கன்கார்டியாவில் ராஜசேகரனைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது கண்ணாடிக் கதவு அருகில் பெட்டி மேல் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
“ஹாய், ஆர் யூ ஷங்கர்?”
நான் வியப்புடன் அவளைப் பார்த்தேன். கனடாவில் இருந்தாலும், ஒரு பெண், அதுவும் இந்தியப் பெண் அத்தனைக் கிட்டத்தில் என்னைத் தேடி வந்ததில்லை.
“நான் சூர்ய பிரகாஷின் தங்கை மிஸ் விபா நாராயண்.”
“ஹாய்” என்றேன்.
பிரமிப்பாகத்தான் இருந்தது. சூர்ய பிரகாஷுக்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறதாக எனக்குத் தெரியவே தெரியாது. “என்ன விஷயம்” என்றேன்.
“அண்ணா போன் பண்ணவில்லை?”
“இல்லையே என்ன விஷயம்?”
“டிக்கெட் ரிஸர்வேஷன் செய்யவேண்டும் என்று போன் பண்ணவில்லை? என்ன ஒரு அண்ணன்! நான் புறப்பட்டதுமே என்னை மறந்துவிட்டானா?”
“போன் பண்ணியிருப்பான். நான் வீட்டிலும் இல்லை, யூனிவர்ஸிட்டியிலும் இல்லை. காம்பஸ் போயிருந்தேன்.”
“என்னை இப்படி வாசலியே வைத்துக் கேள்விகள் கேட்பதாக உத்தேசமா?”
“ஸாரி ஸாரி” என்று செக்யூரிட்டிற்கு இண்டர்காமில் தெரிவிக்கக் கதவு திறந்து கொள்ள லிஃப்ட்டில் ஒரு சீனக் குழந்தையைப் பார்த்துக் கன்னத்தில் தடவினாள்.
“ஷங்கர் நான் கட்டாயம் இந்தியா போயாக வேண்டும். என் சினேகிதி நான் போகவில்லையெனில் கல்யாணமே பண்ணிக் கொள்ள மறுத்துவிடுவாள். அழுதே தீர்த்துவிடுவாள். நீங்கள் என் பேச்சைவிட என்னைத்தான் கவனிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.”
நான் திடுக்கிட்டு கொஞ்சம் அசடுவழிந்தேன். எட்டாவது மாடியில் சீனக்குழந்தை விடைபெற்றுக் கொள்வதைக் கவனிக்காமல் அவளை மறுபடி பார்த்தேன். சூரியபிரகாஷின் காட்டுத்தனமான கரடுமுரடான முகத்துக்குச் சம்பந்தமே சொல்ல முடியாமல் ஒரு ஜெனட்டிக் ஆச்சரியம். மென்மையாக, பளபளப்பாக விளம்பரப் பெண் போல இருந்தாள். ஃபூ என்று ஊதினால் வலிக்கும். வெயில் ஒரு சில பகுதிகளில்தான் பட்டிருக்கும்போலத் தோன்றியது. ஒளிரும் பச்சை கலந்த நீலத்தில் டிரெஸ் அணிந்திருந்தாள். அது அவள் மென்மையான மார்பைக் காட்டவில்லை. இறுக்கி யிருந்த நாடாவால் இடுப்பு கைக்குள் அகப்பட்டுவிடும். அழகான முகம் என்று சொல்ல முடியாது. இருந்தும் பொருத்தமான உடையும் அளவான ஒப்பனையும் இளமையும். உயரமும், பேசுகிற பாணியும் ஒரு நிமிஷத்தில் அவளைக் காதலிக்கத் தூண்டின.
“பிளேன் பிடிக்கும்வரை உங்களுடன்தான் தங்க வேண்டும். நன்றாக சமைப்பீர்களாம். சூர்யா சொன்னான்.”
நான் என் அறையில் இருக்கும் களேபரத்தை மனதில் கொண்டு சற்று முன்னமேயே தாவி ஓட எண்ணி அவள் கைப் பெட்டியை எடுக்கப் போக, அவளும் அதை எடுக்க முயற்சிக்க, இரண்டு பேரும் முட்டிக்கொண்டோம். தலையைத்
>>