நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது/சுரேஷ் கண்ணன்

நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது, இந்தத் திரைப்படத்திற்காகத்தான். இதுவே முதல். இதுவே முடிவும் கூட.

என்னுடைய பதின்ம வயதில் அந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. (நோ.. நோ. நீங்கள் நினைப்பது மாதிரியான படமல்ல. அப்படி நினைத்தாலும் கூட ஒருவகையில் தவறில்லை). எப்படியோ வீட்டில் காசைப் பீறாய்ந்து கொண்டு அரங்கிற்குச் சென்றேன். கூட்டம் என்றால் அப்படியொரு பேய்க்கூட்டம். இத்தனைக்கும் படம் ரிலீஸ் ஆகி நான்கு நாட்கள் கடந்தும் கூட.

அரங்கிற்கு வெளியே, சாலையோரத்தில்தான் ஆண்கள் நிற்கும் வரிசை. அரங்கிற்கு உள்ளே பெண்களின் வரிசை. ஆண்களின் வரிசையில் கேள்வி கேட்பார் யாரும் கிடையாது. சாமர்த்தியம் உள்ளவன் முதலில் புகுந்து விடக்கூடிய அபாயம் எப்போதும் இருந்தது. அப்படியான உத்தேசத்துடன் எவராவது வந்தால் முகத்திலேயே அந்தக் களை தெரிந்து விடும்.

அவன் முதல் அசைவை நிகழ்த்த உத்தேசிக்கும் போது ‘பூர்றான். பூர்றான்..’ என்று ஒட்டுமொத்த வரிசையுமே ஒரே குரலில் கோரஸ் பாடும். இப்படியொரு ஒற்றுமையை தேசபக்தி உணர்வில் கூட நீங்கள் காண முடியாது.

யாரும் புகுந்து விடக்கூடாது என்பதற்காக ஆண்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டு தேனிலவுத்தம்பதியினர் மாதிரி இறுக்கமாக நின்று கொண்டிருந்த போதுதான் அவன் வந்தான். பார்ப்பதற்கு ரவுடி மாதிரியான தோற்றம். ஆனால் மெலிதான உடல்வாகு.

பிரபல ரவுடிகளாக அறியப்படுபவர்கள் பெரும்பாலோனோரை நேரில் பார்த்தால், ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மாதிரி சிறிய உடல்வாகை கொண்டிருப்பது நடைமுறை ஆச்சரியம். நாம் சினிமாக்களை வைத்து வேறு மாதிரியாகத்தான் ரவுடிகளை கற்பனை செய்து வைத்திருக்கிறோம்.

எங்களின் வரிசையை அவன் சற்று நேரம் நிதானமாக உற்றுப் பார்த்தான். பிறகு வரிசையின் துவக்கத்தில் சொகுசாக நுழைவதற்கு அவன் முயன்ற போது கூட்டம் இறுக்கத்தை இன்னமும் அதிகமாக்கி அவனைப் புறக்கணிக்க முயன்றது. ஆனால் வாயைத் திறக்கவில்லை. “டேய்.. ஒழ்ங்கா வளி வுடுங்கோ. அவ்ளதான் சொல்வேன்” என்று அவன் செல்லமாக எங்களை மிரட்டியும் கூட கூட்டம் அசையவில்லை.

அடுத்து அவன் செய்த அந்த திருக்காரியத்தை காமெடி என்பதா, புத்திசாலித்தனம் என்பதா என்றே இன்று வரை தெரியவில்லை.

சட்டென்று லுங்கியைத் தூக்கி, டவுசரை சற்று கீழிறக்கி வரிசையின் நடுவில் உல்லாசமாக ஒண்ணுக்கு விட ஆரம்பித்தான். இதற்காகவே அடக்கி வைத்திருந்து சேமித்து வந்திருப்பான் போல. எனவே பீறிட்டுக் கொண்டு கிளம்பிய மூத்திர நீர் வீழ்ச்சி, அதன் சிதறல்களை எங்கள் மீது தாராளமாக தெளித்தது.

அதென்ன நயாகராவா? ஆனந்தமாக நனைவதற்கு.. அடுத்த நொடியே கூட்டம் சற்று பிளந்து சிதறி அருவெருப்புடன் ஒதுங்கியது. அவன் அலட்டிக் கொள்ளவேயில்லை. மிகுந்த நிதானத்துடன் வரிசையின் முன் வரிசையில் சாவகாசமாக வந்து இணைந்து கொண்டான். கூட்டம் சற்று தயங்கி பின்பு அவனையும் சகோதர மனோபாவத்துடன் இணைத்துக் கொண்டு மறுபடியும் தேனிலவுத் தம்பதியினர் போல இறுக்கிக் கொண்டது. இந்த கந்தர கோல அனுபவமெல்லாம் சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது.

oOo

டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து தள்ளுமுள்ளுவில் உயிர் பிழைத்து எப்படியோ ஒன்றை வாங்கி விட்டேன். ‘மன்னன்’ திரைப்படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் வியர்வை மழையில் நனைந்து டிக்கெட் வாங்குவார்கள் அல்லவா? ஏறத்தாழ அதே கதைதான். ஹவுஸ்புல் போர்டை சடுதியில் மாட்டி விட்டார்கள்.

