பண்டித விசாலாக்ஷி அம்மாள் பற்றி விரிவாக எழுதவேண்டும். அவரது பல (சிறுநாவல்) புத்தகங்களில் சில இன்றைக்குக் கிடைக்கின்றன. அவற்றை நூலகங்களிலிருந்து எடுத்து ஒரு தொகுப்பாவது கொண்டுவரவேண்டும். இப்படிச் செய்வது இலக்கியத்தரம் பற்றியதாக இல்லாமல் சமூகவரலாற்று இலக்கிய நோக்கானதாகவே இருக்கும். நிற்க.
ஒரு விஷயம் பற்றி மட்டும் இப்போது பார்ப்போம்.
ஆரம்ப கட்ட பெண் எழுத்தாளர்களில் விசாலாட்சி என்ற பெயரில் பலர் இருந்துள்ளார்கள். பத்திரிகை, கதை இலக்கியம் என்ற நோக்கில் 3 பேர் முக்கியம் பெறலாம். ஹிதகாரிணி பத்திரிகை நடத்தி பதிப்பக நூல்களை வெளியிட்ட பண்டித விசாலாக்ஷி அம்மாள் இவர்களில் முக்கியமானவர். இருபதுக்குமேல் (சிறு)நாவல்களை ஒரு சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டவர்.
மற்றொரு விசாலாட்சி, சக்தி கோவிந்தன் வெளியிட்ட மங்கை என்ற பத்திரிகைக்கு குகப்ரியைக்குப் பின் ஆசிரியராக இருந்தவர். இவர் சில கதை, கட்டுரைகளை மட்டும் எழுதியவர். அல்லயன்ஸ் வெளியிட்ட கதைக்கோவையில் வந்த விசாலாட்சி இவராக இருக்கலாம்.
மூன்றாமவர் மாதவையாவின் மகள் விசாலாட்சி அம்மாள் (காசினி). இவர் மாதவையாவின் பஞ்சாமிர்தம் இதழில் சில கதைகளை எழுதியிருக்கிறார். மாதவையா குடும்பத்தார் ஆறுபேரின் 12 கதைகளை தினமணி காரியாலயம் முன்னிலா (1944) என்ற பெயரில் வெளியிட்டதில் இவருடையதும் சேர்க்கப் பட்டுள்ளது.
காவ்யா பதிப்பகம் பஞ்சாமிர்தம் இதழைத் தேர்ந்தெடுத்த படைப்புகளோடு வெளியிட்டுள்ளது. மீனாட்சி தியாகராஜன் தொகுத்துத் தந்தது. அவரது மறைவுக்குப்பின் வெளிவந்துள்ளது பதிப்பகக் குறிப்பு அவர் மாதவையாவின் பேத்தி என்கிறது. (ஆனால் மகளைத்தான் அப்படி மாற்றிக்குறிப்புடுகிறாரோ என்ற சந்தேகம் – அவரது முதியவயதுப் புகைப்படம், மீனாம்பாள் என்று (மீனாட்சி தியாகராஜன்) மாதவையாவுக்கு மகளிருந்த தகவல் என்னைக் குழப்புகிறது. அறிந்தவர் தெளிவிக்கவும். காவ்யா
அரிய விஷயங்களையச் செய்தாலும் எப்போதுமே பிழைகளோடுதான் செய்யும் )
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.
தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிலர் கொண்டுவந்திருக்கிறார்கள். விகாஸ் பதிப்பகத்தில் க.நா.சுப்ரமணியம் கொண்டுவந்த தொகுப்பு நினைவுக்கு வருகிறது. (மற்றபடி இந்தியக் கதைத் தொகுப்புகளில் தமிழக்கும் ஒரு இடம்கொடுத்து பென்குவின் போன்ற பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. பிரெஞ்சில் எம். கண்ணன் முயற்சியில் வெளிவந்த தொகுப்பும் குறிப்பிடத்தகுந்தது.) வேறு வந்திருக்கலாம்.
சமீபத்தில் திலீப்குமார் (சிறுகதையாசிரியர், புத்தக விற்பனையாளர், அயல் தொடர்பு கொண்டவர், நல்ல நண்பர்) முக்கிய வெளிநாட்டுப் பதிப்பகத்தில் Tamil Story என்ற தொகுப்பைத் தேர்ந்து பிரசுரித்திருக்கிறார். அது (குறிப்பிட்ட சிலர் சேர்க்கப்பட்டு முக்கிய சிலர் விடுபட்டு இருந்தாலும்) நல்ல ஒரு பாராட்டத்தக்க முயற்சி. அதில் ஆரம்ப கட்ட பெண் எழுத்தாளர் மூவரை அரிதாக முயன்று தேடிக் கண்டுபிடித்து மொழிபெயர்க்க வைத்துச் சேர்த்துள்ளார். (இதுபற்றித் தெரிந்து நான் அந்தக் கதைகளைப் பற்றித் தகவல் விசாரித்துள்ளேன். எங்கே கிடைக்கும், கிடைத்தன என்ற தகவலை மட்டும் சொன்னார். மூலங்களைப் பிரதியெடுத்து அனுப்பக்கோரியும் அவரால் அது இயலவில்லை.)
புத்தகம் வந்தபின் ஆவலுடன் அந்த மூன்று கதைகளையும் தேடிப்பார்த்தேன். (பின்பு நானே தேடிப்பிடுத்து வைத்திருந்தவைதான் அவை) . அவற்றில் விசாலாட்சி அம்மாள் பெயரில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருந்த கதை ‘மூன்றில் எது?’. ஆனால் அந்த விசாலாட்சி மாதவையாவின் மகள் என்று தெரியாமல், புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றிய பின்குறிப்பில் பண்டித விசாலாட்சி அம்மாளின் வாழ்க்கைக் குறிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்தக் கதை பற்றி புதுமைப்பித்தன் தன் சிறுகதை பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். மீனாட்சி தியாகராஜன் தொகுத்த பஞ்சாமிர்தம் என்ற தொகுப்பில் இந்தக் கதை சேர்க்கப்பட்டு, தொகுப்புரையில் அவர் தமது குடும்பத்தவர் என்றும்
மாதவையாவின் மூன்றாவது மகள் என்றும் இனம் காட்டப்பட்டுள்ளது. பண்டித விசாலாக்ஷியும் வி என்ற முன்னொட்டு (தந்தை) உள்ளவர். இந்த விசாலாட்சியும் வி என்று முன்னொட்டு (கணவர்) உள்ளவர். இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதே..
தமிழில் அச்சுப்பிழைகள், தகவல் பிழைகள் நேர்வது சகஜம். தவிர்க்கமுடியாதவை. வெளிநாட்டாருக்குக் கிடைப்பது போன்ற வசதி வாய்ப்புகள் நமக்கில்லை. எனவே பிழைகள் வரலாறாகவே மாறுவது தமிழில் சகஜம் திருத்தம் சொல்வதும் சங்கடப்படாமல் திருத்திக்கொள்ள முயற்சி செய்வதும் நல்லதுதானே?
