மண்டியிடுங்கள் தந்தையே/இ.இளங்கோவன்

தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படத்தில் வைத்தி என்ற நபர் சிக்கல் சண்முகம் என்ற நாதஸ்வர கலைஞனைப் பார்த்து கேட்கிற மாதிரியான ஒரு வசனம், “என்ன சண்முகம், துரை சொல்றது புரியலையா? மேனாட்டு சங்கீதத்தை உன்னோட நாதஸ்வரத்தில் வாசிக்க முடியுமா? வித்தை எப்படி, கர்நாடகத்தோட சரியா? இல்லை மேல்நாட்டு சங்கீதமும் வருமா?”

இந்தக் கேள்விக்கு சிக்கல் சண்முகம் எவ்வாறு தனது நாதஸ்வரம் மூலமாக பதிலுரைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சிக்கல் சண்முகம் எதிர்கொண்ட இந்த அறைகூவலை, தனக்கு கொடுத்த அறைகூவலாக, எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எடுத்துக் கொண்டு, தனது எழுதுகோல் தமிழக மற்றும் இந்திய புறச்சூழலை மட்டும் வைத்துக் கொண்டு அல்ல, உலக புதினங்களையும் எழுத முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

எழுத்தாளர் எஸ்.ராவால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய புதினம் “மண்டியிடுங்கள் தந்தையே”. இந்தப் புதினம் முற்றிலும் ஒரு ரஷ்ய புதினம், புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க ரஷிய சூழலில், இந்தப் புதினத்தை எஸ்ரா எழுதியுள்ளார். இப்புதினத்தில் ஒரு பாத்திரம் கூட தமிழகம் சார்ந்தோ, இந்தியா சார்ந்தோ இல்லை. லியோ டால்ஸ்டாய்,அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரது பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளிகள், அவரது நண்பர்கள் இவர்களையே பாத்திரமாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது.

  1. எப்போதும் போல எஸ்ரா பக்கத்திற்கு பக்கம் வர்ணனைகள், உவமைகள், ஒப்பீடுகள் என்று மொழியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். மொழியின் தரம் உச்சம். எடுத்துக்காட்டாக, 1“மரத்தைப் போல பச்சை நிறமாகவா இருக்கிறது அதன் நிழல்?.” 2 “பாறையில் வந்து மோதும் அலையின் மீது பாறைக்கு கோபம் இருக்குமா என்ன? அது ஒரு வகை நேசம்”. இது போன்ற பல ஒப்பீடுகள் பக்கத்திற்குப் பக்கம் நிறைந்து கிடக்கின்றன.
  2. சற்றேறக்குறைய 140 வருடங்களுக்கு முன்பு நடைபெறுவதாக இந்தப் புதினம் இருக்கிறது. 140 ஆண்டுகள் பின்னோக்கிய ரஷ்யாவை மிகச்சரியாக படம் பிடித்துக் காட்டுகிறார் எழுத்தாளர். எந்த இடத்திலும் சிறுபிழை கூட கால ஓட்டத்தில் இல்லாமல் இருக்கிறது. பனிபடர்ந்த ரஷ்யா நம் கண் முன் வருவது நிச்சயம்.
  3. வெறும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு எழுதிய புதினம் அல்ல,என்பதை ஒரு சராசரி வாசகனால் புரிந்து கொள்ள முடிகிறது. மிக நீண்ட ஒரு வரலாற்று ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவாக இந்தப் புதினம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் வாசகனால் உணரமுடிகிறது. வெறும் வரலாற்றுச் செய்திகளை கட்டுரைகளாக அவர் கொடுக்கவில்லை என்பதே இந்தப் புதினத்தின் சிறப்பு. ஆகச் சிறந்த பில்டர் காபி என்பது காப்பியின் கசப்பும் தொலைந்து விடாமல், அதே நேரத்தில் காப்பி வெறும் கசப்பாகவும் இருந்து விடாமல், அதற்கேற்றாற்போல் சரியான விகிதத்தில் பாலும், சர்க்கரையும் கலந்து ஒரு ஆகச்சிறந்த பில்டர் காபியை படைப்பது போலவே, எழுத்தாளர் மிகத் துல்லியமான வரலாற்றுச் செய்திகளை இந்தப் புதினத்தில் மிகச்சரியான விகிதத்தில் புனைவுகளையும் , உயரிய மொழி நடையையும் சேர்த்து சரியான விகிதத்தில் இந்தப் புதினத்தை படைத்திருக்கிறார்.
    ரஷ்யா என்ற நாடு எப்படி இருக்கும், அந்த மக்களின் உணவுப்பழக்கம் என்ன?, குடும்ப உறவுமுறைகள், இவைகளை தெரிந்து கொள்ள ஆசைப்படும் ஒரு தேசாந்திரிக்கும், அதே நேரத்தில் எந்த வரலாற்றுச் செய்தியும் எனக்கு வேண்டியதில்லை ஒரு தந்தை-மகனுக்கு இடையிலுள்ள உறவு முரண்களைப் பற்றி பேசும் ஒரு புதினம் எனக்கு வேண்டும் என்று ஆசைப்படும் வாசகனுக்கும் ஒரு சேர ஒரு புதினத்தை படைத்திருக்கிறார்.இந்த ஒரு புதினம் ஒரு தேசாந்திரிக்கும், கதை படிக்க ஆசைப்படும் வாசகனுக்கும் சமமாக விருந்தளிக்கிறது. ஆகச்சிறந்த எழுத்தாற்றலை கொண்ட ஒரு எழுத்தாளனால் மட்டுமே இந்தப் புள்ளியை அடைய முடியும் என்பதற்கு இந்தப் புதினம் ஒரு எடுத்துக்காட்டு

