அந்த மாறு கண் தையல்காரப் பெண்/வண்ணதாசன்

அந்த மாறு கண் தையல்காரப் பெண்ணின்
சிரிப்பை, ஏற்கனவே, ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன்.
ஒரு வயதுக் குழந்தை ஒன்றுக்கான பட்டுப் பாவாடையும், சட்டையும் அவரிடம் தைப்பதற்குக் கொடுத்திருந்தோம். இரண்டு நாட்களுக்கு முன்பே வாங்கியிருக்க வேண்டும்.
நேற்றுப் போனேன். கடை அடைத்துக் கிடந்தது. சாம்பல் புதன் கிழமை விடுமுறை போல. இன்று போனேன். எங்கோ பார்த்துக்கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். சாயுங்காலம் வாங்கிக்கொள்ள முடியுமா என்றார்கள். சரி என்றேன்.
மீண்டும் ஐந்துமணிக்குப் போனேன். அதே மாறு கண் சிரிப்பு. வேலை முடியவில்லை ஆறு மணிக்கு வந்தால் தயாராகிவிடும் என்றார்கள். சற்று அலுப்பாக இருந்தது. ’ஏழு மணிக்கு வருகிறேன்’ என்றேன். அதற்கும் சிரித்தார்கள்.
ஏழே காலுக்குத்தான் போனேன். அவர் முன் போய் நின்றேனே தவிர, வேறு எதையும் கேட்கவில்லை. அவரும் ஒன்றும் சொல்லவில்லை. ஐந்து நிமிடம் என்பது போல தன் விரல்களால் கேட்டுக்கொண்டார்.
நான் வெளியே வந்து பக்கத்தில் இருந்த புகைப்பட ஸ்டுடியோ, பூட்டிக் கிடந்த மருந்துக் கடை, கைபேசியில் பேசியபடி , இலவச வண்ணத் தொலைக்காட்சிபெட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த முடி திருத்தகம், முக்குக் கடையில் வால் வாலாகத் தொங்கிய பிங்கோ, சாக்கோ பைகள் என்று இருந்தேன். வேப்பமரத்தின் வெடித்த பட்டைகளின் இடையே இருந்து ஒரு தலைகீழ்ப் பல்லி என்னைப் பார்த்தது. எந்த நேரமும் நான் கவ்வப் படலாம்.
அப்போதுதான் அந்த ஆட்டோ வந்து நின்றது. யாரும் இறங்க வில்லை. ஓட்டுநர்தான் சிரமப்பட்டு, தன் உடலைத் திருகிப் புரட்டிக்கொள்வது போல் குனிந்தார். அவர் இருக்கையில் இருந்து இடது கையை ஊன்றி ஆட்டோ விளிம்புக்கு மாறினார். இடுப்பில் இருந்த கைலியை மேலே ஏற்றி மடித்துக் கட்டிவிட்டு. காக்கிச் சட்டையைத் தொட்டுப் பார்த்தார். தவழ்வது போல, தொய்வான இடது காலுடன் வலது காலால் இறங்கினார். நகர்ந்தவாக்கில் தையல் காரப் பெண்ணின் மேஜையில் ஊன்றின கையால் எழுந்துநின்று, சட்டைப்பையில் இருந்து, அந்த சிவப்பு தையல்கடை அட்டையை எடுத்து நீட்டினார்,.
மகளுக்கான சுரிதார் போல. ’பாப்பாவுக்கு’ என்று சொல்லிச் சிரித்தார். கைலியை உயர்த்தி கால் சட்டைப் பையில் இருந்து பணம் எடுத்து நீட்டினார். மேஜையில் இருந்த பையில் துணியைச் சரிபார்த்துக் கொண்டார். ;சரியா இருக்கா மேடம்?’ என்றார். ‘பரவாயில்லை இருக்கட்டும்’ என்று பணத்தை எண்ணிக்கொண்டிருந்த விரல்களுடன் மாறு கண் சிரித்தது. குறைந்தது போல.

குறையுதா?’ என்று கேட்டுவிட்டு காக்கிச் சட்டையைத் துளாவினார். எடுத்துக் கொடுத்தார். ’ஸாரி மேடம். சரியா எண்ணிப் பார்த்துக் கொடுத்துருக்கணும்’ என்று சிரித்தார். கும்பிட்டார். தரையில் நகர்ந்து வெளியே வந்தார்.
என்னைப் பார்த்தார். முன் பின் தெரியாத எனக்கு வணக்கம் வைத்தார். ‘பாப்பாவுக்கு தைக்கக் கொடுத்திருந்தேன்’ என்று சிரித்தார். ‘தையல் நல்லா இருக்கும்’ என்று கும்பிட்டு விடை பெற்றார்.
எனக்குக் கஷ்டமாக இருந்தது. அவர் மீண்டும் எப்படி ஆட்டோவில் ஏறி அமர்கிறார் என்பதைப் பார்க்கவில்லை. வண்டி புறப்படும் சத்தம் உறுதியானதும் , வாகனம் நின்ற இடம் காலியாவதை, பார்க்காமலே உணர்கையில், ‘பாப்பாவுக்கு’ என்று சொல்லும் போது அவர் சிரித்த சிரிப்பு தெரிந்தது.
மாறு கண் சிரிப்பு போல ,இந்த ‘பாப்பாவுக்கு’ சிரிப்பைப் போல/ உலகத்தில் இன்னும் எத்தனை சிரிப்புகள் இப்படி இருக்கின்றன, இன்னும் கவிதையில் எழுதப்படாமல்
%
2015
நன்றியுடன் ஜாய் டெய்லர்ஸ்
திசைக்கு.