டிக்கெட் வாங்கிய திருப்தியுடன் காற்று வாங்க வெளியில் வந்தேன். வெளியே கள்ள மார்கெட் வியாபாரம் படு ஜோராக இயங்கிக் கொண்டிருந்தது. அன்றைய தேதயில் டிக்கெட் விலை ஐந்து ரூ என்று நினைவு. ஆனால் டிக்கெட்டின் விலையோ பத்து மடங்கு அதிகரித்து ரூ.50-க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சூழலைப் பார்த்ததும் என்னுள் உறங்கிக் கொண்டிருந்த அம்பானி சற்று விழித்துக் கொண்டான். படம் பார்க்கும் ஆவல் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் வேறொரு குருட்டு யோசனை ஓடியது. ‘’ஜனங்கள் இப்படி பைத்தியமாய் அலைகிறார்களே.. இந்த டிக்கெட்டை நாம் விற்று விட்டால் பத்து மடங்கு காசு கிடைக்கும். கூடுதலாக பல படங்களைப் பார்ப்பதோடு மாங்காய் பத்தை செலவுக்கும் ஆகுமே என்கிற அபாரமான யோசனை வர, சட்டென்று காரியத்தில் இறங்கத் துணிந்தேன்.

பிளாக் டிக்கெட் விற்பவர்களின் கண்களில் படாத ஏரியாவாக உலவி, முகத்தில் அப்பாவித்தனமாகவும் தனியாக நிற்பவரை அணுகி “பிரெண்டுக்காக பிளாக்ல வாங்கிட்டேன். அவன் வரலை. வேணுமா.. நாற்பதுக்கு தரேன்” என்று முனகுகிற குரலில் வியாபாரம் பேசினேன். சிலர் ஆவல் காட்டினாலும் ஒன்றுக்கு மேற்பட்ட டிக்கெட்டுகளாக கேட்டார்கள்.

நான் என்னதான் சாமர்த்தியமாக இப்படி உலவினாலும், லைசென்ஸ் பெற்ற வணிகர்களின் கண்ணில் பட்டுவிட்டேன் போல. அங்கிருந்து ஒருவன் முறைப்புடன் என்னருகே வந்தான். “எந்த ஏரியாடா நீ.. பார்த்தா படிக்கிற பையன் மாதிரி இருக்கே.. இன்னாடா வேலை இது?” என்று அவன் கண்களில் விரோதத்துடன் ஆரம்பிக்க “ண்ணோவ். இல்லண்ணா. பிரெண்டுக்காக வாங்கினேன்.. அவன் வரலை” என்று நான் ஆரம்பித்த உடான்ஸை அவன் நம்பத் தயாராக இல்லை.

கையில் இருந்து அவன் பிடுங்க முயற்சித்த டிக்கெட்டை, சாமர்த்தியமாக விலக்கி காப்பாற்றிக் கொண்டேன். “இன்னோர் முறை உன்னை இங்க பார்த்தேன்..” என்கிற அவனின் குரல் காற்றில் பின்னால் மிதக்க, அவசரமாக இடத்தைக் காலி செய்தேன்.

என்றாலும் அந்த டிக்கெட்டை எப்படியோ விற்று விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். மறுநாளும் வந்து அதே மாதிரியான மூத்திர வரிசையில் நின்று அடுத்த நாளும் டிக்கெட்டை கைப்பற்றிய போது மீண்டும் அந்த அம்பானி சாத்தான் மனதில் வந்து நின்றான். கூடவே நேற்று மிரட்டியவனின் முகமும் கூடவே நினைவிற்கு வர “ச்சே.. நமக்கு ஏன் இந்த வேலை?” என்று சமர்த்துப் பையனின் குரல் தலையைத் தூக்க படத்தைப் பார்த்து ஒழுங்காக வீடு போய் சேர்ந்தேன்.

அந்த ஆசாமி என்னை மிரட்டியதும் ஒருவகையில் நல்லதாகத்தான் போயிற்று. இல்லையென்றால் தினமும் அப்படி டிக்கெட் வாங்கி, காசு ருசி கண்டு பொறுக்கியாக மாறியிருப்பேனோ, என்னமோ.

oOo

ஓகே.. எதற்காக இந்த திடீர் வியாக்கியானம் என்றால்..

இத்தனை அனுபவங்களைத் தந்த, அந்தத் திரைப்படத்தைப் பற்றித்தான், 80’s & 90’s நாஸ்டால்ஜியா கொண்டாட்டத் தொடரில் (விகடன்.காம்) இந்த வாரம் எழுதப் போகிறேன்.

இப்படி கேட்பது அநியாயம்தான். அது எந்தத் திரைப்படம் என்று யூகித்து வையுங்கள். வருகிற புதன்கிழமை தெரிந்து விடும்.