4.இந்தப் புதினத்தில் இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே லியோ டால்ஸ்டாயின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிய விமர்சனம் இடம் பெற்றிருக்கின்றன. ஏற்கனவே லியோ டால்ஸ்டாயின் மற்ற இலக்கியப் படைப்புகளை படித்த வாசகர்களுக்கு இது மிகவும் விருந்தாக அமைகிறது. அதேநேரத்தில் லியோ டால்ஸ்டாயின் எந்த ஒரு இலக்கிய படைப்பையும் படிக்காத வாசகனுக்கு லியோ டால்ஸ்டாய் என்ற நெடுஞ்சாலையை காண கதவுகள் திறக்கப்படுகின்றன.

  1. லியோ டால்ஸ்டாய் வாழ்ந்த அதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் தாது ஆண்டு பஞ்சம் ஏற்பட்டது. அந்த பஞ்சத்தை நேரில் சந்தித்த வடலூர் வள்ளலார் ஜீவகாருண்யம் என்ற கோட்பாட்டை எப்படி உருவாக்கினாரோ,அதுபோல அதே காலகட்டத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட பஞ்சம், எப்படி இருந்தது? அதனுடைய கோர முகங்கள் எப்படி தாண்டவமாடின? அந்த காலகட்டத்தில் வாழ்ந்த லியோ டால்ஸ்டாய் அதை எப்படி எதிர்கொண்டார்? அந்த பஞ்ச கால அனுபவங்களே லியோ டால்ஸ்டாயின் அன்பு நிறைந்த வார்த்தைகளுக்கு ஆதாரமாக இருக்குமோ என்கிற எண்ணத்தை இந்த புதினம் நமக்கு காட்டுகிறது.
  2. “மண்டியிடுங்கள் தந்தையே” என்ற தலைப்புக் கொண்ட இந்த புதினத்தில் யார் தந்தையாக இருக்கிறார்?எந்த மகன் இந்த கேள்வியை எந்த தந்தையிடம் கேட்கப் போகிறார்? என்பதற்கான விடையை இந்தப் புதினத்தின் தொடக்க அத்தியாயங்களே நமக்கு தெரிவிக்கிறது. அது தெரிந்து இருந்தாலும் இந்த கேள்வியை இந்த மகன் எப்போது கேட்க போகிறான் என்கிற ஒரு புதிர் இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரைக்கும் நீண்டு கொண்டே சென்று இருப்பது இந்தப் புதினத்திற்கு ஒரு உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறது எனலாம். அந்தக் கடைசி அத்தியாயத்தின் கடைசி வரியிலும் கூட “மண்டியிடுங்கள் தந்தையே” என்ற வாசகம் இடம்பெறவே இல்லை. எழுத்தாளர் இந்த வாசகத்தை வாசகனே கேட்டுக் கொள்ளட்டும் என்கின்ற தொணியிலும் விடவில்லை. இந்தப் புதினத்தை முழுமையாக படித்த பின், என்னால் இந்த தலைப்பை உணர முடிந்தது. இது Untold Title அல்ல, மாறாக Intrinsic Title என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
