நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி மறைந்தார்/எம் டி  முத்துக்குமாரசாமி 

நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்தவுடனயே இன்று காலை இருந்த உற்சாக மனநிலை சட்டென்று வடிந்துவிட்டது. கைகளும் கால்களும் குழையாடிப்போய்விட்டன. 1985-இல் சக்ஸை முதன்முதலில் பிஹெச்டி ஆய்வு மாணவனாக ‘தமிழ் சினிமாவும் குறியியலும்’ என்ற தலைப்பில் என் படிப்பை ஆரம்பித்தபோது சந்தித்தேன். சக்ஸ் தன் எம்ஃபில் ஆய்வை விட்கன்ஸ்டைனைப் பற்றி எழுதியிருந்தார். அவருக்கு தத்துவம் உளவியல் ஆகியவற்றில் ஆழ்ந்த படிப்பும், அதை விளக்கிச் சொல்லக்கூடிய மேதமையும் இருந்தது. அவர் லக்கானிய உளவியலுக்குள் முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்தபின் அவருடைய சிந்தனை அபாரமாகத் துலங்கியது. அவரிடமிருந்துதான் நான் லக்கானிய உளப்பகுப்பாய்வின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டேன். சக்ஸ் எஸ்விஆர் நடத்திய ‘இனி’ இதழில் auteur கோட்பாட்டின்படி பாரதிராஜாவை ஒரு முக்கிய படைப்பாளி என்று சொல்லும் கட்டுரையை எழுதியபோது நான் அதை மறுத்து எழுதினேன். அந்த வாதப் பிரதிவாதங்களை சக்ஸ் முப்ப்து வருடங்களுக்கும் மேலாகவும் தொடர்ந்து விசாரித்துக்கொண்டேயிருந்தார். சென்னை ஃபிலிம் சொசைட்டியில் வெர்னர் ஹெர்சாக்கின் ஃபிட்ஸ்காரால்டோ படத்தையும் காஸ்ண்டாகிஸின் சோர்பா தி கிரீக் நாவலையும் ஒப்பிட்டு நானும் அவரும் மணிக்கணக்கில் உரையாடிய நாட்கள் மறக்கமுடியாதவை. சக்ஸ், பிரீதம் தம்பதியினரின் இரண்டாவது மகள் சம்யுக்தாவை அப்போதுதான் பிறந்த குழந்தையாக பார்த்ததிலிருந்து சக்ஸ் வீட்டில் நண்பர்கள் கூடுகையில் நிகழ்ந்த உரையாடல்கள் வரை எத்தனையோ சம்பவங்களும் உரையாடல்களும் நினைவுக்கு வருகின்றன. சக்ஸிடம் ஆழ்ந்த படிப்பும், நிறைந்த மேதமையும் இருந்தது. கருத்துகளுக்காக மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சண்டைபோடக்கூடியவர் என்ற பெயரையும் சம்பாதித்து வைத்திருந்தார். சக்ஸிடம் பெருந்தன்மையும் வெள்ளந்தியான மனமும் இருந்தது அதுவே அவரை மிகவும் நேசத்திற்குரியவராக நண்பர்களிடத்து வைத்திருந்தது என்று இப்போது தோன்றுகிறது. பிரீதம், மாளவிகா, சம்யுக்தா ஆகியோருக்கு இந்தத் துயரைத் தாங்கும் பலம் கிடைக்கட்டும் என்று வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? போய்வாருங்கள் சக்ஸ்.