தமிழில் நீளமான பாலிண்ட்ரோம் (Palindrome) – சுஜாதா

(நன்றி: கற்றதும் பெற்றதும்)

நண்பர் வி.ஜே.மகாலிங்கம் வந்தார். என்னைவிட மூன்று வயது பெரியவர். மூன்று மகன்களும் அமெரிக்காவில். மனைவியை இழந்த பின், மாம்பலத்தில் தனியாக வாழ்கிறார்.

‘‘தின வாழ்க்கை எப்படிச் செல்கிறது?’’ என்று விசாரித்தேன்

‘‘ஃபர்ஸ்ட் கிளாஸ்! தினம் காலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிடுவேன் பார்க்கில் நடந்து செல்கையில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வேன். சரவணாவில் போய் காபி, ரெண்டே ரெண்டு இட்லி. டிபன் பாக்ஸில் டாண்ணு மாமி சாப்பாடு வந்துடும். சாயங்காலமானா மண்டபத்தில் ஏதாவது ஒரு உபன்யாசம்… திருப் பாவை, கீதகோவிந்தம், பஜகோவிந்தம் இப்படி! ராத்திரி சப்பாத்தி, டம்ளர் பால்.

9 மணிக்கு நியூஸ் கேட்டுட்டுத் தூக்கம். பைத்தியக்கார சீரியல் எதுவும் பார்க்கிறதில்லை. மாசம் தவறாம பெருமாள் சேவிக்க திருப்பதி செல்வேன். க்ரீன் கார்டுக்காக வருஷத்தில் ஒரு முறை அமெரிக்கா. இதுவரை அதற்கான தெம்பை பகவான் கொடுத்திருக்கார். டிஸிப்ளிண்ட் லைஃப்!’’

‘‘பொழுதுபோக்கு?’’

‘‘என் பொழுதுபோக்கு விநோதமானது. ஆங்கிலத்தில் பாலிண்ட்ரோம்கள் (palindrome) சேர்ப்பது’’ என்றார்.

‘‘இன்ட்ரெஸ்ட்டிங்’’ என்றேன்.

‘பாலிண்ட்ரோம் (Palindrome)’ என்றால் வலம் இடமாகவும், இடம் வலமாகவும் ஒரே வடிவமுள்ள வாக்கியம்… ‘மாலா போலாமா?’, ‘தேரு வருதே’ போல! ‘தமிழ்ல நீளமான பாலிண்ட்ரோம் இருக்கிறதா, சொல்லு! பெரிய எழுத்தாளன் நீ’’ என்றார் கண் சிமிட்டி.

‘‘திருஞான சம்பந்தர் ‘மாலை மாற்று’னு ஒரு பதிகமே அமைச்சிருக்கார்.

“யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா’’ என்றேன்.

‘‘என்ன அர்த்தம்?’’

‘‘சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால், பொருந்துமா? நீ ஒருவனே கடவுள் என்றால், பொருந்தும். ஆம் ஆம்!’’

‘‘அப்டிங்கறே?’’

‘‘ஆமாமா, அப்படித் தான்! சரி, நீங்க ஏதாவது சொல்லுங்க!’’

‘‘எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இங்கிலீஷ்லன்னா இருக்கு! இதுவரைக்கும் 776 சேர்த்திருக்கேன். நீ சொன்னது ரொம்பச் சிக்கல். நான் இங்கிலீஷ்ல இருக்கிற மாதிரி கொஞ்சம் சிம்பிளா எதிர்பார்த்தேன்.’’

என்று சொல்லி கிளம்பிவிட்டார்.

May be an image of 1 person and sitting

2 Comments on “தமிழில் நீளமான பாலிண்ட்ரோம் (Palindrome) – சுஜாதா”

Comments are closed.