மடியில் கனம்/எம்.டி.முத்துகுமாரசுவாமி



அடிஸ் அபாபா பல்கலைக்கழகம் என்னை நகரத்தின் மத்தியில் இருந்த பெரிய நட்சத்திர விடுதியில் தங்க வைத்திருந்தது. அங்கேயிருந்து நான் தினசரி வகுப்பு எடுக்க பல்கலைக்குச் செல்ல வேண்டும். என்னை வரவழைத்திருந்த பேராசிரியர் அசிஸ் ஃபெக்கடெ நகரின் மறுகோடியில் வசித்திருந்தார். அவர் நான் எப்படி தினசரி விடுதியிலிருந்து பல்கலைக்கு மினி பஸ்ஸில் வர வேண்டும் என்று எனக்கு காட்டித் தந்திருந்தார். மினி பஸ் அல்லது நீல நிற வேன்களில் முப்பது பேர் அமரலாம். முதல் நாள் நான் பஸ் ஏற வந்தபோது பார்த்தால் ஒவ்வொரு வேனும் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது; நூறு பேருக்கு மேல் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். என்னால் எந்த வேனிலும் ஏறவே முடியவில்லை. முதல் நாள் நான் பல்கலைக்குச் செல்லவில்லை. ஃபெக்கெடெ எனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என பதறிப் போய் விட்டார், விடுதிக்கு என்னைத் தேடி வந்தவரிடம் விபரத்தைச் சொன்னேன். தினசரி டாக்சியோ அநியாயமான கட்டணமாக இருந்தது. ஃபெக்கெடெ அவர் காரில் வந்து என்னை அழைத்துப்போகலாமென்றாலோ ஒரு வழிக்கே மூன்று மணி நேரம் ஆகும் போல இருந்தது. கடைசியில் அவர் என்னை தினசரி விடுதியில் இருந்து பல்கலைக்குக் கூட்டிக்கொண்டுபோக ஒரு மாணவரை ஏற்பாடு செய்தார். அந்த மாணவர் மிகவும் திறமையானவர். என்ன செய்தார் ஏது செய்தார் என்று தெரியவில்லை. நீல வேன்கள் எங்கள் நிறுத்தத்தில் நின்றவுடன் வாசலில் நிற்பவர்கள் தொங்குபவர்கள் எல்லாம் ஒரு பொந்து போல வழி விடுவார்கள் அதில் எறி உள்ளே சென்றால் இறுதி இருக்கையில் ஜன்னலோர அரையடி இருக்கையை எனக்கு யாராயிருந்தாலும் காலி செய்து தருவார்கள். 45 நிமிட பயணம். மாணவர் அதே வேனில் எங்காவது தொத்திக்கொண்டு விடுவார். மூச்சு முட்ட ஆட்கள் நெருக்கி அடிக்க கசங்கி வதங்கி பல்கலை போய்ச்சேர்வேன். திரும்பி வரும்போதும் அதே கதிதான். நம்மூர் பஸ்களிலும் ரயில்களிலும் இல்லாத கூட்டமா இங்கே சிறிய வேன் என்பதால்தான் இப்படித் திணறலாக இருக்கிறது இரண்டொரு நாளில் பழகிவிடும் என எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்.

இரண்டொரு நாட்கள் கழித்து நான் ஏறும் நிறுத்ததிலிருந்து சில நிறுத்தங்கள் தள்ளி ஒரு இளம்பெண் வேனில் ஏற ஆரம்பித்தார். அவருக்கும் எனக்கு செய்வதைப் போலவே நடத்துனர் கூட்டத்தில் வழி ஏற்படுத்திக்கொடுத்தார். அவர் நேரே உள்ளே வந்து என் மடியில் உட்கார்ந்துவிட்டார். எத்தியோப்பிய பெண்கள் பேரழகிகள். நீண்ட சுருள் முடிக் கூந்தல், பெரிய விழிகள், உயரமும் வாளிப்பும் கூடிய உடல்க்கட்டு மினுங்கும் கறுப்பு நிறம் என அசர வைக்கும் அழகுடன் இருப்பார்கள். இந்தப் பெண்ணும் சகல எத்தியோப்பிய லட்சணங்களுடன் ஆனால் மாநிறமாக இருந்தார். திரும்ப வரும்போதும் அதே கதை. இதுதான் இனிமேல் தினசரி வழக்கம் என்பது போல் ஆனவுடன் நான் பொறுக்க முடியாமல் என் மாணவ உதவியாளரிடம் என்னது இது என்று பொங்கினேன். அவரோ வேனின் கடைசி இருக்கையை அவரும் எப்படியோ வாங்கி இருக்கிறார்; பல்கலை மாணவிதான் ஒன்றும் செய்ய இயலாது எனக் கைவிரித்துவிட்டார்.

ஏதாவது மேஜிக்கல் ரியலிச கதையில் நான் நாற்காலியாக மாறிவிட்டேனா இல்லை நான் ஏதேனும் அபத்த நாடகத்தின் செட் பிராப்பர்ட்டியா என்னது இது என எனக்கு கடுப்பு அதிகமாகிக்கொண்டிருந்தது. அந்தப் பெண் என்னோடு பேசுவதும் இல்லை, என் மடியில் அமர்வதற்கு அனுமதி கேட்பதும் இல்லை. வருவார், நான்தான் உட்கார்ந்திருக்கிறேனா என ஓரக்கண்ணால் உறுதிப்படுத்திக்கொள்வார், மடியில் உட்கார்ந்து விடுவார்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல பெண் அமர்வதும் மடிப்பழக்கம் என நாட்களும் கரைந்து போயின.

எழு வருடங்கள் கழித்து என் உதவியாளர் மாணவர் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டார். உங்களோடு வேனில் வருவாரே அந்தப் பெண் ஒரு சிகிக்சைக்காகத் தனியாக வேலூர் வருகிறார் அவருக்கு நீங்கள் உதவி செய்ய இயலுமா என்று கேட்டிருந்தார். தொண்டையில் ஒரு சிக்கலான அறுவை சிகிக்சைக்காக வந்திருந்தபடியால் அந்தப் பெண்ணால் எதுவும் பேச முடியவில்லை. நான் ஒரு தாதியை அவருக்கு ஏற்பாடு செய்து வேலூரில் அறுவை சிகிக்சை முடியும் வரை கூட இருக்கச் செய்தேன். சிகிக்சை நல்லபடியாக முடிந்து மீண்டும் எத்தியோப்பியா திரும்புகையில் வழி அனுப்பி வைத்தேன். அவர் பெயர் மார்ஜரி எனத் தெரிந்துகொண்டேன்.

One Comment on “மடியில் கனம்/எம்.டி.முத்துகுமாரசுவாமி”

Comments are closed.