
குருமணி டீச்சர் குளித்துக் கொண்டிருக்கும் போது மழைச் சத்தம் கேட்டது.
மார்ச் மாத மழை என்று சொல்லிக்கொண்ட சமயம்
ஒரு தவளை என சோப் கைக்குள்ளிருந்து துள்ளிவிழுந்தது.
குருமணி டீச்சருக்கு அமுதாவிடம்
மழை பற்றிப் பேச நேரமில்லை.
ஏற்கனவே எடுத்துவைத்திருந்த புடவையையைத் தவிர்த்தாள்.
மழை வேறொன்றை உடுத்தச் சொன்னது.
குருமணி டீச்சர் ஒரு கால் மாற்றி
மறுகாலில் ஆடும்
பழங்குடி நடனத்தை சிலதடவை ஆடினாள்.
மொபைலில் ஒரு செல்ஃபி எடுத்து மகளுக்கு அனுப்பினாள்.
சாப்பிடவேண்டாம் என்று தீர்மானித்த போது
பூச்செடிக்குப் பக்கமிருந்து பசித்த பூனை கூப்பிட்டது.
நடந்து போகிற தூரம்தான் குருமணி டீச்சரின் பள்ளிக்கூடம்.
இன்று டீச்சர் சுற்றுப் பாதையில் போவது எனத் தீர்மானித்தாள்.
தோட்டக்காடு முழுவதும் மழையில் நனைந்த வேப்பஞ் சருகாகக் கிடக்கும்.
குருமணி டீச்சருக்குப் பிடித்த பூவரசு மரம் ஒன்று வரும்.
இன்று மழையில் நனைந்த பூவரசம் பூக்கள்
அவளுக்கு ஏதாவது சில கற்றுத் தரும் என குருமணி டீச்சர் நம்பினாள்.
நடையை விட்டு இறங்கியதும் அவர் பார்த்த
காக்கை கொத்திய பப்பாளிப் பழத்தின் திறந்த காயத்தில்
வரிசை குலையாமல் அடுக்கப்பட்டிருந்தன திரட்சியான கருப்பு விதைகள்.

பப்பாளி பழத்தின் திறந்த காயம் என்கிற சொல்லில் ஒளிந்து கொண்டிருக்கிறது இந்த கவிதை. அவர் அரசர். அப்படித்தான் எழுதுவார்.
— கானப்ரியன்
சொட்டு சொட்டாக….அழகு மழையாக . படித்தவுடன் சட்டென மனது கவிஞனாக முயற்சிக்கிறது.
அழகின் அவதானிப்பை அநாயாசமாக விவரிப்பது கல்யாண்ஜி கவிதை என்றால் அதை விமர்சிக்கிற வாய்ப்பு வெடித்த பப்பாளியாய் எனக்குக் கிடைத்த பேறு..உச்சத்தை உச்சி முகிர ஒரு க்ஷணத்தில் மேகமாகிறேன்.