
விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த ஐந்தாவது கவிதை கவிதை எண்:5
இங்கேயே இருந்துவிடவா
எனக் கேட்கிறேன்
குலதெய்வம் கோயில்
விபூதியை நெற்றியில் இட்டு
ஊதுகிறாய்
வயிற்றுப் பிழைப்புக்காக
வீட்டைப் பிரிகிறேன்
அவள் கழுத்தில் தொங்கும்
மஞ்சள் கயிறு
எனது இயலாமையின் வெளிப்பாடு
பஞ்சத்தில் அடிபட்டது போல்
பிள்ளைகள் படுத்துக் கிடக்கின்றன
நைந்த புடவையின்
முந்தானையால்
கண்ணீரைத் துடைத்து விடுகிறாய்
வெள்ளிக் கொலுசை
காகித பொட்டலத்தில்
மடித்து கைகளில்
திணிக்கிறாய்
வாழ்க்கை கடல்
எங்கு நம்மை கரை சேர்க்கும்
எனத் தெரியாமல்
பேருந்தில்
மொழி தெரியா ஊருக்கு
பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

One Comment on “ப.மதியழகன்/பிழைப்பு”
Comments are closed.