வீடு திரும்புதல் :கூத்தனூர் பயணம்/எம்.டி.முத்துக்குமாரசாமி

என்னுடைய ஃபேஸ்புக் பயணக்கதைகள் ஒன்றிற்கு கவிஞர் கலாப்ரியா ‘பயணங்கள் எல்லாமே வீடு திரும்புவதற்கே’ என்று பின்னூட்டமிட்டார். அதற்கு ஏதோ வேடிக்கையாய் பதிலெழுதினாலும் வீடு திரும்புதல் என்றால் என்ன என்ற கேள்வி என்னை அலைக்கழித்தது. இன்று காலை வீடு திரும்புதல் என்றால் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயத்துக்கு தல யாத்திரை செல்லுதல் என்று தோன்றியது.

திருவாரூருக்கு அருகில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு ஒரு முறை சென்றேன். சிறு குழந்தையாக இருந்தபோது அம்மா சரஸ்வதி படத்தின் முன் என்னை உட்கார்த்தி வைத்து ‘வெள்ளைக் கலையுடுத்தி, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாய்’ என்று மனனம் செய்யவைத்து தினசரி வழிபாட்டின் பகுதியாக மாற்றியதிலிருந்து சரஸ்வதியின் உருவம் மனதில் ஆழமாய் படிந்து விட்டது. ரவிவர்மா வரைந்த நாட்காட்டி சரஸ்வதியின் உருவமே அது. எப்போது சமஸ்கிருத சரஸ்வதி மந்திரம் ‘சரஸ்வதி நமோஸ்துப்யம் வரதே காமரூபினி, வித்யாரம்பம் கரிஷ்யாமி, சித்திர் பவதுமே சதா’ தினசரி வழிபாட்டின் பகுதியாயிற்று என்று நினைவில்லை ஆனால் சரஸ்வதி காமரூபினி என்ற எண்ணம் ஏற்படுத்தும் உவகையும் கிளர்ச்சியும் ஆச்சரியமானவை; ரவிவர்மாவின் ஓவிய சரஸ்வதியை காமரூபினி என்று எந்தவகையிலும் சொல்ல இயலாது. பாறையொன்றின் மேல் நான்கு கைகளோடு இரு கைகளில் வீணையையும், ஒரு கையில் தியான மாலையையும், மறு கையில் ஓலைச் சுவடிகளையும் வைத்திருக்கும் ரவிவர்மாவின் சரஸ்வதி ஒரு அம்மாமியின் முகத்தோற்றமும் சாந்தமும் உடையவள். மனதிற்குள் சொல்லும் ஸ்தோத்திரங்களுக்கும் வெளியில் இருக்கும் உருவப்படத்திற்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடு மனதினை ஒரு முகப்படுத்த விடுவதில்லை. வருடா வருடம் சரஸ்வதி பூஜையின்போது வசீகர சரஸ்வதி உருவமொன்றை கற்பிதம் செய்வது வழக்கமாக மாறிவிட்டது. பார்ப்பது ஒன்று அதன் மேல் நாம் கொள்ளும் கற்பிதம் வேறொன்று என்ற அ-யதார்த்த கலை சித்தாந்தம் எனக்கு உவப்பானதாக உறுதிபெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். சரஸ்வதியை காமரூபினி என்பது ஒரு அக ஊற்றினை, கண்ணுக்குப் புலப்படாத நதியினை, ஒரு பிரவாகத்தினை, ஒரு உயிரெழுச்சியை, உயிர் திளைத்தலை குறிப்பதாகும் என்று பதினைந்து பதினாறு வயதில் எனக்கு வசமாயிற்று. கம்பனின் சரஸ்வதி அந்தாதி காப்பில் வரும் “படிக நிறமும் பவளச் செவ்வாயும், கடி கமழ்பூந்தாமரை போற் கையுந்-துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமுந் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி” என்ற துதி அக ஊற்றின் அழகிய உருவம் என்பதாக எனக்கொரு எண்ணம் உண்டு. “சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை’ என்ற குமரகுருபரின் வரிக்கு கம்பனே சரியான உருவமளிக்கிறார் என்றால் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரே சரஸ்வதி உருவத்திற்கு “மந்திரத்தை முணுமுணுத்தேட்டை, வரிசையாக அடுக்கி, அதன் மேல் சந்தனத்தை, மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனையன்றாம்! வீடு தோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி, நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள், நகர்கள் எங்கும் பல பள்ளி” என்று அதற்குச் செயல் வடிவம் கொடுக்கின்றார்.

திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டம் என்றொரு கிராமம் இருக்கிறது. பூந்தோட்டத்தில் இருந்து கிளை பிரிகின்ற சாலையில் ஆரெழு கிலோமீட்டர் தூரத்தில் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயம் இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் பயணம் செய்வது என்பது ஒரு சுகானுபவம். சுத்தமான கிராமங்கள். பச்சைப் பசேல் என்று வயல்வெளிகள். சிற்றோடைகள், கால்வாய்கள் என்று நீர் சலசலத்து ஓடும் காட்சிகளும் சப்தங்களும் நம் கூடவே வருகின்றன. காற்றில் சுகம் தரும் ஈரப்பதம் நிரம்பியிருக்கிறது. மூலவர் சரஸ்வதி வெண்ணிற ஆடையில் வெண் தாமரையில் வீற்றிருக்கிறாள். இடது கைகளில் அமிர்த கலசமும் புத்தகமும், வலது கைகளில் அட்சர மாலையும் சின் முத்திரையும் தாங்கியிருக்கிறாள். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் மகாசரஸ்வதிக்கு மூன்று கண்கள். இரண்டாம் ராஜராஜ சோழன் ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கிய கிராமத்தில் ஒட்டக்கூத்தரின் பேரனான ஓவாதகூத்தர் மகாசரஸ்வதி ஆலயத்தை கி.பி.1185 ஆம் ஆண்டில் கட்டினார் என்பது வரலாறு.

ஒட்டக்கூத்தர் பேரன் கட்டிய ஆலயத்தில் ஒட்டக்கூத்தரின் இலக்கிய எதிரியான கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதியால் துதிக்கலாமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. ‘விநோதரசமஞ்சரியில்’ ஒட்டக்கூத்தருக்கும் கம்பருக்கும் நடந்த சோழ அரசவை அரசியல் சண்டைகள் யார் கவிச்சக்கவர்த்தி என்ற போட்டி எல்லாம் கதைகளாக்கப்பட்டிருக்கின்றன. கம்பருடன் ஒப்பிடுகையில் ஓட்டக்கூத்தரின் படைப்புகள் உப்புப் பெறாது. அவருடைய ‘மூவருலா’ மூன்று சோழ அரசர்களின் புகழ் பாடுவது; வராலாற்றுச் செய்திகளை அறியலாம். மற்றபடிக்கு பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. ‘தக்கையாகப் பரணியி’ல் விநாயகர் துதிக்கு பதிலாக வரும் பைரவர் துதி அபூர்வமானது. ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ அரும்பாக்கம் மணவிற்கூத்தன் என்ற விக்கிரமச் சோழனின் படைத்தலைவனின் புகழ் பாடுவது. ‘எழுப்பெழுபது’, ‘ஈட்டியெழுபது’ ஆகியன செங்குந்தர் வரலாறுகளைப் பாடுகின்றன. ‘எழுப்பெழுபதில்’ பன்னிரெண்டு பாடல்களே கிடைதுள்ளன. செங்குந்தர் வரலாறுகளை முதலில் ஒட்டக்கூத்தர் பாட மறுத்ததாகவும் செங்குந்தர் தங்கள் தலைகளை அறுத்துப் போட்டதால் ஒட்டக்கூத்தர் பாடல்கள் பாடி அவர்களை உயிர் மீட்டு எழுப்பியதாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன. ‘ஈட்டியெழுபதினை’த் தொடர்ந்து ‘களிப்பொருபது’, ‘செங்குந்தர் பிரபந்தத் திரட்டு’, ‘செங்குந்தர் துகில் விடு தூது’ ஆகிய பிற்கால நூல்கள் செங்குந்த மரபினைச் சொல்லும்போதே அந்தக்கால யாழ்ப்பாண- தமிழ்நாடு தமிழ் உறவுகளையும் சேர்த்துச் சொல்கின்றன. மந்திரசக்தியும், அரசவை கௌரவங்களையும் பெற்றிருந்த ஒட்டக்கூத்தர் தன் காலம் விஞ்சி நிற்காமல் போனது இலக்கியத்திற்கும் காலத்திற்கும் உள்ள விசித்திர உறவினை விளக்குகிறதென்றால் பத்து நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட இலக்கியச் சண்டையில் விளைந்த பலன் என்னவென்றால் கம்பரினால் ஓட்டக்கூத்தரின் பெயரும் விளங்குவதுதான். சரஸ்வதி என்ற பிரவாகம் கால ஓட்டத்தில் எவ்வெவெற்றை யார் யாரை எப்படியெல்லாம் இணைக்கும் என்று யாரே முன்கூட்டிச் சொல்ல முடியும்?

