இருளும் ஒளியும் /ஸரோஜா ராமமூர்த்தி

  1. அவளுக்கு அவ்வளவு சுதந்தரமா?

பிள்ளை வீட்டார் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த வீட்டுச் சாப்பிடும் கூடத்தில் ஒரே இரைச்சலும், சிரிப்புமாக இருந்தது. எப்பொழுதும் பிறருடைய குற்றங் குறைகளையே சிலர் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். தங்களிடம் இருக்கும் ஒரு சிறு குறைகூட அவர்கள் மனதில் படுவதில்லை.
“ஆமாம், என்ன பிரமாதமாக வீடு கட்டிவிட்டான்? முக்கால் அடிச் சுவர் வைத்து சேற்றைப் பூசி ஒழுங்கு பண்ணி விட்டானாக்கும்” என்று வாடகை வீட்டில் இருந்து கொண்டே வீடு கட்டுகிறவர்களைப் பழிக்கும் சுபாவமுடையவர்களை நாம் தினமும் சந்திக்கிறோம். எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் பிறரைப் பழிக்கும் சுபாவம் உடையவள் சாவித்திரி. எவ்வளவோ அருமையுடன் வளர்க்கும் பெற்றோரிடமே அவளுக்குக் குறை உண்டு. அன்றும் வழக்கம்போல் சாப்பிட்டுக் கொண்டே ஆரம்பித்தாள் சாவித்திரி :
“நானுந்தான் பார்க்கிறேன். அந்தப் பெண் ஸரஸ்வதிக்கு என்ன அவர்கள் வீட்டில் அவ்வளவு சுதந்தரம்? வெட்கம் இல்லாமல் காலைச் சாய்த்துக்கொண்டு இவள் பெண் பார்க்க வரவில்லை என்று யார் அடித்தார்கள்?”
“ஆமாண்டி அம்மா, நானும் கவனித்தேன். ‘அத்தான், அத்தான்’ என்று வயசுவந்த பிள்ளையோடு என்ன குலாவல் வேண்டி இருக்கிறதோ!” என்றாள் பாட்டி. சாதாரணமாக ஏதாவது அகப் பட்டால்கூட கண், காது, மூக்கு வைத்துப் பேசுபவள் ஆயிற்றே பாட்டி? பேத்தியிடம் அதிக வாஞ்சை கொண்டவள் அவள். இந்த விஷயத்தில் மங்களத்துக்கும், பாட்டிக்கும் பல தகராறுகளும், சண்டைகளும் கிளம்புவது அந்த வீட்டில் சர்வ சகஜம்.
“சிறு குழந்தை மாதிரி உனக்கு யார் பேரிலாவது ஏதாவது சொல்லிக் கொண்டே யிருக்க வேண்டும். இந்த புத்தியை விட்டு விடு, சாவித்திரி!” என்று சந்துரு அதட்டிக் கூறி அவளைக் கண்டித்தான்.
“என்னடா அப்பா, அப்படிச் சொல்லிவிட்டேன்? நீ பிரமாதமாக அவளுக்குப் பரிந்துகொண்டு கிளம்புகிறாயோ” என்று வெடுக்கென்று கேட்டு அவனைப் பொசுக்கிவிடுவது போல் நிமிர்ந்து பார்த்தாள் சாவித்திரி.
“கிளம்புகிறது என்ன? உள்ளதைச் சொன்னால் உனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே! பிறருடைய குறைகளைப்பற்றியே நீ பேசிக்கொண்டிருந்தால் உன்னிடம் எவ்வளவு குறைகள் இருக்கின் றன என்பதை உனக்கு ஆராய்வதற்கே பொழுது இல்லாமல் போய்விடும்: இனிமேல் உன் கல்யாணத்துக்கு அப்புறம் நீயும், ஸரஸ்வதியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டியவர்கள். இருவரும் ஒருவர் மனதை ஒருவர் அறிந்து பழக வேண்டியவர்கள். அப்படியில்லாமல் சண்டை பிடித்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்குமா, சாவித்திரி?” என்று இதுவரையில் மெள்னமாக இருந்த ராஜமையர், பெண்ணை அன்புடன் கடிந்து கொண்டார். அதிக அவசியம் நேர்ந்தாலன்றி அவர் பேசமாட்டார். தாய்க்கும், தம் மனைவிக்கும் ஏற்படும் மனஸ்தாபங்களைக்கூட அவர் காதில் போட்டுக் கொள்வதில்லையே!
ஒரு குடும்பத்தில் எஜமானனுடைய நிலைமைதான் மிகவும் பரிதாபமானது. ஏனெனில், மாமியார் – மருமகள் சண்டையில் யாருக்குச் சமாதானம் கூறுவது என்பது மிகவும் கடினமான பிரச்னை. “பெற்று வளர்த்து நான் கஷ்டப்பட்டது எனக்கல்லவா தெரியும்? நேற்று வந்தவள் வைத்தது ‘சட்டமாகி விட்டது. இந்த வீட்டில்’ என்பாள் மாமியார். – “அன்பும் ஆதரவும் வேண்டுமென்று பெற்றோர், உற்றோரை எல்லாம் விட்டுவிட்டு இவரே கதி என்று வந்திருக்கிறேனே; என் மனசை ஏன் இப்படிப் புண்ணாக அடிக்கிறார்கள்?” என்பாள் மருமகள். பெற்ற தாயும், வாழ்க்கைத் துணைவியும் குடும்பத் தலைவனது அன்புக்குப் பாத்திரமானவர்கள். இது கடினமான – பிரச்னை தானே?
