தமிழ்நதியின் முகநூல் பதிவு

இலங்கையில் நிலவும் சூழலை செய்திகள் மூலம் அறிந்து “நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா?” என அக்கறையோடு வினவும் நண்பர்களுக்காக இந்தப் பதிவு:

தலைநகர் கொழும்பில் நிலைமை பதற்றமாகத்தானுள்ளது. நாங்கள் இருப்பது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 260கிலோ மீற்றர் தொலைவிலுள்ள வவுனியா என்ற நகரத்திலுள்ள கிராமமொன்றில். நகரத்திற்கேயுரிய சகல வசதிகளையும் கொண்ட இவ்விடத்தை கிராமம் என்பதற்குமில்லை. மாசுபடாத காற்று, தண்ணீர், மரங்கள், வயல்கள், பறவைகள் நிறைந்த பகுதி இது.

எங்களிற் (தமிழர்களில்) பெரும்பாலானோர் கொழும்பில் நடந்துவரும் போராட்டங்களை தொலைவிலிருந்து கவனிக்கிறோம். ஏன் தொலைவு என்றால், பெரும்பான்மையினத்தவருக்கு அளிக்கப்படும் ‘மரியாதை’ சிறுபான்மையினத்தவருக்கு அளிக்கப்படுமென்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. ஒரு புகைப்படத்தை வைத்திருக்கிறோம் என்பதற்காகவோ, ஒரு பாடற் காணொலிக்காகவோ கூட கைதுசெய்யப்படக்கூடியளவு பாதுகாப்பற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம். மேலும், இந்த உலகமே கைகட்டிப் பார்த்திருக்க கொல்லப்பட்ட இனம் நாங்கள். இறந்தகாலத்தில் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், இழப்புகள், காயங்கள்’எவரையும் நம்பவேண்டாமென’எச்சரிக்கின்றன. ஏனெனில், நீதியானது மனிதருக்கு மனிதர் மாறுபடுந் தன்மையது என்பதை இறந்தகாலம் எங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறது. தென்னிலங்கையின் நிலவரங்கள் எங்களை செய்திகளாக வந்தடைகின்றன. வந்தடையும் செய்திகளால் ஒரேயடியாக மகிழ்ந்துபோகவில்லை. ‘அடுத்து என்ன நடக்குமோ?’ என்ற திகிலும் உள்ளூர இருக்கவே செய்கிறது.

அதிகார மையங்கள் தகர்க்கப்படும்போது எங்களையறியாது மகிழ்ச்சி பரவுகிறது. அதை மறைக்கமுடியாதளவு காயப்படுத்தப்பட்டுள்ளோம். அதேசமயம், எளிய மனிதர்கள் தாக்கப்படும்போது, எங்களுள் இருக்கும் மனிதாபிமானம் கலக்கமுறுகிறது.

இந்த முறுகலானது இனவாதிகளால் இனவன்முறையாக மாற்றப்பட்டுவிடக்கூடாதேயென்பதே இப்போதைய பிரார்த்தனை. பொருளாதார, அரசியல் சீரழிவுகளை இனவாதமாக மடைமாற்றுவது எப்படியென்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இன்று இங்கு வாகனங்களின் இரைச்சல் கேட்கவில்லை. கடைகள் மூடப்பட்டுள்ளன. மற்றபடி இது இன்னொரு நாளே!

2009இல் எவ்வாறு செய்திகளில் கண்விழித்து, செய்திகளின் மீது தலைகவிழ்த்து உறங்கச் சென்றோமோ அதேபோன்ற நாட்களிவை. ஆனால், இரண்டுக்குந்தான் எவ்வளவு வேறுபாடு!

நீங்கள் சொன்னது சரி. ‘வரலாறு வழிகாட்டி’யேதான்!

முகநூல் பதிவை கொடுத்து உதவியவர் : ஆர்.கந்தசாமி

One Comment on “தமிழ்நதியின் முகநூல் பதிவு”

  1. படிக்கும்போதே நெஞ்சம் கனக்கிறது. தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவதற்கு யார் காரணமோ, அவர்கள் இன்று தாங்கள் கொல்லப்படுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைக் கொன்றுபோடுவோம் என்று வெஞ்சினம் கொள்ள முடியாமல் தமிழினத்தின் கருணை உணர்வு தடுக்கிறது. அறக்கருணைக்கு இது நேரமா என்பதை முடிவெடுக்க வேண்டிய சமயம் வந்துவிட்டது,

Comments are closed.