ஜெயதேவன் கவிதை

வெறும் தர்க்கங்களால்
சின்னச் செடியைக் கூட
வளர்க்க முடியாது

வரட்டுத் தத்துவங்களால் கவிதை
ஒரு நீர்க்குமிழி உடைவதை
தடுத்துநிறுத்த முடியாது.

பூசாரியின் மந்திரங்கள்
சிலைமீது படிந்த அழுக்கைக்கூட
கழுவிடாது

பிரச்சாரங்களினால்
மஞ்சள் நதியில் பற்றிய தீ
தாமிரபரணியில் எரியாது

சொற்கள் வெறும் இறகுகள்
செயல்மட்டுமே ஒரு புறா நிகர்

மெளனத்தை மட்டுமே
உஜ்ஜையனி மலை பேசியதால்தான்
காளிதாசன் கவிஞனாயிருக்கிறான்.

பியானோவின் பல் வரிசை
அமைதி காத்தது.
பீத்தோவன் அதிலிருந்து
எடுத்துக் கொண்டான்
தன் ” சொனட்”டாவை

இரண்டு சொற்களுக்கு
இடையேதான் உள்ளது
உண்மையான கவிதை
இரண்டு உதட்டுக்கு நடுவேதான்
ஒரு பெண்ணின் புன்னகை

நாசரேத் பேசிக்கொண்டே இருந்தார்…ஆனால்
சிலுவையில் ஏற்றப்பட்ட போதுதான்
ஏசுவானார்

சித்தார்த்தன் மெளனம் காத்தபோதுதானே

புத்தன்.

ஜெயதேவன்