விளம்பர மாடலாய் நடித்த தமிழ் எழுத்தாளர்…/ஆர்.பி.என்

தான் பணியிலிருந்த டிராக்டர் கம்பெனி உத்தியோகத்தை உதறி விட்டு
எழுத்தை முழுநேர தொழிலாக கொள்ள எத்தனைப்பேருக்கு தைரியம் வரும்?

அந்த துணிச்சல்தான் பாலகுமாரன்.
தனித்த நடை. எழுத்தை எளிமையாக சொல்லும் விதத்தால் வெற்றிப் பெற்றவர்.

அவர் மடை உடைந்து வெள்ளம் வந்து தம் காலை நனைத்தது என்று எழுதினால் நம் காலை ஒரு முறை குனிந்து பார்த்துக் கொள்வோம். ப்ளாடர் ஸ்டோன் பற்றி ஒரு நாவலில் எழுதியிருப்பார். படிக்கும் நமக்கே அப்படி வலிக்கும். இப்படி நிறைய இருக்கிறது.

சரித்திர கால கதைகள் என்றால் அந்த பிற்கால சோழர்கள் காலத்தையே கண் முன் கொண்டு வந்து நிறுத்துவார். இராஜஇராஜனாகட்டும்,கங்கைகொண்ட சோழனாகட்டும். இவர் காட்சிகளை சித்தரித்தது போல் வேறு யாரும் செய்திருப்பார்களா என்று தெரியவில்லை.

எத்தனை எத்தனை நாவல்கள். இதற்கு தான் ஆசை பட்டாய் பாலகுமாரா, இனிது இனிது காதல் இனிது வகை கட்டுரைகள். அத்தனையும்,பெரும்பாலும் வெகுஜன பத்திரிகைகளில் வெளிவந்து வெற்றிப் பெற்றன. எனக்கு தெரிந்து ‘பல்சுவை நாவல் ‘ என்னும் மாதாந்திர இதழ் பாலகுமாரன் எழுதிய நாவல்களை மட்டுமே தாங்கி வரும். கடைக்கு வந்த சில நிமிடங்களிலேயே விற்றுப் தீர்ந்துபோகும்.

வேட்டி சட்டை என்று ஆரம்ப காலங்களில் வெகு சாதாரணமாய் இருந்த பாலகுமாரன் பிற்காலங்களில் முழு சன்னியாசியாகி விட்டார். இவர் தன் குருவாக யோகி ராம் சூரத்குமாரை அடிக்கடி குறிப்பிடுவார். அந்த திருவண்ணாமலை ஆசிரமத்துடன் இவரை சம்பந்த படுத்தி சில வதந்திகளும் உலாவின அதையெல்லாம் விட்டு விடுவோம்.

எளிய மக்களுக்கான அவரது படைப்புகள் அனைத்து தரப்பு வாசகர்களையும் கவர்ந்தது என்றால்…

பாலகுமாரன் சில விளம்பரங்களில் நடித்திருக்கிறார். ஒரு எழுத்தாளர் விளம்பரங்களில் மாடலாக பயன்படுத்தபட்டது அனேகமாக இவர் ஒருவராகத்தான் இருக்கும்.

பாலகுமாரன் நட்சத்திர எழுத்தாளர்.
அவர் ஒரு எழுத்து சித்தர்.
அவர் மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பெரும் இழப்புதான்.

One Comment on “விளம்பர மாடலாய் நடித்த தமிழ் எழுத்தாளர்…/ஆர்.பி.என்”

Comments are closed.