சுஸ்ரீ/தசாவதானி தாரகேஸ்வரி

“தாரா உனக்கு வயசாச்சே தவிர புத்தி இன்னும் வளரலை”அம்மா கத்தறா சமையலறைல இருந்து.
“அது வளற தனியா உரம் போடோணும், பழைய சோத்துலயும் சுண்டைக்கா குழம்புலயும் வளறாது அது.”
“மூதேவி எதுத்து எதுத்து பேசறதுக்கு மட்டும் உரம் வேண்டாமா”
“அது பரம்பரை சொத்து உன்னோட ஜீன்ஸ்”
“எல்லாம் உன் அப்பன் கொடுக்கற இடம்,அந்த ஆளைச் சொல்லோணும்”
இது அனேகமா இந்த வீட்ல தினம் நடக்கற கூத்து.
கட்டமனூர் தாரகேஸ்வரி அம்மனை வேண்டிப் பிறந்த குழந்தை இந்த தாரா.
விழுப்பரம் பக்கம் உள்ள கட்டமனூரில் தாரகேஸ்வரி அம்மன் பிரசித்தம்.
கந்தசாமி,வேலம்மாளுக்கு குல தெய்வம். சித்திரை மாச திருவிழாவுக்கு எந்த வேலை இருந்தாலும் தள்ளி விட்டு கட்டமனூர் போயாகணும் கந்தசாமி குடும்பத்துக்கு.
அம்மன் தன் பத்து கைகளுடன் வீதி வலம் வரும் போது பலரும் பக்தி பரவசத்தில் சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுவார்கள்.
தாராவுக்கு சிரிப்பா வரும் அம்மனைப் பாத்து, பக்தியும் உண்டு.அம்மனைப் பாத்தா தன் அம்மா ஞாபகம்தான் வரும்.
“அம்மா உனக்கு மட்டும் அம்மனை மாதிரி 10 கை இருந்தா என்னை திட்ட மாட்டே இல்லை”
“ஏண்டி அப்படி சொல்லுதே லூசு”
ஒரு கையால துணி காயப் போடுவே,
ஒரு கை தம்பிக்கு பாலூட்டும், ஒரு கைல ஃபோன் பிடிச்சு அப்பத்தா கிட்ட பேசுவே, ஒரு கை கூட்டும் பத்து கையும் வேலை செய்யும்.வாய் மட்டும் நடு நடுவே என்னைத் திட்டும்.
தாராவை இழுத்து அணைத்துக் கொண்டாள் வேலம்மாள். “அப்படி இல்லைடி என் செல்லம் என் மகள் தசாவதானி ஆகோணும், ஊர் அவளைப் பாராட்டோணும், அந்த தேவி கொடுத்த செல்லம் இல்லையா நீ”
வருஷங்கள் ஆச்சு தாய் தந்தை போயாச்சு.தனக்குனு குடும்பம் ஆச்சு,
தாரகேஸ்வரி இப்போது தாயாரை நினைத்துக் கொள்கிறாள்.ஒரே நேரத்தில் பல வேலைகளை இப்ப செய்ய வேண்டியிருக்கு.கட்டமனூர் தாரகேஸ்வரி அம்மன் கண் முன் வந்தாள்,தாரு தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள்,கண்ணீர் சிந்தி பார்வையை மறைத்தது.

மாலா மாதவன்/சுயம்வரம் – விருட்சம் நாளிதழ்

3 Comments on “சுஸ்ரீ/தசாவதானி தாரகேஸ்வரி”

  1. லண்டன்ல இருந்தாலும் உங்க மனசு கட்டமனூர்ல இருக்கு பாருங்க. நல்ல கற்பனை. வாழ்த்துகள் சார்.

Comments are closed.