இன்று சாருவின் பிறந்த நாள்/அழகியசிங்கர்

துளி – 231

            நானும், சாருநிவேதிதாவும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள்.  ஆனால் வேறு வேறு தேதிகளில்.  நான் ஒன்றாம் தேதி அவர் 18ஆம் தேதி.

            முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை விருட்சம் இலக்கியக் கூட்டத்தில் பேச அழைத்தேன். எந்தத் தலைப்பு என்று தெரியவில்லை.

            ஆனால் அந்தக் கூட்டம் ஒரு குழப்பத்தில் முடிந்தது.  சாரு அந்தக் கூட்டத்தில் சத்தம் போட்டுப் பேசினார்.  சண்டைக்கு வருவது மாதிரி இருந்தது. அந்தக் கூட்டம் நடந்து முடிந்தபோது நான் அமைதி இல்லாமல் இருந்தேன். 

            அதன்பிறகு வெகுநாட்கள் பார்க்கவில்லை.  இன்னொரு முறை பிரமிள் குறித்துப் பேசும்போது அவரை நுங்கம்பாக்கம் ஹைரோடில் உள்ள ஒரு ஓட்டலில் பல நண்பர்களுடன் பார்த்தேன். எல்லோரும்  குடித்துவிட்டுப் பேசினார்கள்.  இந்தக் கூட்டமும் எனக்கு ஒத்து வரவில்லை.

            பொதுவாகச் சாரு பேசுகிற எல்லாக் கூட்டங்களில் கலகம் ஏற்படாமலிருக்காது. இந்தக் கூட்டமும் ரசாபாசமாக முடிந்தது.

            அதன்பின் அவரை சார்வாகன் மறைந்தபோது சார்வாகன் வீட்டில் சந்தித்தேன். அசோகமித்திரனுடன் பார்த்தேன் என்று நினைக்கிறேன்.

            பேசும்போது சாரு முற்றிலும் வேற ஒரு மனிதராக எனக்குத் தோன்றினார்.  அவருக்கு அதிக வாசகர்கள்.  எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.  30 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு அப்படி யாருமில்லை.

            மேலும் அவர் அசோகமித்திரனை உலகப் புகழ் வாய்ந்த எழுத்தாளர் வரிசையில் சேர்த்துப் புகழ்ந்தபோது என்னால் நம்ப முடியாமல் இருந்தது. ஏன் அசோகமித்திரனுக்குக் கூட அந்தச் சந்தேகம் அப்போது இருந்தது என்று நினைக்கிறேன்.  

            ஆனால் தொடர்ந்து சாரு அசோகமித்திரன் படைப்புகள் உயர்வான மதிப்பு வைத்திருந்தார்.  அசோகமித்திரனைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியபோது அவர் சந்திப்புக்கு வழி வகுத்தேன்.

            நாங்கள் (நானும், ஆடிட்டர் கோவிந்தராஜனும்) திநகரில் உள்ள அலமேலு கல்யாண மண்டபத்தில் இலக்கியக் கூட்டம் ஏற்பாடு செய்தோம். முதல் கூட்டம் அசோகமித்திரனை வைத்து நடத்தினோம்.  நான், கோவிந்தராஜன், அசோகமித்திரனையும் சேர்த்து 19 பேர்கள் வந்தோம்.

            அதன்பின் சாருநிவேதிதாவை  அசோகமித்திரனைப் பற்றிப் பேசக் கூப்பிட்டோம்.  அவர் ரசிகப் பட்டாளத்துடன் வந்திருந்தார்.  கல்யாண மண்டபம் முழுவதும் கலகலப்பாக மாறிவிட்டது.  60க்கும் மேற்பட்டவர்கள் வந்தார்கள்.  எனக்கு இலக்கியக் கூட்டம் என்பது இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வருவார்களா என்ற ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் திகைப்பு. எழுத்தாளரை இப்படிப் பலர் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

