கொசுறு என்று எதுவுமில்லை/ சாந்தமூர்த்தி


“இந்த அநியாயத்தைப் பாத்தீங்களா?” என்ற என் மனைவியின் குரல் கேட்டு எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த நான் அதிர்ந்து திரும்பினேன். கையில் வைத்திருந்த சில கறிவேப்பிலை இணுக்குகளைக் காட்டி”பாருங்க,இதோட வெலை எரநூறு ரூபாயாங்க!” என்று அவர் ஆவேசத்துடன் சொன்னார். அதிலென்ன அநியாயம் என்பது போல நான் சாதாரணமாக”அப்புடியா?” என்றேன

இந்த உரையாடல் நடந்த இடம் அமெரிக்காவில் நம் மாவட்ட்த்தின் அளவே உள்ள ஒஹாயோ மாநிலத்தில் உள்ள இன்டியன் ஸ்டோர்ஸ். இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு சென்றவர்கள் ஒவ்வொரு பொருளின் விலையும் இந்திய ரூபாயில் எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

“இதை அநியாயம்னு சொல்லணும்னா எனக்கு சில விபரங்கள் வேணும். அமெரிக்காவுல இவங்க மாச சம்பளத்துல கறிவேப்பிலை செலவு எத்தனை சதவீதம்ங்கிறதோட இந்தியாவுல அதே மாதிரி எத்தனை சதவீதம்கிறத கம்பேர் பண்ணாதான் இது அநியாயமா இல்லையான்னு சொல்ல முடியும், அப்புறம் கறிவேப்பிலை இந்தியாவிலேருந்து அமெரிக்காவுக்கு வர பாஸ்போட், விசா மாதிரி செலவு உண்டான்னும் தெரியனும்” என்று நான் சொன்னேன்.

“ம்…. வந்துட்டாரு நியாயம் பேசுறவரு” என்று மகள் முணுமுணுத்தார். என் மனைவி,”நம்மூர்ல கறுவப்லைக்கு காசே இல்லீங்க. அதை சும்மா கொசுறாத் தான் வாங்குவோம்.இதுக்கு வெலை எரநூறு ரூபாய்ங்கிறதை என்னால தாங்கவே முடியலைங்க”என்று அதிர்ச்சி சிறிதும் குறையாமல் சொன்னார். நான் வழக்கம் போல் “உண்மையிலேயே கொசுறுன்னு எதுவும் இல்லை, தெரியுமா?” என்று விளக்கத் தொடங்கவில்லை.”இங்கே கொசுறு கான்செப்ட் இருக்கான்னு தெரியலை.எதுக்கும் கேட்டுப் பார்” என்று சொல்லி வேடிக்கைப் பார்க்கத் தயாரானேன்.

கொசுறு என்பது ஒரு மாயை.அப்படி உண்மையில் எதுவும் இல்லை. மாயை பல உருவ மயக்கத்தை ஏற்படுத்த முடியும்.கறிவேப்பிலை,ஆடித் தள்ளுபடி, ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம்,ஸ்பெஷல் ஆஃபர்,தேர்தல் கால வாக்குறுதிகள்,உடனுக்குடனே சூடாக வழங்கப் படும் இலவசங்கள் என்று கொசுறு எடுக்கும் அவதாரங்கள் முடிவற்றவை.

எந்த பொருளாக இருந்தாலும் கொசுறு இல்லாத எந்த வியாபாரத்தையும் மக்கள் விரும்புவதில்லை.கொசுறு தொடர்பாக வணிகர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருப்பதாகத் தெரியவில்லை.உண்மையில் அது அவர்களுக்கு ஒரு விதத்தில் மிகவும் வசதியான ஒரு ஏற்பாடு.

ஓஷோவின் அப்பா ஒரு வணிகர்.அவர்,”நீங்கள் எந்த ஆயுதத்தை ஏந்தி போரிட்டாலும் கடைசியில் நான்தான் ஜெயிப்பேன்.எந்த பேரத்திலும் எனக்கு லாபம் கூடும் அல்லது குறையுமே தவிர லாபம் இல்லாமல் போகாது.ஏனென்றால் பொருளின் அடக்க விலை எனக்கு மட்டும் தான் தெரியும்”என்பாராம்.

ஷிவ் கேராவின்”உன்னால் முடியும்” நூலில் ஒரு சிறிய கதை வரும்.ஒரு மன்னன் அறிஞர்களை அழைத்து உலகின் அத்தனை ஞானத்தையும் திரட்டி ஒரு நூலாக உருவாக்க சொல்வார்.பிறகு அதை ஒரு பக்க அளவில் சுருக்கச் சொல்வார்.பின்னர் அதை ஒரு சிறிய வாக்கியமாக மாற்றினால் மக்கள் அதை எளிதாக நினைவு வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தவும் முடியுமே என்பார்.இறுதியாக அறிஞர்கள் வடித்துக் கொடுத்த வாக்கியம் — “இலவச உணவு என்று எதுவுமில்லை.”

கொசுறு என்பது ஒரு கையால் தெரியும்படி கொடுத்து விட்டு இன்னொரு கையால் மறைமுகமாக எடுத்துக் கொள்வது.அது திருட்டல்ல;வணிகம் தான்.என்றும் நடைபெறுவதுதான்.எவ்வளவு அதிகமாக எடுத்துக் கொள்ளப் படுகிறது என்பதைப் பொறுத்து அது திருட்டு,கொள்ளை,பகல் கொள்ளை என்று வேறு பெயர்களைப் பெறுவதுமுண்டு.
@@@@@@@@@