காலம் எனும் மாயை/ எம்.டி.முத்துக்குமாரசாமி



என் அம்மா பெரிய படிப்பாளி. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமாக வாசிப்பார்கள். சிறுவனாக என்னுடைய முக்கிய பணிகளில் ஒன்று நூலகங்களுக்குச் சென்று அம்மாவுக்கு கூடை கூடையாக புத்தகங்களை எடுத்து வருவது. மில்ஸ் அண்ட் பூன்ஸ், துப்பறியும் கதைகள், கிளாசிக்ஸ் என எல்லாவற்றையும் வாசிப்பார்கள். வாசித்த நூல்கள் அம்மாவுக்கு பிடித்திருந்தால் என்னை, “ It is nice to have you around” என்று பாராட்டுவார்கள். அதைவிடப் பெரிய பாராட்டு எனக்கு வாழ்க்கையில் கிடைத்ததே இல்லை. அந்த பாராட்டுக்கு ஏங்கி ஏங்கியே நான் அம்மாவுக்கு வெவ்வேறு வகை நூல்களை நூலகங்களில் இருந்து எடுத்து வருவேன்.
அம்மாவின் மேற்சொன்ன மிகப் பெரிய பாராட்டு எனக்கு ஜூல்ஸ் வெர்னின் , உலகைச் சுற்றி எண்பது நாட்கள் (Around the world in eighty days) நூலை எடுத்துவந்தபோது கிடைத்தது. நானும் அந்த நூலை எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது வாசித்தேன். அப்போதுதான் எனக்கு உலகை ஒரு முறையாவது சுற்றி வந்துவிடவேண்டும் என்ற ஆசை மனதை உறுதியாகப் பீடித்துக்கொண்டது.
ஆனால் உலகை எதற்காகச் சுற்றி வரவேண்டும் என்று தெரியாமலேயே இருந்தது. திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிலும் போது எங்களுக்கு பேராசிரியர் ரிச்சர்ட் என்று ஒருவர் பிரமாதமாக வகுப்புகள் எடுப்பார். ரிச்சர்ட் டி.எஸ்.எலியட்டின் கவிதைகளை எங்களுக்குப் பயிற்றுவிக்கும்போது விவிலியத்தின் வரும் தோத்திரப்பாடல் (psalm) “ I am a stranger who walked on this earth” என்பதைப் பற்றி மறக்கமுடியாத உரை ஒன்றை ஆற்றினார். நாம் எதற்காக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் உலகைச் சுற்றிப்பார்க்க என ரிச்சர்ட் அவருடைய உரையை முடித்ததாக நினைவு. நான் எனது டைரியில் இவ்வாறாகக் குறித்து வைத்தேன், “இந்த பூமி உருண்டையை ஒரு முறையாவது சுற்றி வந்துவிட வேண்டும். எதற்கு? ஒரு குழந்தை திருவிழாவை பராக்கு பார்ப்பது போல பராக்கு பார்ப்பதற்கு”.
2002 ஆம் வருடம் உலகை அறுபது நாட்களில் சுற்றி வரும் பயணம் எனக்கு அமைந்தது. சென்னையிலிருந்து சிங்கப்பூர், டோக்கியோ,அமெரிக்காவில் சியாட்டில் பிறகு அங்கிருந்து தரைமார்க்கமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை பின் நியுயார்க், பாரீஸ், லண்டன், சென்னை என்பதாகப் பயணம்.
பயணம் முடிந்த பின்பு கணக்குப் பார்த்தால் மொத்தமாக அறுபத்தி ஒன்றரை நாட்கள் ஆகியிருந்தன. பயணம் செய்ததோ அறுபது நாட்கள்தான்.
எங்கேயிருந்து சேர்ந்தன இந்த ஒன்றரை நாட்கள்? என்னுடைய டிராவல் ஏஜெண்ட் சொன்னார்; “ நீங்கள் கிழக்கிலிருந்து மேற்கு வழியாக உலகைச் சுற்றி வந்தததால் வாழாமலேயே ஒன்றரை நாட்களை உங்கள் வாழ்நாட்களில் இழந்துவிட்டீர்கள்”
மீண்டும் உலகைச் சுற்றி வரும் சந்தர்ப்பம் 2004 இல் அமைந்தது. இந்த முறை சென்னை, பஹ்ரைன், வாஷிங்டன் டி.சி., பென்சில்வேனியா, லாஸ் ஏஞ்செலஸ், கோலாலம்பூர், சிங்கப்பூர், சென்னை என பயண நாட்கள் 35 ஆனால் பயணம் செய்து முடித்தபோது 34 நாட்கள்தான் ஆகியிருந்தன. என் டிராவல் ஏஜெண்ட் சொன்னார்,” இந்த முறை நீங்கள் மேற்கு வழி கிழக்கிற்கு பயணம் செய்ததால் போன முறை இழந்த ஒன்றரை நாட்களில் ஒரு நாள் உங்களுக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது.”
நான் கவிதைகளிலும் கதைகளிலும் அவ்வபோது மாயையின் தொடுகை என்று எழுதுகிறேன் உண்மையில் மாயை என்பது வாழாமலேயே இழந்துவிட்ட நாட்களும் வாழ்ந்தும் சேர்ந்துவிட்ட நாட்களும்தான்.