.
இவள் குக்கர் விசில் வரும் தருணம் அவன் எழுந்து வந்தான்.காலைச் சிற்றுண்டி செய்தாலும் பவித்ராவுக்கு சாப்பிட நேரமிருக்காது என்பதால் கஞ்சி கலந்து குடித்து விட்டுக் கிளம்புவாள்.அவள் கணவன் தாமதமாகத் தான் கிளம்புவான்.இவள் தந்த பெட் காபியைக் குடித்து விட்டு, மொபைலைத் தடவ ஆரம்பித்தவனிடம் பவித்ரா,”ஏங்க இந்தக் கஞ்சியைக் கொஞ்சம் ஆத்திக் குடுங்க.நேரம் ஆகுது”, என்றாள் தலையைப் பின்னிய படியே.
“நான் கொஞ்ச நேரம் சும்மா உட்கார்ந்திருக்கக் கூடாதே உனக்கு “, சலித்துக் கொண்டான் ராம்.
தானே ரெண்டு ஆத்து ஆத்திக் குடித்து விட்டு இவள் கிளம்பிச் செல்ல எத்தனிக்கும் போது ,குளிக்கப் போன அவன் இவளை , கம்பிக் கதவை உள் பக்கமாக தாழ் போட்டு விட்டுக் கிளம்பச் சொன்னான்.இரண்டாம் மாடியிலிருந்து கீழே இறங்கியவள், ஹெல்மெட்டை வைத்து விட்டுப் போனதால் மேலேறி வந்தபோது, குளியலறையில் இருந்த அவனது போன் பெட்ரூமில் அலறியது.ஈரத்துடன் வெளியே வந்த அவன் இவளைப் பார்த்ததும் கை ஈரமாக இருந்ததால் போனை ஸ்பீக்கரில் வைக்கச் சொன்னான் உடை மாற்றிக் கொண்டே.
ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு கீழே நடந்த பவித்ரா காதில் போனில் பேசிய பெண்ணின் பேச்சு விழுந்தது.”சார் ! சமைக்க நேரமில்லை.
இன்னிக்கு பிரேக் பாஸ்ட் சாப்பிடாமலேயே கிளம்பிட்டேன்.நீங்க வரும் போது ஹோட்டல்ல கொஞ்சம் டிபன் வாங்கிட்டு வரீங்களா? ஆபீஸ்ல யாவது சாப்பிடறேன்”.
“ஓக்கே. நோ பிராப்ளம்”_ இது ராம்.

நன்றி திரு. அழகிய சிங்கர் சகோதரரே!
ஹா…ஹா….அப்பிடிப் போகுதா கதை ! பவித்ரா பாத்து சூதனமா நடந்துக்கணும். நல்ல கற்பனை மா.