சிறை அனுபவம்/க.மோகனரங்கன்

முப்பதுவருடங்களுக்கு முன்பு, நான் சார்ந்திருந்த ஊழியர் நடத்திய மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு 15 நாட்கள் சென்னை மத்திய சிறையில் இருக்க நேர்ந்தது.பெயர்தான் சிறைத் தண்டனையே தவிர ஒப்பீட்டளவில் மற்ற கைதிகளைக் காட்டிலும் நாங்கள் சுதந்திரமாகவே நடத்தப்பட்டோம். நாங்கள் 300 பேர் ஒரே வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தோம். முதல் நான்கைந்து நாட்கள் புதிய நண்பர்களின் அறிமுகம், பழைய நண்பர்களுடனான அரட்டை என்று பேச்சும் சிரிப்புமாக கழிந்தது. சிறையில் வழங்கப்படும் உணவை ஒதுக்கவும் முடியாமல் உண்ணவும் முடியாமல் அரை குறை பசியோடு இருப்போம்.
மதியம் பார்வையாளர் சந்திப்பின் போது வெளியிலிருக்கும் பொறுப்பாளர்கள் கொண்டு வந்து தரும் பிஸ்கட் பிரட் போன்ற உணவுப் பொருட்களை பகிர்ந்து உண்போம். இரவு கவியும் போது பேச்சு குறைந்து மெல்ல அமைதி சூழும். குடும்பத்தை எண்ணிக் குறிப்பாக குழந்தைகளை பிரிந்துவந்திருந்த இளம் தகப்பன்கள் மெளனமாக கண்ணீர் உகுப்பதை பார்த்தபடி படுத்திருப்பேன். முதல் வாரம் கடந்ததுமே எல்லோரிடமும் பேச்சு குறைந்து விட்டிருந்தது . தேவைக்கு ஒரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினோம். முன்பே ஒரிரு முறை சிறையனுபவம் பெற்றிருந்த தலைவர்கள், சோர்வைப் போக்கும் விதமாக தங்கள் போராட்ட அனுபவங்களை விவரித்து பேசினார்கள். ஆனாலும் அவையெல்லாம் தற்காலிகமான பலனையே தந்தன. வெளியே இருந்தவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒருபுறம் முயன்றபடியே மறுபுறம் வழக்குரைஞர்கள் மூலமாக நீதிமன்றத்தை அணுகவும் ஆலோசித்து வந்தனர். ஒவ்வொரு நாளும் விடியும் போதும் இன்று அந்த தகவல் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்போடு எழுபவர்கள் இரவில் அந்த ஏமாற்றத்தை விழுங்கியவாறே படுத்துக்கிடப்போம். ஒர் நாள் நகர்வது நத்தை ஊர்வது போலிருந்தது. கடைசியாக அந்த செய்தி வந்துசேர்ந்தது. பதினாறாவது நாள் மாலையில் வெளியில் வந்ததும் காதில் விழுந்த நகரத்தின் அந்த இரைச்சல் எவ்வளவு பரவசத்தை தந்தது என்பதை விவரிக்க முடியாது. சுதந்திரம் என்பதன் பெறுமதியை அனுபவப்பூர்வமாக உணர்ந்த தருணம் அது. முப்பது வருடம் என்பது சிறையைப் பொருத்த வரையிலும் முப்பது பிறவிக்கு சமம். என்னதான் கடவுள்,கருணை என்று பெரிய வார்த்தைகளை பேசிவந்தாலும், உள்ளுக்குள் மன்னிப்பதால் அல்ல தண்டிப்பதால் மாத்திரமே நமது நீதி உணர்வைக்
காப்பாற்றமுடியும் என்று நாம் ஆழமாக நம்புகிறோம் போல.