ஈறு/எம்.டி.முத்துக்குமாரசாமி

எனக்கு நான் நினைப்பதை அவளிடம் சொல்லாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது; சொல்வதற்கோ தயக்கமாக இருந்தது. நான் ஜெர்மனியில் வுர்ஸ்பர்க் நகரில் பல்கலைக்கழகம் ஏற்பாடு

எனக்கு நான் நினைப்பதை அவளிடம் சொல்லாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது; சொல்வதற்கோ தயக்கமாக இருந்தது. நான் ஜெர்மனியில் வுர்ஸ்பர்க் நகரில் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நகரின் மத்தியில் இருந்த ஸ்டுடியோ அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன். காலையில் ஐந்து அல்லது ஐந்தரை மணி வாக்கில் எழுந்து என் இரண்டாவது மாடி அபார்ட்மெண்டில் இருந்து கீழே இறங்கி இடது புறம் குறுக்குச் சந்தின் வழி நடந்து சென்றால் வுர்ஸ்பெர்க் நகரில் ஓடும் மெய்ன் நதியை அடைந்து விடலாம். மெய்ன் என்ற பெயருடைய அந்த நதி தாமிரவருணியைப் போல வராது என்றாலும் எனக்குப் பிடித்த நதி. அதன் கரையில் அழகாக அமைக்கப்பட்ட சாலையில் காலை நடை போய்விட்டு திரும்பி பிரதான சாலையைப் பிடித்தேன் என்றால் என் வீட்டுக்கு நேரெதிரில் உள்ள பேக்கரிக்கு வந்து விடலாம். அந்த பேக்கரியில் காலை உணவு சாப்பிட்டு விட்டு என் அபார்ட்மெண்டுக்கு வந்து குளித்து உடை மாற்றி பல்கலைக்குக் கிளம்பிச் செல்ல நேரம் சரியாக இருக்கும்.
அந்த பேக்கரியில்தான் கிரெட்டா வேலை செய்தாள். காலை ஐந்து மணிக்கு நான் காலைநடைக்கு புறப்படும்போது பேக்கரியை அவள்தான் திறப்பாள். கிரெட்டா துருக்கியிலிருந்து வந்தவளாக இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. ஜெர்மானிய பேக்கரி, ரெஸ்டாரெண்டுகளில் துருக்கி, அல்பேனியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தோரும் இப்போது சிரியாவிலிருந்து அகதிகளாக வந்தோர் பலரும் வேலை செய்வதைப் பார்க்கலாம். கிரெட்டாவின் கறுப்புக் கூந்தலை வைத்து நான் அவள் துருக்கியர் என கணித்திருந்தேனே தவிர அவள் ஜெர்மானியப் பெண்ணாகக்கூட இருக்கலாம்.

காலையில் நான் நடைக்குக் கிளம்பும்போது அவள் பார்த்துவிட்டால் உற்சாகமாகக் கையை ஆட்டுவாள்; பல்கலையிலிருந்து திரும்பி வரும்போது பேக்கரி நிறுத்தத்தில் இறங்கி நான் என் வீட்டுக்குச் செல்ல சாலையைக் கடக்க காத்திருக்கும்போதெல்லாம் என்ன காஃபி குடிக்க வரவில்லையா என சைகையில் கேட்பாள்.


