அந்த தெருக்கோடி பிள்ளையார் கோவிலுக்கு அன்றைக்குக் காலையில் பூசாரி வந்தபோது, சுவர் முழுவதும் குங்கும தீற்றல். வழக்கமாக அங்குப் படுத்திருக்கும் அந்த ஊமை பிச்சைக்காரி, அன்று அரைகுறை உடையோடு இருக்க, அவள் கைகள் முழுவதும் குங்குமக் கறையோடு மயங்கிக் கிடந்தாள். பூசாரி சொன்னதன் பேரில் அந்தத் தெரு பெண்கள் வந்து அவளுக்கு மாற்றுடை அளித்து, சைகை மொழியில் விசாரித்தனர். நடு இரவில் ஒரு காமுகனால் அவள் சீரழிக்கப்பட்டதாகத் தெரிவித்தாள். காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்ட, காவலரும் வந்து சுற்றிலும் பார்த்துவிட்டு, “இங்கேயும் கணபதியா?” என்றார். “ஏன்?” ஒருத்தி கேட்க, காவலர் பதில் சொன்னார். “வரும் வழியில் மெயின் ரோட்டில ஒரு ரவுடி ரத்த வெள்ளத்தில் கிடந்தான். நான் கூட மூதல்ல ரவுடிகளுக்குள்ள வெட்டு, குத்தா இருக்குமென்று நினைச்சேன்” “பிறகு?” “அவனை யாரோ ஒரு லாரிக்காரன் அடிச்சிட்டு போயிட்டானாம். லாரி நம்பர் யாரும் கவனிக்கலையாம். ஆனா லாரி மேல கணபதினு பேரு மட்டும் தெரிஞ்சதாம்.” (104 வார்த்தைகள்)
>>