
அவள் திடுக்கிட்டுக் கத்தினாள்.
“என்ன விஷயம்?” என்று அவன் கேட்டான்.
மூடிய திரைகளால் இருண்டிருந்த அந்த அறையில்கூட, அவன் திடீரென அவளுடைய முகத்தைப் பார்த்தான் — பயத்தால் கலங்கியிருந்தது.
“யாரோ இப்போதுதான் கதவைத் திறக்க முயன்றார்கள்.”
“சரி, அம்மாவாக இருக்கலாம்,* அல்லது பையன்களில் யாராவது.”
“இந்த நேரத்தில் அவர்கள் வரவே மாட்டார்கள். டிபன்* சாப்பிட்ட பிறகு நான் எப்போதும் தூங்குவேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
“அப்படியென்றால் வேறு யாராக இருக்க முடியும்?”
“வால்டர்,” என்று அவள் நடுங்கும் உதடுகளுடன் மெல்லச் சொன்னாள்.
அவள் அவனுடைய செருப்புகளைச் சுட்டிக்காட்டினாள். அவன் அவற்றைப் போட முயன்றான்; ஆனால் அவளுடைய பயம் அவனையும் பதற்றமடையச் செய்ததால் அவன் தடுமாறினான். மேலும் அவை சற்று இறுக்கமாகவும் இருந்தன. பொறுமையிழந்த ஓர் இலகு நிசப்த உச்சரிப்புடன் அவள் அவனுக்குச் செருப்பு கருவியை (shoe horn) கொடுத்தாள். அவள் ஒரு கிமோனோ அணிந்து, காலணி இல்லாமல் அலங்கார மேசைக்குச் சென்றாள். அவளுடைய முடி குறுகியதாக வெட்டப்பட்டிருந்தது; ஒரு சீப்பால் அதைச் சரி செய்து கொண்டாள் — அவன் இரண்டாவது செருப்பின் லேஸை கட்டி முடிப்பதற்குமுன்பே. அவள் அவனுடைய கோட்டையும் கொடுத்தாள்.
“நான் எப்படி வெளியே போகிறேன்?”
“சிறிது நேரம் காத்திருப்பதே நல்லது. நான் வெளியே பார்த்து எல்லாம் சரியா இருக்கிறதா என்று பார்க்கிறேன்.”
“அது வால்டர் ஆகவே முடியாது. அவன் ஐந்து மணிவரை ஆய்வுக்கூடத்தில்தான் இருப்பான்.”
“அப்படியென்றால் யார்?”
இப்போது அவர்கள் கிசுகிசுத்துக் பேசினார்கள். அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவசரமான நிலை ஏற்பட்டால் அவள் மனஅமைதியை இழந்துவிடுவாள் என்று அவனுக்குத் தோன்றியது; திடீரென அவன் அவள்மேல் கோபமடைந்தான். பாதுகாப்பில்லை என்றால், ஏன் அவள் பாதுகாப்பாக இருக்கிறது என்று சொன்னாள்? அவள் மூச்சை இழுத்துக் கொண்டு அவன் கையைப் பற்றினாள். அவன் அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தான். வராண்டாவுக்குத் திறக்கும் ஜன்னல்களுக்கு முன்பு அவர்கள் நின்றனர். ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன; தாழ்ப்பாள்களும் போடப்பட்டிருந்தன. கதவுக் கைப்பிடியின் வெள்ளை சீனப் பொத்தான் மெதுவாகத் திரும்புவதை அவர்கள் கண்டார்கள். வராண்டாவில் யாரும் நடந்துச் சென்ற சத்தம் கேட்கவில்லை. அந்த அமைதியான அசைவு பயமுறுத்துவதாக இருந்தது.
ஒரு நிமிடம் கழிந்தது; எந்தச் சத்தமும் இல்லை. பின்னர், அமானுஷ்யமான அச்சத்துடன், அதே மறைவான, ஒலியற்ற, பயங்கரமான முறையில், மற்றொரு ஜன்னலின் கைப்பிடியிலும் அந்த வெள்ளை சீனப் பொத்தான் திரும்புவதை அவர்கள் கண்டார்கள். அது அவ்வளவு பயங்கரமாக இருந்ததால், நரம்புகள் தளர்ந்து கிடைத்த கிட்டி கத்தத் தொடங்கினாள்; ஆனால் அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை உணர்ந்த அவன், உடனே அவளுடைய வாயை கையால் மூடி, அவளுடைய கத்தலை அடக்கினான்.
அமைதி. அவள் அவன் மீது சாய்ந்தாள்; அவளுடைய முழங்கால்கள் நடுங்கின. அவள் மயங்கி விடுவாளோ என்று அவன் அஞ்சினான். புருவங்களைச் சுருக்கி, தாடையை இறுக்கிக் கொண்டு, அவளைத் தூக்கி படுக்கையில் உட்கார வைத்தான். அவள் படுக்கைத்தாளைப் போல வெண்மையாக இருந்தாள்; அவனுடைய முகமும், அவன் கருப்புத் தோலிருந்தபோதிலும், வெளிர்ந்திருந்தது. அவன் அவளருகே நின்று, சீனப் பொத்தானை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் பேசவில்லை.
பின்னர் அவள் அழுகிறாள் என்பதை அவன் கண்டான்.
“கடவுளுக்காக, அதைப் பண்ணாதே,” என்று அவன் எரிச்சலுடன் கிசுகிசுத்தான்.
“நமக்கு இது நேர்ந்தாகிவிட்டால், நேர்ந்ததே. தைரியமாக சமாளிக்க வேண்டியதுதான்.”
அவள் கைக்குட்டையைத் தேடினாள்; அவள் என்ன தேடுகிறாள் என்பதை அறிந்த அவன், அவளுடைய பையை அவளுக்குக் கொடுத்தான்.
“உன் தொப்பி எங்கே?”*
“கீழே விட்டுவிட்டேன்.”
“அய்யோ கடவுளே!”
“கேள், நீ உன்னைத் தைரியப்படுத்திக் கொள்ள வேண்டும். நூற்றுக்கு ஒன்றாக, அது வால்டர் இல்லை. இந்த நேரத்தில் அவன் ஏன் திரும்பி வர வேண்டும்? அவன் ஒருபோதும் பகல் நேரத்தில் வீட்டுக்கு வருவானா?”
“இல்லை.”
“நான் எதையும் பந்தயம் வைப்பேன் — அது அம்மாதான்.”
அவள் மெல்லிய புன்னகை ஒன்றைக் காட்டினாள். அவனுடைய இனிமையான, ஆறுதலான குரல் அவளுக்கு நம்பிக்கை அளித்தது; அவள் அவன் கையைப் பிடித்து அன்புடன் அழுத்தினாள். அவன் அவளுக்குச் சிறிது நேரம் தன்னைச் சமாளிக்க விடுத்தான்.
“இங்கே என்றென்றும் இருக்க முடியாது,” என்று அவன் பின்னர் சொன்னான்.
“வராண்டாவுக்குச் சென்று பார்த்து வருவதற்கு உனக்கு தைரியம் இருக்கிறதா?”
“நான் நின்றுகொள்ளவே முடியாது போலிருக்கிறது.”
“இங்கே பிராண்டி ஏதாவது இருக்கிறதா?”
அவள் தலையசைத்தாள். ஒரு கணம் அவனுடைய நெற்றி சுருங்கியது; அவன் பொறுமையிழந்து கொண்டிருந்தான்; என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. திடீரென அவள் அவன் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்தாள்.
“அவன் அங்கே காத்திருக்கிறான் என்றால்?”
அவன் உதடுகளை வலுக்கட்டாயமாகச் சிரிக்க வைத்தான்; அவன் குரல் அதே மென்மையான, மனம்வசியப்படுத்தும் தன்மையுடன் இருந்தது — அதன் விளைவு அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
“அது சாத்தியமில்லை. கொஞ்சம் தைரியம் காட்டு, கிட்டி. அது உன் கணவனாக எப்படி இருக்க முடியும்? ஹாலில் ஒரு அந்நியனின் தொப்பியைப் பார்த்து, மேலே வந்து, உன் அறை பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருந்தால், அவன் ஏதாவது பெரிய சத்தம் போட்டிருப்பான் அல்லவா? அது ஒரு வேலைக்காரன்தான். அந்த மாதிரி கைப்பிடியைத் திருப்புவது சீனர்களுக்குத்தான் இயலும்.”
இப்போது அவள் சற்றே அமைதியடைந்தாள்.
“அது அம்மா மட்டும்தான் என்றாலும், அது இனிமையான அனுபவம் இல்லை.”
“அவளை சமாதானப்படுத்தலாம்; தேவைப்பட்டால் கடவுளின் பயத்தை அவளுக்குள் ஊட்டிவிடுவேன். அரசாங்க அதிகாரியாக இருப்பதில் அதிக நன்மைகள் இல்லை; இருந்தாலும் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
அவன் சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் எழுந்து நின்று, அவனை நோக்கி கைகளை நீட்டினாள்; அவன் அவளை அணைத்து, அவளுடைய உதடுகளில் முத்தமிட்டான். அது இன்பம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு தீவிரமாக இருந்தது — இன்பமே வலியாக மாறியது. அவள் அவனை முழுமையாக நேசித்தாள். அவன் அவளை விடுவித்தான்; அவள் ஜன்னலுக்குச் சென்றாள். தாழ்ப்பாளைத் திறந்து, திரையைச் சற்றே விலக்கி வெளியே பார்த்தாள். ஒருவரும் இல்லை. அவள் வராண்டாவுக்கு சென்று, தன் கணவனுடைய உடைமாற்றும் அறையைப் பார்த்தாள்; பின்னர் தன் அமர்வறையையும் பார்த்தாள். இரண்டும் காலியாக இருந்தன. அவள் மீண்டும் படுக்கையறைக்குத் திரும்பி அவனை அழைத்தாள்.
“யாரும் இல்லை.”
“முழு விஷயமும் கண் மாயையாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.”
“சிரிக்காதே. நான் உயிருக்கு பயந்தேன். என் அமர்வறைக்குச் சென்று உட்கார். நான் ஸ்டாக்கிங்ஸும் செருப்பும் போட்டுக் கொள்கிறேன்.”

One Comment on “வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை””
Comments are closed.