கிரெட்டாவுக்கு ஆங்கிலம் ஓரளவுதான் தெரியும்; தத்தி தத்திப் பேசுவாள். எனக்கு ஜெர்மன் பத்து வாக்கியங்கள் பேச வந்தாலே பெரிது. முதல்த் தடவை நான் அவளிடம் நான் vegan என்று சொன்னதுதான் அதற்குப் பிறகு தினசரி எனக்கு முட்டை கூட சேராத ரொட்டி வகைகளில் புதியன எதுவோ அது, பால், பழச்சாறு, நறுமணம் மிக்க எத்தியோப்பிய கடுங்காஃபி, என தினம் ஒரு வகை என சேர்த்து பிரமாதமான காலை உணவு தயார் செய்துவிடுவாள். அந்த பேக்கரி self service என்றாலும் நான் ஸ்பெஷல் என்பது போல அவளே வந்து சிரித்தபடி பரிமாறுவாள். நானும் என் துறை பேராசிரியர் எலிசெபத்தும் அந்த பேக்கரியில் காஃபி அருந்தியபோது கிரெட்டாவை எலிசெபத்துக்கு அறிமுகப்படுத்தி என்னை அவள் சிறப்பாக கவனித்துகொள்வதைச் சொன்னேன். சனி ஞாயிறுகளில் பேக்கரி விடுமுறை என்பதால் சிரமப்படுவதாய் அப்போது சொன்னேன். அதிலிருந்து வெள்ளி காலைஉணவுக்கு பேக்கரிக்குப் போகும்போதே நான் வார இறுதியில் ஊரில் இருக்கிறேனா அல்லது பக்கத்தில் எங்காவது பயணம் போகிறேனா என்று கேட்டுக்கொள்வாள் பின் அதற்கேற்றாற்போல் வெள்ளி இரவே என் அபார்ட்மெண்ட் கதவுப்பிடியில் தொங்கவிட்டுள்ள பையில் உணவுப் பொட்டலங்களை வைத்துவிடுவாள். கூடவே எதை எதை மிதமாகச் சூடு பண்ணி சாப்பிட வேண்டும், எதை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டும், எதை அப்படியே சாப்பிடலாம் என்ற குறிப்பும் இருக்கும். கிரெட்டா அசப்பில் ஹாலிவுட் நடிகை அன்ன் ஹாதவே போலவே இருப்பாள்; கூந்தல் மட்டும் கறுப்பு. நான் இப்படி ஒரு அழகு தேவதை என்னை இப்படி கவனித்துக்கொள்கிறாளே என என் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழாத நாட்களே இல்லை.

ஊர் திரும்புவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பு நதியோர காலை நடையின் போது கிரெட்டாவிடம் நான் என் மனதில் நினைத்ததை சொல்லிவிடுவது எனத் தீர்மானித்தேன். கவி ரில்கே நம் வெளிப்பாடுகள் எல்லாம் நதியோட்டம் போலவும், குழந்தைகளின் பேச்சு போல சுதந்திரமானவையாகவும் இருக்க வேண்டும் என போதித்திருக்கவில்லையா, என்ன?

அன்றைக்கு வழக்கமாக கிரெட்டா எனக்கு காலை உணவு பரிமாறும்போது ‘கிரெட்டா உன்னிடம் நான் ஒன்று சொல்லவா’ என்றேன். அவள் என்ன என்பது போல பார்த்தாள். ‘கிரெட்டா நீ ஈறு தெரிய புன்னகைக்கும் போதும் சிரிக்கும்போதும் பேரழகுடன் இருக்கிறாய். இப்படி ஒரு சிரிப்பை, புன்னகையைப் பார்ப்பதால் என் நாள் முழுவதும் இனிமையாக இருக்கிறது. உன் சிரிப்பு தெய்வீகமானது’. காஃபியை என் கோப்பையில் ஊற்றிக்கொண்டிருந்த கிரெட்டாவின் கை அப்படியே நின்றுவிட்டது; அவள் முகம் இருண்டுவிட்டது; உதடுகள் சுருங்கி கோணலாகிவிட்டன. கையிலிருந்த கூஜாவை அப்படியே என் மேஜையில் வைத்துவிட்டுப் போய்விட்டாள். அன்றைக்கு நான் கவுண்ட்டருக்குப் போய்தான் சாப்பிட்ட பில்லை கட்ட வேண்டியிருந்தது.

