ஜெயமோகன் பதிவு

நான் வீட்டை விட்டு கிளம்பினால் எங்கிருக்கிறேன் என அருண்மொழிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதுடன் சரி. எத்தனை நாள் ஆனாலும், ஒரு மாதம்கூட ஆனாலும் அவ்வளவுதான் தொடர்பு. தேவை என்றால் பேசுவேனே ஒழிய நாள்தோறும் மணிதோறும் பேசுவதெல்லாம் இல்லை. அவளும் கூப்பிடுவதில்லை. மற்ற நண்பர்களுக்குத்தான் குறுஞ்செய்திகள், அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். அதிலும் சிலருக்கு செல்போன் ரீ ரீ என அழைத்துக்கொண்டே இருக்கும்.

அக்கறையே இல்லாமலிருக்கிறோம் என்று தோன்றும், அப்படி அல்ல. அவரவர் உலகத்தில் இருக்கிறோம். அருண்மொழி வேலை, சங்கம் என பல களங்களில் பரபரப்பானவள். சமையலும் சாப்பாடும் முடிந்தால் எங்களுக்கான பொதுப்பொழுது என்பதே ஒருநாளில் ஒருமணி நேரம்தான். அதை குறைசொல்ல, சண்டைபோட செலவழிப்பதில்லை. பேசினால் அது எப்போதுமே மகிழ்ச்சியான உரையாடல்தான்.

அருண்மொழியின் மொழிநடையில் என் செல்வாக்கு இல்லை என்பதை பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். அதுவே இயல்பானது. அவள் உலகமே வேறு. அவள் இன்னும் தஞ்சையில் இருந்து வெளிவரவே இல்லை. இப்போது அருண்மொழியின் நேரம் முழுக்க இலக்கியமும் இசைதான். முழுநேர வாசிப்பு, இசைகேட்பு, இசை ஆராய்ச்சி, எழுத்து. அந்த உலகில் நான் நுழைவதில்லை. என் உலகம் அதேபோல இலக்கியம், பயணம் என பரபரப்பானது. அவரவர் மகிழ்ச்சிகள், அவரவர் கொண்டாட்டங்கள், அவரவர் நட்புகள்.

இருவருக்கும் பொதுவான இனிய பொழுதை மட்டுமே பகிர்ந்துகொள்கிறோம். அவளுடைய படிப்பு எழுத்து பற்றிச் சொல்வாள். சிரிப்பும் வேடிக்கையுமாக அன்றி பேசிக்கொண்ட தருணங்கள் மிகமிகக் குறைவு. இருவருக்கும் மற்றவர் முக்கியமானவர்கள். என் பேச்சில் அருண்மொழி வந்துகொண்டேதான் இருப்பாள். ஆனால் அவள் உலகுக்குமேல் என் ‘ஆட்சி’ என ஏதுமில்லை. அவள் ஆளுமைக்குமேல் என் கட்டுப்பாடு என்றும் ஏதுமில்லை.

என் பிள்ளைகள்மீதும் இதுவே. அவர்கள் மேல் என் கட்டுப்பாடு அனேகமாக ஏதுமில்லை. அஜிதன் பார்வைக்கு நானேதான். என்னுடைய கோளாறுகள் எல்லாம் அவனுக்கும் உண்டு. ஆனால் உள்ளிருக்கும் ஆளுமை வேறு. சிந்தனைகள் முற்றிலும் வேறு. (ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் ஓர் பதற்றம் மிக்க எதிர்பார்ப்பின் சிக்கல் இருக்கவே செய்கிறது. முழுக்க விலக முடியாது)

மிகக் குறைவான உறவே மிக நல்ல உறவு. அந்த குறைவான உறவில் இனிய தருணங்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இன்னொருவரை மாற்றியமைக்க, ‘திருத்த’ முயலும்போதுதான் உரசல்களும் பிரச்சினைகளும் உருவாகின்றன. இன்னொருவர் தன் உடைமை, தன்னுடனேயே இருக்கவேண்டியவர் என எண்ணும்போதே பூசல்கள் உருவாகின்றன. கணவன் மனைவி நடுவே மட்டுமல்ல, நண்பர்கள் அல்லது சக ஊழியர்கள் நடுவேகூட இன்னொருவரை சற்று மாற்றியமைக்க முயன்றாலும்கூட அந்த உறவு கசப்பை மட்டுமே அளிப்பதாக ஆகிவிடும்.

அப்படியென்றால் ஒருவர் மேல் இன்னொருவரின் செல்வாக்கு உருவாகவே கூடாதா? உருவாகும், அந்த இனிய தருணங்கள் வழியாக இயல்பாக அது உருவாகும். அதுவே உயர்வானது. நான் முப்பதாண்டுகள் அருண்மொழிக்கு அவளுக்குப் பிடித்த இலக்கியச்சூழலை அளித்திருக்கிறேன். இலக்கியவாதிகளுடனான உறவு, உலகமெங்கும் பயணம் என்னும் வாய்ப்புகளை அளித்திருக்கிறேன். என் வாசிப்பின் மிகச்சிறந்த பகுதிகளை பகிர்ந்திருக்கிறேன். அது உருவாக்கும் செல்வாக்கே உண்மையானது. எந்த கல்வியும் இனிய கொண்டாட்டமாகவே அமைய முடியும்.

தகவல் : கந்தசாமி ஆர்