
18 – 9. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 2
நீங்கள் காத்திருங்கள்
யாருக்காகவாவது
யார் தயவுக்காகவாவது?
உங்கள் வசம்
உங்களிடம் இல்லையா?
நீங்கள் காத்திருப்பது உங்களுக்காகத்தான்
ஆனால் நீங்களோ
யார் வரவிற்காகவோ
காத்திருப்பதுபோல பாவனை செய்வது ஏன்?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
யாருக்காக நீங்கள்
ஏன் காத்திருக்க வேண்டும்?
உங்கள் காரியம் ஆக
வேண்டுமென்பதற்காகத்தான்
வெண்சங்கு கழுத்துடன்
பறந்த வண்ணம் கருடப் பறவைகள்
மீன் இரைக்காகக் குளத்தில் காத்திருக்க
ஆனால் நான் கருடப் பறவைகளை
ஒட்டுமொத்தமாய் மிக அருகில் பார்த்த
அந்தக் கணம் இனிமேல் வாழ்வில்
நடக்காதென்று
சந்தோஷத்தில் காத்திருந்தேன்
உண்மையில் யாருக்காகவும்
யாரும் காத்திருக்கவில்லை
குட்டிப் பல்லியொன்று
தினமும் அதன் அழகை ரஸிப்பேன்
துள்ளித் துள்ளி ஈயைப் பிடிக்க
உணவருந்தும் மேசைமேல் வரும்
ஈக்காகக் காத்திருக்க
நானோ அதைக்கண்டு காத்திருப்பதாய்த்
தோன்றும்
என்னைக் கண்டு கொண்டதால்
விரட்டினால் ஒளிந்து கொள்ளும்
சிறிது காத்திருத்தலுக்குப் பிறகு
தலை எட்டிப் பார்க்கும்
இப்படித்தான்
யாருக்காகவும் யாரும் காத்திருக்கவில்லை

One Comment on “அழகியசிங்கர்/காத்திருத்தல்”
Comments are closed.