எனக்கு மட்டுமேன்/விக்கிரமாதித்யன்

ந

ஏன்
இப்படியாக வேண்டும்
இந்த வாழ்க்கை

அடுத்த வேளை
எப்படிச் சாப்பிடுவோமென்று நிச்சயமில்லை

அங்கங்கே
சலவை நிலையங்களில் கிடக்கின்றன துணிகள்

இரவு
எங்கே தங்குவதெனத் தெரியவில்லை

எந்த நேரத்திலும்
சொந்தஊருக்குத் திரும்பும்படியாயிருக்கிறது

எங்கும்
நிலையமிட்டிருக்க முடியவில்லை

வெகு அபூர்வமாகத்தான்
வாய்க்கிறது பெண்ணும்போகமும்

பிள்ளைகளைத் தேடினாலும்
எப்பொழுது பார்ப்போமென்று சொல்லமுடியாது

வேட்டைக்காரன் போல
காசு பணத்துக்கு அலைவதே விதிக்கப்பட்டுவிட்டது

மனசில்
கூத்தாடுகிறது சதா ஒரு கலவரம்

நண்பர்களைச் சந்திப்பதிலும்
பரவசமில்லை அந்த நாள்கள் போல

கோயில்களுக்குப் போனாலும்
பக்தியுணர்வெல்லாம் உண்டாவதில்லை முன்போல

அற்புதங்களென்று
எதுவும் நிகழவேயில்லை வாழ்க்கையில்

மரம் போல
வாழும்படியான துரதிர்ஷ்ட்டம்

மண்போல
இருக்கும்படியான துர்பாக்யம்

இந்த வாழ்க்கை எனக்கு மட்டுமேன்
இப்படியாக வேண்டும்

(முகநூலில் பகிர்ந்து கொண்டவர் ஆர். கந்தசாமி)

One Comment on “எனக்கு மட்டுமேன்/விக்கிரமாதித்யன்”

Comments are closed.