நாளடைவில் பாட்டியின் சண்டை – சச்சரவுகள் சகஜமாகி விட்டன. மங்களத்தின் மனம் மறத்துப் போய்விட்டது. இரண்டு வேளை சாப்பாடு ஜீரணமாகிறமாதிரி மாமியாரின் கடுஞ் சொற்களையும் ஜீரணித்துக்கொண்டாள் மங்களம். தாய்க்கு ஏற்பட்டிருந்த சகிப்புத் தன்மையில் ஓர் அணு அளவு கூட சாவித்திரிக்கு இல்லை. அவள் குழந்தைப் பருவத்தில் பாட்டியும், அம்மாவும் சண்டை பிடித்துக் கொண்டதெல்லாம் பசுமரத்தாணி போல் சாவித்திரியின் மனதில் பதிந்து போயிருந்தது. பாட்டி, அம்மாவை ஓட ஓட விரட்டியமாதிரி தானும் விரட்டினாள். எடுத்த்தெற்கெல்லாம் ‘ஹடம்’ பிடித்தாள். அதைப் பாட்டியின் சலுசையால் சாதித்துக்கொண்டாள்.
ராஜமையர் சாவித்திரியைக் கடிந்து கொண்ட பிறகு சிறிது நேரம் எல்லோரும் மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சாவித்திரிக்குக் கோபம் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டிருந்தார்கள். ‘கடு கடு’ வென்று முகத்தை வைத்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் அவள் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்த சீதா, “யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எனக்கு ஸரஸ்வதியை ரொம்பவும் பிடிக்கிறது. சிரித்துச் சிரித்துக் கபடம் இல்லாமல் பேசுகிறாளே” என்றாள்.
”உனக்கு யாரைத்தான் பிடிக்காது? எல்லோரையும் பிடிக்கும்!” என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டுச் சாப்பிடும் தாலத்தை ‘நக்’ கென்று நகர்த்திக்கொண்டே அவ்விடம்விட்டு எழுந்தாள் சாவித்திரி.
இதுவரையில் இவர்கள் சச்சரவில் தலையிடாமல் இருந்த மங்களம் சலிப்புடன், “என்ன சண்டை இது, சாப்பிடுகிற வேளையில்? அரட்டை அடிக்காமல் ஒரு நாளாவது சாப்பிடுகிறீர்களா?” என்று கோபித்துக்கொண்டாள். அதற்குமேல் எல்லோரும் கப்சிப்பென்று அடங்கிவிட்டார்கள்.
ராஜமையர் வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவியபடி சமையற்கட்டில் வந்து மங்களத்தின் எதிரில் உட்கார்ந்து கொண்டார். சிறிது பொறுத்து, ”வர வர உனக்கு என்னைக் கவனிக்கவே அவகாசம் இல்லாமல் போய்விட்டது மங்களம்! சாப்பிட்டு கை அலம்புகிறதற்கு முன்னாடியே தயாராக வெற்றிலை மடித்து வைத்துக்கொண்டு காமரா அறையில் வந்து நிற்பாயே. இப்பொழுது என்னடாவென்றால் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு மூன்றையும் தேடி நானே எடுத்துப் போட்டுக்கொண்டு உனக்கும் தட்டில் வைத்துக்கொண்டு வந்து கொடுக்க வேண்டியிருக்கிறது” என்று பாதி நிஷ்டுரமாகவும் பாதி கேலியாகவும் கூறினார்.
மங்களமும் பொய்க்கோபத்துடன் அவரைப் பார்த்து, “நாளைக்கே மாப்பிள்ளை வரப்போகிறான். பிறகு நாட்டுப் பெண் வருவாள். இன்னும் உங்களுக்கு நான் நடுங்க வேண்டாமா? நடுங்கிச் செத்ததெல்லாம் போதாதா?” என்று கேட்டாள்.
“பார்த்தாயா மங்களம், அப்பொழுதே சொல்லவேண்டும் என்று இருந்தேன். குழந்தைகள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஏகப் பட்டதாகத் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிரில் பேசவேண்டாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். பிள்ளைக்கும், அவனைச் சேர்ந்தவர்களுக்கும் சாவித்திரியை மிகவும் பிடித்து விட்டதாம். என் பெண்ணின் சம்மதத்தைக் கேட்டுவிடு” என்றார் ராஜமையர்.
