கே.என்.சிவராமன் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து

தற்செயலாக இன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடந்து அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடவே அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர் முகமும பொங்கித் தளும்பியது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு ஃப்ளாட்டில்தான் அந்த எழுத்தாளரின் மகன் குடியிருக்கிறார். சொந்த வீடு.

உண்மையிலேயே இது சிறப்பு வாய்ந்ததுதான்.

ஏனெனில் அந்த எழுத்தாளர் ஒரு பத்திரிகையாளரும் கூட. அவர் காலத்தில் எல்லா பத்திரிகையிலும் சம்பளம் குறைவு. மூன்று டிஜிட்தான். அதை வைத்துதான் குடும்பம் நடத்தினார். ஒரே மகனை படிக்க வைத்தார்.

+2 முடித்தப் பிறகு அவர் மகன் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்பினார். அன்று இப்படிப்பு பெரிய விஷயம். மொத்தம் ஆறு செமஸ்டர். ஒவ்வொரு செமஸ்டருக்கும் ஃபீஸ் கட்ட வேண்டும்.

எழுத்தாளரிடம் அவ்வளவு பணமில்லை. சேமிப்பு? பூஜ்ஜியம்.

அவர் பணிபுரிந்த பத்திரிகையில் அவருக்கு சுதந்திரம் வழங்கி இருந்தார்கள். அதாவது மற்ற நிறுவன இதழ்களிலும் அவர் சிறுகதை, தொடர்கதைகள் எழுதலாம்.

இதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்த எழுத்தாளர் மிகுந்த தயக்கத்துடன் தனக்குத் தெரிந்த ஒரு நாளிதழின் இணைப்புப் பிரிவு ஆசிரியரை சந்தித்தார்.

இந்த இணைப்புப் பிரிவின் ஆசிரியர், அந்த நாளிதழின் உரிமையாளர்களில் ஒருவரும் கூட.

இவரை சந்தித்து தன் நிலையை அந்த எழுத்தாளர் விளக்கினார்.

பொறுமையாகக் கேட்ட அந்த இணைப்பிதழின் ஆசிரியர், எதுவும் சொல்லாமல், கதைச் சுருக்கம் கேட்காமல் அந்த எழுத்தாளருக்கு ஆறு தொடர்கதைகளைக் கொடுத்தார்.

அதாவது ஆறு மாதங்களுக்கு ஒன்று. 24 வாரங்களுக்கு ஒரு கதை.

இதைப் பயன்படுத்தி அந்த எழுத்தாளர் ஆறு சரித்திரத் தொடர்கதைகளை அடுத்தடுத்து எழுதினார். இதன் மூலம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணம் பெற்று அதை அப்படியே தன் மகனின் கல்லூரியில் செமஸ்டர் ஃபீஸ் ஆக கட்டினார்.

இந்த ஆறு சரித்திரத் தொடர்கதைகளும் தனித்தனி நூலாகவும், ஒரே தொகுப்பாகவும் வந்திருக்கின்றன.

அவை அனைத்தும் என்னிடம் இருக்கின்றன.

அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் அந்த எழுத்தாளரின் முகம் மட்டுமல்ல… அந்த நாளிதழின் இணைப்புப் பிரிவு ஆசிரியரும் நினைவுக்கு வருவார்.

இன்று அந்த எழுத்தாளர் இல்லை. அவர் மகன் மிகப்பெரிய நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார்.

அந்த எழுத்தாளர், கெளதம நீலாம்பரன்.

அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர்..?

சொல்வதற்கு முன்னால் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடத் தோன்றுகிறது.

ஒரு பத்திரிகையாளர். எழுத்தாளரும்தான். தொடர்கதைகள் எழுதியதில்லை. ஆனால், ஏராளமான சிறுகதைகளை வெவ்வேறு பெயர்களில் அவர் பணிபுரிந்த பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.

திடீரென்று அந்தப் பத்திரிகை நின்றுவிட்டது. வேலை இல்லை. சென்னையில் எப்படி வாழ்வது..?

பத்திரிகை அலுவலகமாக ஏறி இறங்கி வேலைக் கேட்டு வந்தார்.

அந்த வகையில் ஒருநாள் அந்த நாளிதழின் இணைப்பிதழ் அலுவலகத்துக்கும் சென்றார்.

ரிசப்ஷனிஸ்ட் வழியாக செய்தி அறிந்த இணைப்பிதழின் ஆசிரியர் அந்த பத்திரிகையாளரை அழைத்தார். பேசினார். அவரது சம்பளத்தை அறிந்தார்.

