எடுத்ததும் கொடுத்ததும்/எம் டி முத்துகுமாரஸ்வாமி

அடிஸ் அபாபா நகரின் சந்தை ஆப்பிரிக்காவிலேயே மிகப் பெரியது. குண்டும் குழியுமாய், குறுகலான சந்துகளுடன் சகதிக்காடாய் இருக்கும். ஜில்கா மில்கா அயிட்டங்கள் முதல் எலெக்ட்ரானிக்ஸ், கோழிகள் ஆடுகள் மாடுகள் வரை அனைத்தும் விற்பார்கள். கூட்டம் நம்மூர் ரெங்கநாதன் தெரு போல நெருக்கித் தள்ளும். அடிஸ் அபாபா பல்கலைக்கு விசிட்டிங் புரஃபசராய் சென்றிருந்தபோது அடிஸின் சந்தைக்கு ஓய்வு நேரத்தில் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தேன். ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் பல்கலைக்கு அதற்கு சிறிது காலத்துக்கு முன்னரே புரஃபசராய் சென்றிருந்தபடியால் ஐரோப்பாவையும் ஆப்பிரிக்காவையும் ஒப்பிட்டுக்கொண்டேயிருந்தேன். என் எத்தியோப்பிய மாணவர்கள் நான் அடிஸின் சந்தைக்கு செல்லும்போதெல்லாம் என் பர்ஸ், கைபேசி எல்லாவற்றையும் ஜாக்கிரதையாய் வைத்துக்கொள்ளும்படி சொல்வார்கள். கைபேசி திருடு போய்விட்டால் உடனடியாக வேறொரு தொலைபேசியிலிருந்து உங்கள் எண்ணையே அழைத்து, திருடியவரிடம் பேசி, பாதி விலைக்கு திரும்பவும் வாங்கிவிடுங்கள் அதுதான் உத்தமம் என்றும் சொல்வார்கள். ஒரே ஒரு முறை ஜன நெரிசலில் அடிஸின் சந்தையில் மூச்சு முட்ட நின்றுகொண்டிருந்தபோது என் பாக்கெட்டுக்குள் ஒரு கை நுழைவதை உணரமுடிந்தது. அந்தக் கை என் பாக்கெட்டில் நான் அப்போதுதான் வாங்கி திணித்திருந்த எத்தியோப்பிய ஆர்தடாக்ஸ் சர்ச்சின் சிலுவையை உருவி எடுத்தது; சில விநாடிகளில் என் தோளைத் தட்டி, அதே கை அந்த சிலுவையை என்னிடம் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டது. அந்த கைக்குரிய முகம் என்னவாக இருக்கும் என்று நான் அவ்வபோது கற்பனை செய்து பார்க்க தவறுவதில்லை.

2 Comments on “எடுத்ததும் கொடுத்ததும்/எம் டி முத்துகுமாரஸ்வாமி”

  1. கைபேசி தொலைத்துவிட்டு கவிதையொன்று எழுதினேன் அவ்வளவே
    போனை எடுத்தவர் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். போலிசில்லும் புகார் தரவில்லை நான்.
    உங்கள் கட்டுரைச்செய்தி சுவாரஸ்யம் .

  2. உங்கள் கட்டுரை படிப்பவர் உங்களுடன் பயணம் செய்த மாதிரி இருக்கிறது

Comments are closed.