
14.11.2025 அன்று இணைய வழி கவியரங்கில் வாசித்த ஐந்தாவது கவிதை
கல் உரசித்தான் கீறல்
விழுந்திருக்க வேண்டுமென்பதில்லை
சமயத்தில் விட்டெறிந்த
சொல்லாலும் கூட இருக்கலாம்
தனிமையில் முகம்
பார்த்தக்கொண்டிருக்கும் போது
சட்டென்று மூன்றாவது முகம் ஒன்று
முட்டி முளைத்திருக்க கூடும்
பளிங்கும் சுத்தம் வேண்டுமென்று
பழந்துணியால்
நையத் தேய்த்த விரல்களின்
கைங்கர்யமாகவும் இருக்க கூடும்
பொய்மைகள் புரையோடி கிடக்கும் முகத்தில்
நெளியும் புன்னகைகளை கண்டு
தாங்காத சிட்டுக்குருவி ஒன்று
பரிசுத்தமான கண்களிலிருந்து பறந்து வந்து
தன் கூர் அலகுகளால் கொத்தி
உடைத்துவிட்டும் போயிருக்கலாம்