    முதல்முறையாக இந்திய எழுத்துலகில் முழுக்க முழுக்க ரஷ்யாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதினம் எழுதிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் பாராட்டுக்கள். இருந்தபோதிலும் என்னிடம் இருந்தும் இந்தப் புதினத்தை பற்றிய சில கேள்விகள் உள்ளன.
  3. ஜார் மன்னர், மெழுகுவர்த்தி வெளிச்சம், குதிரை வண்டி என்ற இந்த மூன்று வார்த்தைகளை மட்டுமே நூறாண்டுகளுக்கு முந்தைய ரஷ்யாவை படம்பிடிக்க பெரிதாக எழுத்தாளர் கையாண்டுள்ளார். ஜார் மன்னர் என்ற இடத்தில் விலாடிமிர் புட்டின் என்றும் மெழுகுவர்த்தி வெளிச்சம் என்கின்ற இடத்தில் எல்இடி வெளிச்சம் என்றும் குதிரை வண்டி என்கிற இடத்தில் லாடா கார் என்றும் மாற்றினால் இந்தப் புதினம் ஒருவேளை இன்றைய காலகட்டத்தை குறிப்பதாக கூட அமைந்திருக்கக் கூடும். எ.கா ரயில் நிலையம் பற்றிப் பேசும் எழுத்தாளர் 140 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் ரயில்கள் எப்படி இருந்தன என்பது போன்ற செய்திகளை சேர்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம்.
  4. லியோ டால்ஸ்டாய் ஒரு ஆகச்சிறந்த கிறிஸ்தவராக இருந்தாலும் கூட அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த கிறிஸ்துவ மத அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை கொண்டிருந்தார் என்பது வரலாற்று உண்மை. அதை இந்தப் புதினத்தில் கோடிட்டு காண்பிக்கப்படுகிறது. ஆனால் எந்தெந்த முறையில் கிறிஸ்துவ மத அமைப்புகள் தங்களுக்குள் சீர்திருத்தம் செய்திருக்க வேண்டும் என்று லியோ டால்ஸ்டாய் எண்ணினார் என்கிற கூடுதல் செய்தி இணைக்கப்பட்டிருந்தால் புதிதாக லியோ டால்ஸ்டாய் பற்றி அறிய விரும்பும் வாசகனுக்கு கூடுதல் பயன் அளித்திருக்கும். அவர் ஏன் கிறிஸ்தவ மிஷனரிகளை எதிர்க்கிறார் என்பதற்கு வலுவான காரணங்கள் இங்கு அமையப் பெறவில்லை.

எப்படி பார்த்தாலும், இந்தப் புதினம் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். உலக மொழிகளில் இந்தப் புதினம் மொழிபெயர்ப்பு செய்யும் பட்சத்தில், எஸ் ராமகிருஷ்ணனோடு தமிழும், தமிழர்களும் பெருமையடைவார்கள் என்பது உண்மை.
சிக்கல் சண்முகத்தின் நாதஸ்வரம் மட்டுமல்ல எனது எழுதுகோலும் மேனாட்டு இலக்கியங்களை படைக்கும் என்பதை நிரூபித்துள்ளார் எஸ்ரா.
தமிழ் என்ற எழுதுகோல் கொண்டு ரஷ்ய வெண்பனியை மையாக ஊற்றி, லியோ டால்ஸ்டாயின் கருப்பு பக்கங்களில் ஓவியம் வரைந்துள்ள எஸ்ராவுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள். நன்றி..
அன்புடன்
இ.இளங்கோவன்
திருவாரூர்