பின்னர் கேட்டார்:
‘உங்களுக்கு என்ன தெரியும்..?’

‘சிறுகதைகள் எழுதுவேன்…’

‘ஒரு நாளைக்கு எவ்வளவு சிறுகதைகள் எழுதுவீர்கள்..?’

‘ஐந்து…’

‘சரி எழுதிக் கொடுங்கள்!’

‘சார்…’

‘5 சிறுகதைகளை வெவ்வேறு ஜானரில் எழுதிக் கொடுங்கள். இது உங்களுக்கு நான் வைக்கும் டெஸ்ட்…’

அந்தப் பத்திரிகையாளரிடம் கிழிக்கப்பட்ட நியூஸ் பிரிண்ட் தாள்கள் கொடுக்கப்பட்டன.

ஆடாமல், அசையாமல், டீ குடிக்கவும் உணவு அருந்தவும் செல்லாமல் அங்கேயே அமர்ந்து மாலைக்குள் 5 சிறுகதைகளை எழுதி முடித்து கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட இணைப்பிதழின் ஆசிரியர், பிரித்துப் படிக்கவே இல்லை. அதை அப்படியே தன் டேபிளில் வைத்து விட்டு ஒரு கவரை எடுத்துக் கொடுத்தார்.

பிரித்துப் பார்த்த பத்திரிகையாளருக்கு கண்கள் கலங்கிவிட்டன.

இரு மாத சம்பளம்!

‘இது உங்கள் 5 சிறுகதைகளுக்கான தொகை. வாரப் பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவமுள்ள நீங்கள் இன்னொரு வாரப் பத்திரிகையில் பணிபுரிவதுதான் சரி. நாளிதழின் இணைப்பிதழ் உங்கள் திறமைக்கு ஏற்றதல்ல. வேலை் தேடுங்கள். கண்டிப்பாக கிடைக்கும். இரு மாதங்கள் குடும்பத்தைப் பராமரிக்க இத்தொகை உங்களுக்கு உதவும். 60 நாட்களுக்குப் பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால் இன்னொரு 5 சிறுகதைகளுடன் வாருங்கள்!’

நெகிழ்ந்த பத்திரிகையாளர் முழுமூச்சுடன் வேலை தேடினார். இரண்டாம் நாளே இன்னொரு வார இதழில் அவருக்கு உதவியாசிரியர் வேலை கிடைத்தது.

மகிழ்ச்சியுடன் இணைப்பிதழின் ஆசிரியரை சந்தித்து அவர் கொடுத்தப் பணத்தை திருப்பினார்.

‘இதை உங்களுக்கு இனாமாக நான் கொடுக்கவில்லை. உங்கள் சிறுகதைக்கான தொகை அது!’

நிம்மதியுடன் திரும்பிய அந்தப் பத்திரிகையாளர் அதன் பிறகு எண்ணற்ற சிறுகதைகளை, தான் பணிபுரிந்த வார இதழில் வெவ்வேறு பெயர்களில் எழுதினார்.

அதேநேரம், அந்த இணைப்பிதழின் ஆசிரியரிடம் எழுதிக் கொடுத்த 5 சிறுகதைகளை வேறு வடிவத்தில் கூட, தான் பணிபுரிந்த பத்திரிகையில் மறந்தும் எழுதவில்லை.

இதற்கும் மேலே சென்றார் அந்த இணைப்பிதழின் ஆசிரியர்.

இன்று வரை அந்த 5 சிறுகதைகளை அவர் பிரசுரிக்கவே இல்லை! காரணம், எழுதிக் கொடுத்ததை அந்தப் பத்திரிகையாளரே, தான் பணிபுரியும் பத்திரிகையில் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்…

இந்தச் சம்பவம் நடந்தது 1990களின் தொடக்கத்தில்…

இன்று அந்தப் பத்திரிகையாளர் ஓய்வுப்பெற்று பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

அவர் பெயரை இங்கு குறிப்பிடும் உரிமை எனக்கில்லை…

ஆனால், கெளதம நீலாம்பரனுக்கும் இந்தப் பத்திரிகையாளருக்கும் இக்கட்டான தருணத்தில் உதவிக்கரம் நீட்டி… அதை ‘உதவி செய்யவதாக’ காட்டிக் கொள்ளாமல் அவர்களது எழுத்துக்கான ஊதியமாக கொடுத்து கவுரவித்த இணைப்பிதழின் ஆசிரியர் யார் என்று குறிப்பிட முடியும்.

அவர், சென்னை – கோவை ‘தினமலர்’ வார மலர் ஆசிரியரான அந்துமணி.

நல்லா இருங்க சார்