            டேக் சென்டரில் ஒவ்வொரு மாதமும் புத்தக நண்பர்கள் கூட்டம் நடக்கும்.  (சாரி, ரவி தமிழ்வாணன், சாருகேசி, ராஜன்) நாவல் விமர்சனக் கூட்டம் நடக்கும்.  சாருகேசி எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்.  நான் எடுத்துக்கொண்டு பேசிய நாவல் சாருநிவேதிதாவின் ராச லீலா.  சாருநிவேதிதா என்ற பெயரைக் குறிப்பிட்டவுடன் கலவரத்துடன் என்னை சாருகேசி பார்த்ததாகத் தோன்றியது. சாருகேசி அரைமணிநேரம் மேல் பேச வேண்டுமென்றார்.  நான் பேசாமல் எழுதிக்கொண்டு வந்து கட்டுரையைப் படித்து விட்டேன். அன்றைய கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை .  சாருவின் பல நண்பர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.           

            என்னுடைய மொத்த கதைகளையும் தொகுத்து ‘அழகியசிங்கர் சிறுகதைகள்’ என்ற பெயரில் ஒரு தொகுப்பு கொண்டு வந்தேன்.  664 பக்கங்கள்.  பீட்டர்ஸ் ரோடில் உள்ள ரைட்டர்ஸ் கிளப்பில் கூட்டம் ஏற்பாடு செய்தேன். மிகக் குறைவான எண்ணிக்கை உள்ள நண்பர்களைத்தான் அழைத்தேன். இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று யோசனை சொன்னவர் என்னுடன் தினமும் நடைப்பயிற்சியில் ஈடுபடும் நண்பர் நடராஜன்.

            என் கதைகளைப் படித்துவிட்டு சாரு நிவேதிதா என்ன பேசப் போகிறார் என்ற திகைப்பு என்னிடம் இருந்தது. என்னாலேயே நம்ப முடியாமல் அற்புதமாகப் பேசினார். என் ஒவ்வொரு கதையையும் நாவலாக எழுதியிருக்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.

            இன்னும் பல நண்பர்களும் கலந்துகொண்டு பேசினார்கள். அக் கூட்டத்திற்கு என் குடும்பத்தையே அழைத்துக்கொண்டு வந்தேன். 

            அந்தக் கூட்டத்தில் என் கதைகளைப் பற்றி சாருநிவேதிதா குறிப்பிட்டதை இங்குப்  பதிவு செய்கிறேன்.

           ‘ இவர் (நான்) கதைகள் பெரும்பாலும் காஃப்காதனமாகவும் கம்யூதனமாகவும் வாழ்வின் அபத்தங்களை வெளிப்படுத்துகின்றன.  எல்லாக் கதைகளிலும் மரணம் குறித்தும் செக்ஸ் பற்றிய விவரணையும் உள்ளன.  ஆர்ப்பாட்டமில்லாத ஆர்வமில்லாத நடை.  நதியில் ஓடம் அமைதியாகப் போய்க்கொண்டிருப்பதுபோல்.  நல்லது  எது கெட்டது எது என்பது பற்றித் தெரியாத குழந்தையின் மனநிலையில் கதைகள் மூலம் உலகத்தைப் பார்ப்பதுபோல் தோன்றுகிறது.’

            இன்று பிறந்தநாள் காணும் சாருவிற்கு என் மனப்பூர்வமான பிறந்ததின  வாழ்த்துகள்.  

2 Comments on “இன்று சாருவின் பிறந்த நாள்/அழகியசிங்கர்”

  1. “குழந்தையின் மனநிலையில் கதைகள் மூலம் உலகத்தைப் பார்ப்பதுபோல் தோன்றுகிறது.”

    -என்று தங்களைப் பற்றி சாரு அன்று கூறியது இன்றும் பொருந்தும். எவரையும் வெறுக்காத, எவரையும் ஒதுக்காத குழந்தைத் தன்மை என்றும் உங்களோடு இருக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்!

    சாருவை பொருத்தவரையில், அவர் மனம் குவிந்து, ஈடுபட்டு, மகத்தான நாவல் ஒன்றையாவது படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவரோ பொழுதை வீணடித்துக்கொண்டிருக்கிறார்!

Comments are closed.