மங்களத்துக்கு இப்பொழுது நிஜமாகவே கோபம் வந்தது. “சின்ன வயசிலிருந்தே செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டீர்கள் உங்கள் பெண்ணை! நான் என்ன கேட்கிறது அவளை? அவள் ஏதாவது என்னை மதித்துப் பதில் சொல்லுவாளா? நீங்களே கேளுங்கள். முதலில் அவளுக்குப் பிடித்தாகவேண்டும். அப்புறம் உங்கள் அம்மாவுக்குப் பிடிக்கவேண்டும் ….”
மங்களம் இந்த வார்த்தைகளை உரக்கவே சொன்னாள். பாட்டியோ பலகாரமெல்லாம் முடிந்து கூடத்தில் ஊஞ்சலில் படுத்து அரைத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆகவே மாமியாரைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் நிஷ்டுரமாகப் பேச முடிந்தது.
“”நம் காலத்தைப்போல் இல்லையே. பெண் பார்ப்பதற்குப் பிள்ளை வீட்டார் போவார்களே தவிர, பிள்ளையை அவ்வளவாக அழைத்துப்போகும் வழக்கம் இருந்ததில்லை. பெரியவர்கள் பார்த்துச் செய்துவைத்த கல்யாணங்களில் நூற்றில் தொண்ணூறு அழகாகவே அமைந்தன. பிள்ளைக்குப் பதினைந்து வயசும் பெண்ணுக்கு ஒன்பது வயசும் என்று பார்த்துச்செய்த கல்யாணங்களில் எழுபது வயசுவரையில் தம்பதிகள் அன்யோன்யமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் மனசுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஆயிரம் தடவை பெண், பிள்ளை சம்மதத்தைக் கேட்டு நடத்தும் கல்யாணம் நூற்றுக்குத் தொண்ணூறில் ‘நான், நீ’ என்ற சச்சரவுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள்” என்று ராஜமையர் கூறினார்.
அப்பொழுது சமையலறைப் பக்கம் வந்த சந்துரு தாயைப் பார்த்து, ‘ஏன் அம்மா! நீ அப்பாவை முதலில் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாயா?” என்று விஷமச் சிரிப்புடன் கேட்டான்.
”ஏண்டா, எனக்கென்ன குறைச்சல்? பாட்டி காதில் விழுந்தால் உனக்குப் பிடித்திருக்கிற சனியை விடுவித்து விடுவாளே! கறுப்பாக இருக்கிறேன் என்றுதானேடா கேலி செய்கிறாய்? ‘ யானை கறுத்தால் ஆயிரம் பொன்’ என்று சொல்லுவார்கள். ஆண்பிள்ளை எப்படி இருந்தால் என்ன? புருஷ காம்பீர்யம் என்பது ஒன்று இருந்தால் போதும்” என்றார் ராஜமையர்.
மங்களம் முகத்தைத் தோளில் இடித்துக்கொண்டு, “போகிறது. அந்த மட்டும் பழமொழியைச் சொல்லியாவது ஆறுதல் அடைகிறீர்களே! பிள்ளையும், பெண்களும் என் நிறத்தைக் கொள்ளாமல் இருந்திருந்தால் உங்கள் பெண்களுக்கு வரன் தேட காலுக்கு விளக்கெண்ணெய்தான் போட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள்!” என்று ஒரு போடு போட்டாள்.
“அதான் நான் கறுப்பு என்று அந்த நாளில் உன் வீட்டார் என்னைக் கொஞ்சமாகவா ஏசினார்கள்? உன் அத்தை கூட, ‘பலாச்சுளை மீது ஈ உட்கார்ந்தமாதிரி’ என்று எனக்கும், உனக்கும் ‘பச்சை’ பூசும்போது பந்தலிலேயே சொல்லவில்லையா மங்களம்?”

“ஐயோ! எனக்கு நாழிகை ஆகிறது. தடி தடியாய் அததுகள் தின்றுவிட்டு ரேடியோ கேட்கப் போய்விட்டதுகளே. போதாக்குறைக்கு நீங்கள் வேறே எதையாவது பேசிக் கொண்டு!” என்று கூறிவிட்டு மங்களம் அடுக்களையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள் .

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும் – விருட்சம் நாளிதழ்

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும் – விருட்சம் நாளிதழ்

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும் – விருட்சம் நாளிதழ்

One Comment on “இருளும் ஒளியும் /ஸரோஜா ராமமூர்த்தி”

Comments are closed.