வேஷம்/தி சோ வேணுகோபாலன்

பலவிதம்; பலநிறம்;
அபசுரம்; லயப்புயல்;
கூத்தாடும் அரங்கம்;
பேய்கள்.

மந்திரக் கோல்
தந்திரப் பாதை
காட்டி
மௌனச் சொற்கள்
விழிக் கதவிடித்துக் காத்திருக்கும்
கருத்தைக் கவர
………….
உடல்
மனம்
அறிவு
இவை
அச்சக் காலில் ஈரக் களிமண்ணாய்க்
குழைய
…………
திரையிட்டு-
தென்றல் ஓவியம் தீட்டிய –
திரையிட்டு,
மின் விசை
துண்டித்து.
மைக்” மென்னி
முறித்து.
இருள், நிசப்தம்
இவைதான் மெய்யெனக்
காட்டும் பணியில்
காலமெல்லாம் செலவாச்சு!
எஜமானத் தொழிலுக்கு எழுதிப்போட்டு
எடுபிடி ஆளாய்
புழுதி பரப்பினேன் !
போட்ட வெண்ணுடுப்பும்
பித்தளை வில்லையும்
பார்ப்பவர் கண்ணைப் பறிப்பதாய் நம்பி
நடந்தேன் நிமிர்ந்து !

தென்றல் ஓவியம்
திடீரென உயிர்த்துத்
திரை விலக்க
எவனோ குறும்பன்
மின் விசை தட்ட
”மைக்” புனர்ஜன்மம்
எடுத்துச் சிரிக்க
……………
வெண்ணுடுப்பு, வில்லை, வதனம்
கறுப்பு!

மதிப்பு-2/தி சோ வேணுகோபாலன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)