
காகத்தின் கரையும் சத்தம் கடந்துபோய்விட்டது
வெளிர்நீலத்தில் மாற்றமிருக்கிறதா என்று அன்னாந்து பார்த்தால்
முன்னமிருந்ததைப் போலவே வான் வியாபித்துள்ளது
தாழ்ந்த குரலில் பேசிப் பார்த்தேன்
எனக்கே விளங்கவில்லை
உரத்து பேசினேன்
துல்லியமற்ற சத்தமே எஞ்சியது
இந்நேரம் எதற்குமானதல்ல
உகந்த சத்தம் கடக்கும் முன்னர்
எப்பக்கமும் திரும்பாமல்
நேராக வெறிக்காமல்
மிதமான குரலில் ஆளற்ற மாடியின் முகப்பில்
அமர்ந்து பேசியபடி
ஒரு காகம் எதிரிலுள்ள விளக்கு கம்பத்தில்
வந்தமரும்வரை
சகுனங்களைப் பற்றி நினைக்காமல் கூடுதலாய்ப் பொறுத்திருக்கலாம்..