அடுத்த இரண்டொரு நாட்கள் கிரெட்டா என்னோடு பேசவில்லை. எனக்கு வேண்டிய உணவை எடுத்து வைத்திருப்பாள் ஆனால் வழக்கம் போல பரிமாற வரவில்லை. நான்தான் போய் என் தட்டை எடுத்துவர வேண்டும், நான் போய்தான் பில் கட்டவேண்டும் அவள் வந்து வாங்கமாட்டாள். எனக்கு அதன் பிறகு என்ன காரியம் செய்துவிட்டோம் என மன வேதனை தாள முடியவில்லை. சும்மா வாயை மூடிக்கொண்டிருந்தால் எல்லாம் ஒழுங்காகப் போயிருக்குமே என மனதிற்குள்ளாகவே குமைந்துகொண்டிருந்தேன். என்ன அப்படி தப்பாக சொல்லிவிட்டேன் என்றும் தெரியவில்லை. இரவுகளில் தூக்கம் வரமால் அவதிப்பட்டேன்.
நாலைந்து நாட்கள் கழித்து கிரெட்டா எனக்கு பரிமாற வந்தாள். வந்தவள் என்னெதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். வேறெங்கோ பார்த்துக்கொண்டே

“நீ அன்றைக்குச் சொன்னது உண்மைதானா?” என்று கேட்டாள்.
“எது”
“ அதான். நான் ஈறு தெரிய சிரிப்பது அழகாயிருக்கிறது என்று சொன்னது”
“சத்தியமாக உண்மைதான். நீ சிரிக்கும்போது பேரழகுடன் இருக்கிறாய்”
“என்னிடம் வேறு யாருமே இதைச் சொன்னதில்லை தெரியுமா?”

அவள் கண்கள் பனித்திருந்தன. என்னை தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் பொய் சொல்கிறேனோ என்ற சந்தேகத்தோடே என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் என் அலைபேசியை எடுத்து அன்ன் ஹாதவே புகைப்படத்தைத் தேடி எடுத்தேன். “இதோ பார் இவள் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகை; இவள் கூட ஈறு தெரியத்தான் சிரிக்கிறாள். என்ன அழகாய் இருக்கிறாள் பார். நீ இவளை விட அழகாக இருக்கிறாய்”


அவள் ஓரளவு சமாதானமடைந்தது போல இருந்தது. கிரெட்டா தான் ஈறு தெரிய சிரிப்பது அசிங்கமாய் இருப்பதாய் நினைத்ததாகவும் அதனால் dental correction procedureக்குக் கூட ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னாள். அதற்கு மிகவும் செலவாகும் என்பதால் தான் பணம் சேமித்து வருவதாகவும் சொன்னாள். அவள் திக்கித்திணறி சொன்னதை பொறுமையாகக் கேட்ட பின் அந்த மாதிரி correction எல்லாம் தேவையில்லை. நீ தேவதை போல அழகாக இருக்கிறாய் என்று மீண்டும் மீண்டும் சொன்னேன்.

அதன் பிறகு எல்லாம் மீண்டும் சகஜ நிலைக்குதிரும்பிவிட்டன. அவள் வழக்கம் போல பரிமாறுவது பேசுவது சிரிப்பது என்றிருந்தாள் நான் ஏனோ சிறிய விலகுதலை உணர்ந்தேன்.

அன்று கிரெட்டா என் மேஜைக்கு வந்து ஒரு கவரை என்னிடத்தில் கொடுத்தாள். இதை இங்கே வைத்து திறந்து பார்க்காதே அப்புறம் வெளியில் சென்று பார் என்றாள். நான் அந்தக் கவரை என்னுடைய பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.

நான் ஊர் திரும்ப வேண்டிய நாள் நெருங்கிவிட்டதால் விருந்துகள், public lectures, மாணவ மதிப்பீடுகள், ஆய்வு மாணவர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் என பணி மிகுதியில் மூழ்கிவிட்டேன்.

ஊர் திரும்பும் விமானத்தில் என்னுடைய போர்டிங் பாசெல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று சரி பார்க்கையில் என் கோட் பாக்கெட்டில் கிரெட்டா கொடுத்த கவர் பிரிக்காமல் இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தேன் அதில் பல் மருத்துவமனையொன்றின் பல் மற்றும் ஈறு correction procedure அப்பாயிண்ட்மெண்ட் ரத்து செய்யப்பட்ட கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தின் மூலையில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் கிரெட்டாவின் கையெழுத்தில் “ உனக்கு என் ஃபோன் நம்பர் வேண்டுமா?” என்று எழுதப்பட்டிருந்தது.

காலம் எனும் மாயை/எம் டி முத்துகுமாரசுவாமி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)