பாலசாண்டில்யன்/மனிதம் பூத்த முகவரி

சென்னை மாநகரத்தின் அந்தப் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் மதிய நேரத்து அமைதி நிலவியது. ஏப்ரல் மாதத்து அக்னி நட்சத்திர வெயில் ஜன்னல் கண்ணாடிகளின் வழியே அனலாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே ஏசி குளிரில் அந்த வெப்பம் தெரியவில்லை என்றாலும், அவ்வப்போது ஜன்னல் வழியே தெரியும் சாலைகள் கானல் நீராய் மின்னின.
திடீரென்று அழைப்பு மணி ஒலிக்க, “இந்தாங்க உங்க டெலிவரி…” – களைப்பும் தாகமும் கலந்த ஒரு பெண் குரல் வாசலில் கேட்டது.

கதவைத் திறந்த சுபத்ரா, கையில் இருந்த பார்சலை வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டார். “யார் உனக்கு வேலை கொடுத்தா? இவ்வளவு லேட்டா வர்ற? மதியம் சாப்பாடு நேரம் முடியப்போகுது. பசியில மனுஷன் இங்க காத்துட்டு இருக்கோம், உங்களுக்கு என்ன கவலை? கஸ்டமர் டைமிங் முக்கியம்னு தோணலையா?” என்று எகிறினார்.

“ரொம்ப டிராபிக் மேடம், அதுவும் இந்த வெயில்ல வண்டி ஓட்டுறது…” என்று அந்தப் பெண் சொல்லும்போதே குறுக்கிட்ட சுபத்ரா, “சரி சரி சாக்கு சொல்லாதே… போ! வாடி மது, சாப்பிடலாம்,” என்று தன் மகளைப் பார்த்துக் குரல் கொடுத்தார்.
ஆனால், பார்சல் கொண்டு வந்த அந்தப் பெண் அங்கேயே தயங்கி நின்றாள். அவளது முகம் வியர்வையில் நனைந்து, கண்கள் சிவந்திருந்தன. அவளது சேலையைப் பிடித்துக்கொண்டு ஐந்து வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமி வாடிய முகத்துடன் பின்னாலேயே நின்றிருந்தாள்.

“அம்மா… ஒரு சின்ன உதவி. நானும் என் பொண்ணும் மூணு மணி நேரமா இந்த வெயில்ல வண்டியில சுத்திக்கிட்டு இருக்கோம். இவளுக்குக் கொஞ்சம் அர்ஜன்டா பாத்ரூம் போகணும். பர்மிஷன் கிடைக்குமா?” என்று நாத்தழுதழுக்கக் கேட்டாள்.

சுபத்ராவின் முகம் சுருங்கியது. “நீ பாத்ரூம் போகவா நான் இவ்வளவு லட்சக்கணக்குல செலவு பண்ணி இந்த அழகான வீட்டைக் கட்டி வெச்சிருக்கேன்? அந்த இத்தாலி டைல்ஸ் எல்லாம் எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா? அதெல்லாம் அழுக்காயிடும். கிளம்புமா… போய்ப் பப்ளிக் டாய்லெட்ல போ,” என்று முகத்தில் அடித்தார் போல் பேசிவிட்டுத் திரும்பினார்.
“அம்மா… சின்னப் பிள்ளைமா, வெயில் வேற சுடுது. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க,” என்று அவள் மீண்டும் குரலை உயர்த்தி வேண்டினாள்.

“நீ கிளம்புவியா மாட்டியா? இல்லை செக்யூரிட்டியைக் கூப்பிட்டு வெளியே தள்ளச் சொல்லவா? ஒரு நிமிஷம் நின்னாலும் போலீஸைக் கூப்பிடுவேன்,” என்று ஆவேசமாகக் கத்தினார் சுபத்ரா.