கூத்தனூர் சரஸ்வதி ஆலய தல புராணம் சகோதர சகோதரி மணம் புரிவதற்கான பண்பாட்டுத் தடையினைப் பேசுகிறது. சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது, கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்திய லோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துவிட்டனர். இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்தபோது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கு,” என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள்.
பிறவாமையே முக்தி என்ற மதிப்பீடு இருக்கின்ற சமூகத்தில் பிறப்பு சாபமாக அறியப்படுவதாக புராணக்கதை சொல்லப்படுவதில் வியப்பேதுமில்லை. ஆனால் சாப விமோசனத்திற்கே சாத்தியமில்லாமல் போய் பிரம்மனும் சரஸ்வதியும் இணையவே முடியாமல் போவது அபூர்வமான கதையாகும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தல புராணமும் இறைவனும் இறைவியும் திருமணத்தால் இணையமுடியாமல் போக கன்னி பகவதியாகவே அருள் பாலிப்பது குமரி தெய்மாகும்; ஆனால் அங்கே இறைவனும் இறைவியும் சகோதர சகோதரியாய் பிறந்ததாகக் கதை இல்லை. கன்னியாகுமரி தல புராணத்தைப் போன்ற தடைப்பட்ட திருமணமாக இருந்தாலோ அல்லது திருமணமே நடக்க இயலாத உறவு இருந்தாலோ கன்னியாக அம்மன் அருள் பாலிப்பது புராணமாக்கப்பட்டு கன்னி சக்திகள் அபூர்வ கிரியா சக்தி கொண்டவைகளாக நம்பப்படுகின்றன. கூடுதலின் சாத்தியமே அற்ற கன்னிதான் காமரூபினி என வருணிக்கப்படுகிறாளோ? கூத்தனூர் சரஸ்வதி படைப்பின் எல்லையற்ற அறிவை இணைய இயலாதவளாக, ஆனால் அதற்கான கிரியையை சதா தூண்டிவிடக்கூடியவளாக இருப்பவளை அருள்பாலிப்பவள் என்றில்லாமல் வேறு எப்படி விவரிப்பது? அந்த சக்தியை எப்போதும் உள்ளூரக் கனன்றுகொண்டிருக்க வைப்பது எப்படி?

படைப்பூக்கத்தின், அறிவின், மரபான உள்க்கட்டமைப்பு என்ன என்பதினை அறிவதில்தான் ஊர் திரும்புதல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். வாக்கின் தேவி, சாரதா, கலைமகள், கலைவாணி என்ற பெயர்களெல்லாம் ரவி வர்மா ஓவியத்தில் தேவி அணிந்திருக்கும் வெண் பட்டினை ஸ்பரிசிப்பது போன்ற உணர்வுகளை உருவாக்க கூத்தனூர் கோவில் வாசல் கடைகளிலோ புட்டா போட்ட வெள்ளை சுங்கடிச் சேலைகளைப் பார்த்தேன், பிரார்த்தனைக்காக அந்தச் சேலைகளை வாங்கி சாத்துகிறார்கள். தளையும் வெண்பட்டின் மென் புலன் வருடல் சட்டென்று நீங்கி சுங்கடிச் சேலையின் கஞ்சி மொடமொடப்பின் தீண்டலில் புலன் நவீனமாகியது. கோவில் வாசல் கடைத்தெரு முழுக்க நோட்டுப்புத்தகங்களையும் பேனாக்களையும் பென்சில்களையும் விற்கும் கடைகள் நிறைத்திருக்கின்றன. தகடுகளில் வரையப்பட்ட சரஸ்வதி எந்திரங்களும் விற்கப்படுகின்றன. கடைகளிலிருந்து கோவிலுக்குள் செல்வதும் மீண்டும் கடைகளைப் பார்வையிடுவதுமாய் பல தடவைகள் சென்று வந்துகொண்டிருந்தேன். கூத்தனூர் மகாசரஸ்வதி கோவிலை விட்டு கிளம்ப மனம் வரவில்லை.

சரஸ்வதிக்கு என ஒரு துதி எழுதினேன்:
சரஸ்வதி வந்தனம்
நீர்க்கர்ப்பத்தின்
சுழுமுனை
இமை திறக்க
செவி குளிர
முதுமொழிக்காவிய தெளி பாடல்
வீணையின் மீட்டலுடன்
நாளொன்று எழ
முக்குணக் கடல் தாண்டி
முகிழ்க்கும் கமலப்பூ
உன் கால் விரல் தீண்டலால்
வெண்மைப் பேரொளி பரப்ப
புவியும் நீ
மறிபுனலும் நீ
கனலும் நீ
வளியும் நீ
வெளியும் நீ
மனமும் நீ
நீ நீயென
தானழிப்பாய் மாதோ
யாதோ உன்
நித்திய கிருபையென
உன் பிணை விழியால்
கலை பல அமுதத்தாரையாய்
அகிலம் நிறைக்க
மங்கல போகம் நகை வீச
பிராவகம்
இடுகாடு தாண்டியோட
மேனி முயங்கு தொறும்
தடுத்தாட்கொள்வாய்
என்
சாரதே

காலம் எனும் மாயை/ எம்.டி.முத்துக்குமாரசாமி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

ஈறு/எம்.டி.முத்துக்குமாரசாமி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)