அப்போது உள்ளிருந்து வந்த மது, வாசலில் நடந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள். தன் தாயின் கடுஞ்சொற்களையும், அந்தத் தாயின் தவிப்பையும் கண்டு துடித்துப் போனாள். சட்டென்று முன்னே வந்து, “அக்கா, உள்ள வாங்க… அவங்களை நான் பாத்துக்கிறேன்,” என்று அந்தப் பெண்ணின் கரத்தைப் பற்றினாள்.

சுபத்ரா அதிர்ச்சியில், “மது… என்ன பண்ற நீ? யாரை உள்ள கூப்பிடுற?” என்று கத்த, மது அதைப் பொருட்படுத்தாமல் அவர்களைத் தன் அறைக்கு அருகே இருந்த கழிப்பறைக்கு அழைத்துச் சென்றாள். அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் குடிக்கக் குளிர்ந்த நீரையும், சில பிஸ்கட்டுகளையும் கொடுத்து உபசரித்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த அந்தப் பெண்ணின் கண்கள் நன்றிக் கண்ணீரால் மின்னின. “ரொம்ப நன்றி அக்கா,” என்று மதுவைப் பார்த்து நெகிழ்ச்சியுடன் சொன்னவள், வெளியேறும்போது சுபத்ராவின் முன்னால் நின்று மெல்லிய ஆனால் உறுதியான குரலில் சொன்னாள்:

“அம்மா… பப்ளிக் டாய்லெட் போறதுக்குப் பயந்து நான் இங்க கெஞ்சலை. ஆனா அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஒரு பொதுக் கழிப்பிடத்துக்குப் போனப்போ, அங்கே இருந்த ஒருத்தன் என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுனான். நான் பெத்த பிள்ளையை அழைச்சுக்கிட்டு அங்கே போக எனக்குப் பயமா இருந்துச்சு. ஒரு பொம்பளையா என் கஷ்டம் உங்களுக்குப் புரியும்னு நினைச்சேன். ஆனா உங்க வீட்டைவிட உங்க மனசு ரொம்பச் சின்னதுன்னு இப்பதான் புரியுது. தப்பா நினைச்சுக்காதீங்க,” என்று சொல்லிவிட்டு விறுவிறுவெனப் புறப்பட்டாள்.

அவள் சென்றபிறகு அந்த வீடு ஒரு இடுகாட்டைப் போல நிசப்தமானது. டைனிங் டேபிளில் சுடச்சுட இருந்த உணவின் மணம் இப்போது சுபத்ராவுக்கு அருவருப்பைத் தந்தது. மது தன் தாயின் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னாள், “அம்மா, அந்தப் பெண் கொண்டு வந்தது வெறும் உணவுப் பார்சல் இல்லை, அது அவளோட உழைப்பு. நமக்கும் ஒரு நாள் ஒரு உதவி தேவைப்படும்போது, இந்த ‘அழகான வீடு’ நம்மைக் காப்பாத்தாது, நாம மத்தவங்களுக்குக் காட்டுற மனிதாபிமானம் தான் காப்பாத்தும். ஒரு பொண்ணோட கண்ணீருக்குக் கூட இடமில்லாத இந்த வீடு வெறும் சிமெண்ட் கட்டடம் தான் அம்மா.”

சுபத்ராவுக்குத் தொண்டை அடைத்தது. தான் சேகரித்து வைத்திருந்த ஆடம்பரப் பொருட்கள் அனைத்தும் அந்தப் பெண்ணின் ஒற்றைச் சொல்லுக்கு முன்னால் அர்த்தமற்றுப் போயின. வாசலில் மறையும் அந்தச் சிறிய ஸ்கூட்டரையே கண்கள் கலங்கப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.

“பணத்தால் அழகான வீட்டை உருவாக்கலாம், ஆனால் பண்பால் அன்பால் மட்டுமே ஒரு வீட்டை மனிதம் நிறைந்த இடமாக மாற்ற முடியும்.” என்றாள் மது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன